சிறுவர்மணி

முத்துக்கதை: உதவி

16th Apr 2022 06:00 AM | எம் அசோக்ராஜா

ADVERTISEMENT

ஒரு படகு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் எல்லாவற்றையும் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் படகில் சிறு ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை அடைத்து விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக்கொண்டு சென்றார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்தப் பெயின்டரின் வீடு தேடி வந்து,  அதிக தொகை எழுதிய காசோலையைக் கொடுத்தார். பெயின்டருக்கோ அதிர்ச்சி. "நீங்கள்தான் ஏற்கெனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்?'' என்று கேட்டார். 

அதற்கு உரிமையாளர். "இல்லை... இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு''  என்றார்.

ADVERTISEMENT

"இல்ல சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகையைத் தருவதெல்லாம் நியாயமல்ல... தயவு செய்து காசோலையை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றார் பெயின்டர்.

"நண்பரே... உங்களுக்கு விஷயம் புரியவில்லை. நடந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்'' என்ற படகு உரிமையாளர் தொடர்ந்தார். "நான் உங்களைப் படகுக்குப் பெயின்ட் அடிக்கச் சொல்லும்போது, அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு என்னுடைய பிள்ளைகள் படகை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள். படகில் ஓட்டை இருந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை. நான் வந்து பார்த்தபோது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வர, நான் பதறிப் போனேன்.

ஆனால், என் பிள்ளைகளோ மீன் பிடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் எல்லையே இல்லை. உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் "சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவு பணம் தந்தாலும் ஈடாகாது'' என்றார்.

நீதி:  யாருக்கு, எங்கே, எப்போது, எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT