சிறுவர்மணி

எதிரியையும் நேசி!

7th Aug 2022 07:07 PM

ADVERTISEMENT

பச்சைப் பசேலென அடர்ந்த புற்களை நன்கு ரசித்து ருசித்து மேய்ந்து கொண்டிருந்தது அந்த மான். திடீரென கீச்... மூச்... என்று சத்தம் கேட்கவே திடுக்கிட்டது. சுற்றும் முற்றும் பார்த்தது. அங்கே புற்களின் அருகே இருந்த புதைகுழி ஒன்றில் ஒரு கரடி சிக்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது.
கரடியைக் கண்ட மான் திடுக்கிட்டது. எப்படியாவது அதைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தது. அருகே மரக்கிளை ஒன்று காணப்பட்டது. அதை வளைத்து கரடியின் கையருகே கொண்டு சென்றது. கிளையின் முனை தரையில் இருக்கும்படி செய்து, அதன்மீது கெட்டியாக அமர்ந்து கொண்டது.
கரடி அந்த மரக்கிளையை பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல புதைக்குழியை விட்டு வெளியே வந்தது. மானின் அருகில் வந்து. "மானே! என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி. ஆனால், இப்போது எனக்கு மிகவும் பசிக்கின்றது. என் பசிக்கு உன்னை இரையாக்கிக் கொள்கிறேன்' என்று மானைக் கொல்வதற்குப் பாய்ந்தது கரடி.
இதைக் கண்டு மான் பயப்படவில்லை."நன்றிகெட்ட கரடியே! மரணத் தருவாயில் இருந்து உன்னை நான் காப்பாற்றினேன்! இப்போது நீ என்னைக் கொல்லப் பாய்கின்றாயே! உன் மீது கொண்ட அன்பினால்தான் உன்னைக் காப்பாற்றினேன். உன்னைக் காப்பாற்றிய பின், நீ உயிரோடு திரும்பி வந்து என்னைப் பிடித்துத் தின்றுவிடுவாய் என்பது எனக்கு முன்பே தெரியும். இருந்தாலும் துன்பப்படுவோரின் துயரங்களைப் போக்குவது காட்டு விலங்காகிய நமது கடமையல்லவா? நான் எனது கடமையைச் செய்து விட்டேன். இனி உனது கடமை எதுவோ அதை நீ செய்! நான் எதற்கும் தயார்தான்'' என்று துணிச்சலுடன் கூறியது மானின் பேச்சு கரடியை சிந்திக்க வைத்தது.
தனது செயலை நினைத்து மனம் வருந்திய கரடி, ""மானே... எதிரியைக்கூட நேசிக்கும் உன் அன்பு எத்தனை உயர்வானது. நான் உன் எதிரி என்பது தெரிந்தும் என்னைக் காப்பாற்றினாயே... உன் நற்குணத்தை என்னவென்று சொல்வேன். இனி நானும் உன்னைப் போலவே என் எதிரிகளையும் நேசிப்பேன்'' என்றது.
அதைக் கேட்டு மகிழ்ந்தது மான்.
- மலரடியான்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT