சிறுவர்மணி

மூட அரசனும் முட்டாள் பண்டிதனும்

1st Jan 2022 08:24 PM |  -ந.லெட்சுமி

ADVERTISEMENT

முன்னொரு காலத்தில் சத்தியசீலன் என்றொரு வியாபாரி வாழ்ந்து வந்தான். பெயருக்கு ஏற்ப நேர்மையைப் பின்பற்றி நடந்தான். அவன் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து பெரும் செல்வம் ஈட்டினான். அவ்வாறு ஈட்டிய செல்வத்தை வறியவர்களுக்கு அளித்து மகிழ்ந்தான். அவன் பல ஊர்களுக்கும் பயணம் செய்தமையால் பல மொழிகளையும் அறிந்திருந்தான்.
 ஒரு நாள் அவன் வியாபார நிமித்தமாக வேறொரு ஊருக்குத் தன் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தான். அவ்வூரின் எல்லையில் ஒரு மனிதனின் தலையை மொட்டை அடித்து, ஒருபக்க மீசையை மழித்துவிட்டு கழுதை மேல் அமர வைத்து, படை வீரர்கள் போல் இருந்த சிலர் அழைத்துக்கொண்டு வந்தனர்.
 "வேண்டாம்! இந்தக் கொடுமையை தயவு செய்து இத்துடன் நிறுத்தி விடுங்கள்!' என்று கெஞ்சிக்கொண்டே அறிஞர்கள் சிலர் அவர்கள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தனர். இக்காட்சியைக் கண்ட சத்தியசீலன் மனம் வருந்தினான். படைவீரர்கள் அங்கிருந்து சென்ற பிறகு அவ்வறிஞர் பெருமக்களிடம் சென்று காரணத்தைக் கேட்டான்.
 கழுதையில் அமர வைத்து அவமானப்படுத்தப்பட்ட அந்த மனிதர், "ஐயா! நான் ஒரு புலவன். என் குடும்ப வறுமை காரணமாக மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வரலாம் என அரண்மனைக்குச் சென்றேன். ஆனால், மன்னரின் கூடவே எப்பொழுதும் இருக்கும் பிருங்கி என்னும் முடன் என் பாட்டில் எழுத்துப் பிழை, பொருள் பிழை என்றெல்லாம் குற்றம் கூறி பரிசைப் பெற இயலாமல் தடுத்து விட்டான். "என் பாட்டில் உள்ள குற்றத்தை நீங்கள் நிரூபிக்க முடியுமா?' என்று கேட்டதற்கு, அவன் இவ்வாறு என்னைக் கேவலப்படுத்தி விட்டான்!' என்றார்.
 "இதற்கு மன்னர் ஒன்றும் கூறவில்லையா?'' என்று சத்தியசீலன் கேட்டான். உடனே அறிஞர்களில் ஒருவர், "ஐயா! ஒரு முறை இந்த பிருங்கி, ஆபத்திலிருந்து மன்னர் உயிரைக் காப்பாற்றினான். அன்றிலிருந்து மன்னர் நல்லது, கெட்டதை யோசிக்காமல் அவன் சொல்வதை மட்டுமே கேட்கிறார், நம்புகிறார். இதனால் எங்கள் தேசத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.
 பிருங்கி கவிஞர்களை மட்டம் தட்டுவதற்காக "உங்கள் பாடலில் ஒன்றும் இல்லை! ஆகையால் இந்த இலைச் சுவடியின் எடைக்கு நிகராக ஒரு நாணயத்தை எடுத்துச் செல்லுங்கள்'' என்று கூறுவான். அவன் தனக்குப் பல மொழிகள் தெரியும் என்றும், தான் ஒரு மகா பண்டிதன் எனவும் எங்கள் மன்னரிடம் கூறியுள்ளான்! நாங்கள் எல்லோரும் அவனால் அவமானப்படுத்தப்பட்டவர்கள்தாம்!'' என்று கூறினர்.
 இதைக் கேட்ட சத்தியசீலன், ""புலவர் பெருமக்களே! நான் உங்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன். அதன்படி நீங்கள் எல்லோரும் என்னுடன் ஒத்துழைத்தால் அந்த முட்டாளை நாட்டைவிட்டே வெளியேற்றி விடலாம்' என்றான்.
 அதன்படியே மறுநாள் காலை சத்தியசீலன் தன் தோற்றத்தைப் புலவர் போல் மாற்றிக் கொண்டான். பிருங்கியால் அவமானப்படுத்தப்பட்ட புலவர்கள் அவனுடைய சீடர்கள் போல் வேடமிட்டனர். அவர்கள் அனைவரும் அரண்மனைக்குச் சென்றனர். மன்னருக்கு அருகில் பிருங்கி அமர்ந்திருந்தான்.
 "மன்னா! இவர் காந்தார தேசத்திலிருந்து வந்திருக்கும் பெரும் புலவர்! உங்கள் புகழ் காந்தார தேசம் வரை பரவியுள்ளதால், உங்களை நேரில் கண்டு வாழ்த்திப் பாட இவர் விரும்புகிறார்!'' என்று மாறு வேடமணிந்த புலவர் ஒருவர் கூறினார்.
 உடனே மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்து ஒப்புதல் அளித்தான். சத்தியசீலன் ஏதோ எழுத்துகள் செதுக்கப்பட்டிருந்த கருங்கல் பலகையைக் காட்டினான் . மன்னன், அருகில் இருந்த பிருங்கியிடம், "உமக்குத்தான் பல மொழிகள் தெரியுமே! இதில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது என்று படியுங்கள்!'' என்றான்.
 தான் பேசும் மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் அறியாத பிருங்கி, "மன்னா! நான் படிப்பதைக் காட்டிலும் அந்த மகா பண்டிதர் வாயாலேயே இக்கவிதையைப் படிக்கக் கேட்பது சாலச் சிறந்தது!'' என்று சமாளித்தான்.
 சத்தியசீலன் படிக்கத் தொடங்கினான். "மே ப்ருங்கி ஏக் புத்தூ ஹூம்! முஜ்கோ காம் தியா யே மஹாராஜா பஹூத் படா புத்தூ ஹை!' இப்பொழுது பிருங்கியின் பாடு திண்டாட்டமாகி விட்டது. பாடலின் பொருள் புரியாததால் குறைகாண முடியவில்லை! குறை இருப்பதாகக் கூறினால், பண்டிதர் பேசும் மொழியிலேயே பேச வேண்டும்! அவருக்கோ வேறு மொழி தெரியாது! இது மன்னருக்குத் தெரிந்தால் மிகுந்த அவமானமாகிவிடும்! எனவே, "ஆகா! அருமை... அருமை! இரண்டே வரிகளில் உம் புகழை இவர் பாடியுள்ளார்!'' என்றான்.
 "அதில் பிருங்கி என்று உங்கள் பெயர் ஏன் வருகிறது?'' என்று கேட்டான் அந்த மன்னன்.
 "உங்களால் எனக்கும் பெருமை என எழுதியுள்ளார்'' என்று கூறினார். மாறு வேடமணிந்து வந்த புலவர்கள் "ஓலைச் சுவடியில் எழுதி வந்தால் கிழிந்துவிடும் என்பதனால், கல்வெட்டில் பதித்து வந்துள்ளார் எங்கள் பண்டிதர்! காந்தாரதேசத்து மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தமது பாடலை வடமொழியில் எழுதியுள்ளார்!'' என்று கூறினர்.
 அவர்களை அங்கிருந்து அனுப்பினால் போதும் என்றாகிவிட்டது பிருங்கிக்கு! "இக் கல்வெட்டின் எடைக்கு எடை பொன்னும் பொருளும் அளிக்கலாம்! அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கவிதையை அரண்மனை நுழைவாயிலில் பதிக்க வேண்டும்! நாளை இளவரசியாரின் சுயம்வரத்திற்கு வரும் வேற்று நாட்டு மன்னர்களும், நம் மன்னரின் பெருமையை அறிந்து கொள்ளட்டும்'' என்றான் பிருங்கி.
 அவ்வாறே அந்த முட்டாள் மன்னனும் பரிசளித்தான். பரிசுகளைப் பெற்றுக்கொண்ட சத்தியசீலன் அப்புலவர்களையும் அழைத்துக்கொண்டு தன் இருப்பிடத்திற்கு வந்து அப்பரிசுப் பொருள்களை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தான்.
 மறுநாள் இளவரசியாரின் சுயம்வரத்திற்கு வந்த வேற்று நாட்டு மன்னர்கள் நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டைக் கண்டு திகைத்தனர். சிலர் கைகொட்டிச் சிரித்தனர்; சிலர் தாம் வந்த வழியே திரும்ப முயன்றனர்! இதைக் கண்ட அந்த மன்னன், "ஏன் அனைவரும் அந்தக் கல்வெட்டைக் கண்டு திகைக்கிறீர்கள்? அதில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?'' என்றான்.
 ""பிருங்கியாகிய நான் ஒரு முட்டாள்! எனக்கு வேலை கொடுத்த இந்த மஹாராஜா ஒரு மிகப் பெரிய முட்டாள்! என்று எழுதியிருக்கிறது'' என்று அதற்கு விளக்கம் கூறினர். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அரசன் "போயும் போயும் இதற்குப் பெருஞ்செல்வத்தைப் பரிசாக அளித்து இழந்தோமே?' என்று வருந்தினான். உடனே பிருங்கிக்கு நூறு கசையடி கொடுத்து ஊரை விட்டே விரட்டுமாறு கட்டளையிட்டான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT