சிறுவர்மணி

ஆரவாரம் கூடாது!

1st Jan 2022 08:14 PM

ADVERTISEMENT

முத்துக்கதை

 காட்டில் குரங்கு ஒன்று துள்ளிக் குதித்தபடி வந்தது. அப்போது எதிரே வந்த கரடி, "ஏய், குரங்கே... எதற்காக இப்படித் துள்ளிக் குதித்துச் செல்கிறாய்? நீ மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிகிறதே...' என்றது.
 "ஆம்... ஒரு புளிய மரத்தில் தேனடை ஒன்றைக் கண்டேன். அதனால் ஏற்பட்டதுதான் இந்த மகிழ்ச்சி. நீயும் வா.. காட்டுகிறேன்'' என்றது குரங்கு.
 இரண்டும் புறப்பட்டன. சிறிது நேரத்தில் கரடியும் குரங்கும் புளியமரத்தை வந்தடைந்தன. மரக்கிளையில் பெரிய தேனடை ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியில் கரடி ஆய்... ஊய்... என்று கூச்சலிட்டுத் துள்ளிக் குதித்தது.
 "ஏய்... கரடியே! ஏன் இப்படிச் சத்தம் போடுகிறாய். தோட்டக்காரன் வந்துவிட்டால் இருவருக்கும் ஆபத்து. நீ அமைதியாக மரத்தடியில் நில்லு. நான் மரத்தில் ஏறி உனக்குத் தேனடையை எடுத்துத் தருகிறேன்'' என்றது குரங்கு.
 ஆனால், அந்தக் கரடி மகிழ்ச்சியில் கூச்சலிடுவதை நிறுத்தவில்லை.
 "அடடா... இந்தக் கரடி போடும் கூச்சலுக்கு யாராவது இங்கே வந்துவிடப் போகிறார்கள். அதற்குள் நாம் பாதுகாப்பாக மரத்தில் ஏறிக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்த குரங்கு, உடனே மரத்தின் உச்சிக்குச் சென்றது.
 சத்தத்தைக் கேட்டு கையில் தடியுடன் வந்த தோட்டக்காரன் கரடியைக் கண்டு திடுக்கிட்டான். "ஓஹோ... தோட்டத்தை அடிக்கடி நாசம் செய்வது நீதானா?'' என்று கரடியை நோக்கிக் கம்பை வீசினான்.
 கம்பு கரடியின் நெற்றிப் பொட்டைப் பதம் பார்த்தது. அதிக மகிழ்ச்சியும், தன்னிலை மறத்தலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைக் கரடி உணர்ந்தது. வலியால் துடித்த கரடி கூச்சலிட்டபடி ஓட்டமெடுத்தது. மரத்தின் மீதிருந்த குரங்கோ அமைதியுடன் தேனடையை எடுத்துச் சாப்பிட்டது.
 அமைதியாக இருப்பவரே சாதிப்பார்கள்; ஆரவாரம் செய்வர்கள் அல்லர்!
 -எஸ்.திருமலை
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT