சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்! மென்மையானவன் - மோதகவல்லி மரம்

1st Jan 2022 08:20 PM

ADVERTISEMENT

குழந்தைகளே நலமா?
நான்தான் மோதகவல்லி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "டெரிகோடா அலாடா' என்பதாகும். எனக்குக் கொழுக்கட்டை மரம், ஆனைத்தொண்டி மரம் என்ற வேறு பெயர்களும் இருக்கு. நான் "ஸ்டெர் கலிய சீயே' குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் கிழக்கு இமயமலைப் பகுதி, அஸ்ஸாம் மற்றும் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில், அந்தமான் தீவில் அதிகமாகக் காணப்படுகிறேன். நான் வறண்ட பகுதிகளிலும் வளருவேன்.
நான் மூன்று மீட்டர் சுற்றளவுடன் 45 மீட்டர் உயரத்தில் ஓங்கி வளர்ந்து உங்களுக்குப் பலன்கள் பல கொடுப்பேன். நான் மிகவும் மென்மையானவன் என்பதால், என்னை எளிதில் அறுத்து உங்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்து மர வேலைகளுக்கும் (கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி, விளையாட்டு மர பொம்மைகள்) பயன்படுத்தலாம். ஆனால் குழந்தைகளே, என்னை பூச்சிகள், பூசானங்கள், கரையான்கள் எளிதில் தாக்கும் என்பதால், அவை என்னை அண்டாமல் காக்க வேண்டும். என் வெப்பத்திறன் 5160 கலோரிகள் என்பதால், நான் அடுப்பெரிக்கவும் உதவுவேன். 
நான் வறட்சிக் காலத்தில் தழைகளை உதிர்த்து மண்ணுக்கு மேலும் உரம் சேர்ப்பேன். என் இலை சிறந்த மருத்துவப் பலன் கொண்டது. என் இலைகளை மிளகுடன் சேர்த்து அரைத்து, வீக்கங்கள் மீது தடவினால் அவை இருந்த இடம் தெரியாது. அது மட்டுமல்ல, என் இலைகளை வெந்நீரிலிட்டு காய்ச்சிக் குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் குணமாகும். நான் பெரிய மரமாக வளரும் ஆற்றலுடையவன் என்பதால், என்னை சாலை ஓரங்களிலும், குளம், கால்வாய்க் கரைகள், பூங்காக்கள், மண் அரிமானம் ஏற்படும் ஆற்றுக் கரைகள் ஆகிய இடங்களில் நட்டு வளர்த்தால் உங்களுக்கு நிழல் தந்து காப்பதோடு, சுற்றுச் சூழலையும் பாதுகாத்து, மண்ணரிப்பையும் தடுப்பேன். 
குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமல்லவா? இயற்கையின் சமநிலை, பல்லுயிர்த் தன்மைகளுக்கு பாதிப்பு நேர்ந்தால் பலவிதமான இடர்பாடுகளை மனிதன் சந்திக்க வேண்டுமென்று. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டை நான் சொல்லட்டுமா? கரோனா தீநுண்மியால் நீங்க இப்போ பாதிக்கப்பட்டு வருவதுதான். அது இப்போ உருமாறி வெவ்வேறு பெயர்களுடன் உலகை வலம் வருதாமே...
இதைக் கேட்டால் சிரிப்பா இருக்கு. காலம் தவறி மழைப் பொழிதல், மாதம் மும்மாரிப் பொழிந்தாலும் பெரு வெள்ளம், மழைப் பொழிவு குறைதல், புவி வெப்பமயமாதல், கடல் சீற்றம், நில நடுக்கம், பெருவெள்ளம், மண்ணரிப்பு ஏற்படுதல், மண்ணின் ஈரத்தன்மை குறைதல், காற்றின் வேகம் அதிகரித்தல் முதலிய பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் காடுகள் அழிப்புதான் குழந்தைகளே. 
நீங்கள் வெளியிடும் கார்பன்-டை ஆக்சைடை மரங்கள் உட்கொண்டு, நீங்கள் உயிர் வாழ பிராண வாயுவை தந்து உதவுகின்றன. இது உங்களுக்காக இயற்கை தரும் கொடையல்லவா? நாங்கள், சுற்றுபுறத்திலுள்ள அசுத்த காற்றை உள்வாங்கி, உங்களுக்குப் புத்துணச்சி அளிக்கும் புதிய காற்றை வெளியிடுகிறோம். 
குழந்தைகளே, நீங்கள் இதை மட்டும் மறந்துடாதீங்க. இந்தப் பூமி உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. பறவைகள், பூச்சிகள், விலங்குகளுக்கும் சொந்தம் என்பதைக் காட்ட, நாங்கள் அவை உயிர் வாழ உண்ண உணவும், அடைகலமும் கொடுத்து உதவுகிறோம். மரம் வளர்ப்பதால் உங்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலத்தில் மண் அரிப்பைத் தடுக்கிறோம். அதோடு, முக்கியமாக புவி வெப்பமயமாதலை முற்றாகத் தடுக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்ச்சியையும், மழையையும் தருகிறோம். 
நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)
-பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT
ADVERTISEMENT