சிறுவர்மணி

விளையாட்டில் ஜொலிக்கும்..!

18th Dec 2022 06:00 AM | தி.நந்தகுமார்

ADVERTISEMENT

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள முகமது சதக் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 9- ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ரோகித், தடகளப் போட்டியில் பல பரிசுகளைப் பெற்று, இளம் விளையாட்டு வீரராக மின்னிவருகிறார்.

இவரது தந்தை செல்வம் ஆட்டோ ஓட்டுநர். இவரது தாய் சாந்தி குடும்பத் தலைவி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இளம்வயதிலேயே விளையாட்டில் ரோகித் இருந்த ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் ஊக்குவித்தனர். பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சிகளோடு, பயிற்சியாளர்களின் ஊக்குவிப்பால் மாநில, மாவட்ட, மண்டல, பள்ளி அளவிலான போட்டிகளில் ஏராளமான பரிசுகளை ரோகித் வென்றார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த 63-ஆவது (ஆர்.டி.எஸ்.) தடகளப் போட்டியில் சென்னை மாவட்டத்தில் இருந்து ரோகித் பங்கேற்றார்.

இதில், நீளம் தாண்டுதல், 80 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் ஆகியவற்றில் முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றார். இதோடு, தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார். இதையடுத்து, தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கு பெற ரோகித் தகுதி பெற்றார்.

முன்னதாக, சென்னை குறுவட்ட அளவிலான 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் ரன்னராகவும், 80 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும் பிடித்தார். இதேபோல், மண்டல, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பல பரிசுகளையும் வென்றார்.

இதுகுறித்து ரோகித் கூறியதாவது:

""விரைவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தங்கப் பதக்கத்தைப் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

பள்ளிப்படிப்போடு விளையாட்டிலும் கவனம் செலுத்திவருகிறேன். எதிர்காலத்தில் ஓலிம்பிக், காமன்வெல்த் போன்ற உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று, இந்தியாவுக்குப் பெருமைகளைச் சேர்க்க வேண்டும் என்பதே லட்சியம்'' என்றார்.

இதுகுறித்து உடற்கல்வி இயக்குநர் பா.பிரபாகரன் கூறுகையில், ""கல்வியோடு விளையாட்டிலும் ரோகித் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

5-ஆம் வகுப்பு படிக்கும்போதே,8-ஆம் வகுப்பு மாணவர்களுடன் ரோகித் விளையாடி வெற்றி பெறுவார். இடையில் கரோனா காலத்தில் பள்ளிகள் மூடல் காரணமாக, அவரது பயிற்சியில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது அவர் பயிற்சியில் நன்கு சிறந்துவிளங்கிவிட்டார். பள்ளி விளையாட்டுத் திடலிலும், அயனாவரம் ஐ.சி.எஃப். விளையாட்டுத் திடலிலும் தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் 2 மணி நேரம் பயிற்சி அளிக்கிறேன்.

இளம்வயதிலேயே ரோகித் சிறந்துவிளங்குகிறார். எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்வார்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT