உலக மக்கள் எல்லோரும்
உவப்பாய் கூடிக் கொண்டாடும்
பலநாள் உண்டு அவற்றுள்ளே
பரிசைப் போன்றதாம் புத்தாண்டு!
கடந்து வந்த ஆண்டுகளில்
கவலைகள் நூறு, இனிமேலே
நடந்து செல்லும் வழியெங்கும்
நல்லன விளைய வேண்டுவமே!
மேகம் மழைதர மண்மகளின்
மேனி செழிக்கும் பல்லுயிரும்
தாகம் தீர்ந்து பெருகுவதால்
தானாய் இயற்கை வளங்கொழிக்கும்!
போரும் பகையும் இல்லாது
பொதுவாய் அமைதி நிலவட்டும்
யாரும் எதற்கும் இடரின்றி
எங்கும் புதுமை உலவட்டும்!
அறிவை, மனதைக் கெடுக்காத
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
செறிவாய் வேண்டும் எங்கணுமே
சீர்பெற மக்கள் வாழ்வதற்கே!
மண்மேல் உணவில் தன்னிறைவும்
மனதில் நிறைவும் கொள்வோமே
விண்வெளிக் கனவுகள் எல்லாமும்
விரைவாய்க் காண்போம் கண்ணெதிரே!
இருபது இருபத்திரண்டு எனச் சொல்லும்
இனிமை வாய்ந்தநம் புத்தாண்டு
ஒருவரும் குறையே கூறாத
உன்னத ஆண்டாய் மலரட்டும்!
சிந்தனை புதிதாய்ப் பிறக்கட்டும்
சிறப்பாய் எண்ணங்கள் உதிக்கட்டும்
வந்தனை கூறி வரவேற்போம்
வந்திடும் நல்ல புத்தாண்டே!
-அ.கருப்பையா