சிறுவர்மணி

செய்திச் சிட்டு! புன்னகைக்கும் வானவில்!

23rd Apr 2022 06:05 PM | சுமன்

ADVERTISEMENT

தன் அழகான குட்டி இறக்கைகளை படபடவென்று அடித்தபடி வந்தமர்ந்த சிட்டைப் பார்த்ததும் பாலு விசில் அடித்தான்!

"என்ன எல்லோரும் நலம்தானே!....'' என்று கேட்டது சிட்டு.

"ரொம்ப நலமா இருக்கோம்.... நீங்க?'' என்று பிள்ளைகள் கேட்க, அதற்கு சிட்டு, "ஆஹா!....ரொம்ப செளக்கியம்!... நீங்க புன்னகை செய்யும் வானவில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?'' என்று கேட்டது சிட்டு.

"அப்படீன்னா?'' என்று கேட்டான் ராமு.

ADVERTISEMENT

"வானவில் எப்படி உருவாகுது?'' என்று கேட்டது சிட்டு.

"எனக்குத் தெரியும்!...மழைக்காலங்களிலே மேகங்களில் இருக்கும் நீரத்திவலைகள் மீது, பளிச்சென்று இருக்கும் சூரியனின் வெள்ளைக் கதிர்கள் ஊடுருவிப் பாயும். அப்போ சூரியனின் வெள்ளைக் கதிர்கள் பல வண்ணங்களாகப் பிரியும். இதை நிறப்பிரிகைன்னு சொல்லுவாங்க. அப்போ வானத்தில் ஏழு நிறங்களுடன் கூடிய வில் போன்ற அமைப்பு தோன்றும்!'' என்றாள் லீலா.

"சபாஷ்... சரியாச் சொன்னே.... மார்ச் 11 - ஆம் தேதி 2022 - இல் இங்கிலாந்தில் "வார்விக்ஷைர்' என்னுமிடத்தில் ஒரு படகுக் குழாமில் இருந்த "கென் பட்லர்' என்பவர ஆகாயத்தைப் பார்த்தபோது மேல் நோக்கி வளைந்த வானவில்லைப் பார்த்து அதிசயப்பட்டார்! வானில் அந்தக் காட்சியைப் பார்த்த பலரும் குதூகலுமும், உற்சாகமும் அடைந்தனர். கென் பட்லரும் தன் செல்ஃபோனில் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார். காட்சி ஊடகங்களோடு,  நாசாவும் அந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டு  வெளியிட்டது." 

"பிரமாதம்! சூப்பர்!'' என்று பிள்ளைகள் கோரஸாகக் குரல் கொடுத்தனர்.

"அதெப்படி மேல் நோக்கி வளையும் வானவில் ஏற்படுது?'' என்று கேட்டாள் மாலா.

"மிகமிக உயரமான மேகங்களில் இருக்கும் நீர்த்திவலைகள் இறுகி பனிக்கட்டிகளாக ஆகிவிடும்.... நாம கூட ஆலங்கட்டி மழையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கோமே.... அந்த மாதிரி பனிக்கட்டிகள் ஆறு அல்லது அதற்கு மேலும் இருக்கும் கோணங்களில் பட்டைகளோடு இறுகிவிடும். அப்போது சூரிய வெளிச்சம் அவைகளின் மீது பட்டவுடன் வானிலேயே ஒரு வட்ட வடிவமாக நிறப்பிரிகையை ஏற்படுத்தும்! அழகான வட்ட வடிவ வானவில்!... பெரும்பாலும் இந்த மாதிரி நிறப்பிரிகை ஏற்பட்டுப் பிரியும் வானவில்லில் ஒரு பகுதியே தெளிவாகத் தெரியும்!... அதைத்தான் கென் பட்லர் பார்த்திருக்கிறார். பரவசப்பட்டுப் படமும் பிடித்திருக்கிறார்.'' 

"வானவில்லைப் பார்ப்பதே எல்லா வயதினருக்கும் ரொம்ப சந்தோஷமான விஷயம்தானே!'' என்றான் பாலா.

"அதில் என்ன சந்தேகம்! புன்னகையே அழகுதான்!... அதிலும் வானமே புன்னகைக்கும் காட்சி அற்புதமாகத்தான் இருக்கும்!'' என்றான். பாலா.

"இது சாதாரணமா நடக்கக்கூடியதுதான்.... அடர்த்தி குறைந்த மேகங்களால் இந்தக் காட்சி மறைக்கப்படுகிறது.... கண்களுக்குத் தெரியும் வகையில் வானம் மிகமிகத் தெளிவாக,  துல்லியமாக இருக்கும்போது மட்டுமே இந்த மாதிரிக் காட்சிகள் தெளிவாகத் தெரியும்!....'' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT