சிறுவர்மணி

நூல் புதிது

16th Apr 2022 06:00 AM

ADVERTISEMENT

மந்திரக் குடை (சிறார் நாவல்) - ஞா.கலையரசி; பக்.31; ரூ.30; புக் ஃபார் சில்ரன், 7, இலங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 044-24332424, 24332924.
தேவியும் சாதனாவும் தோழிகள். பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மழை வருகிறது. இருவரிடமும் குடை இல்லை. அப்போது வானத்திலிருந்து பல வண்ணத்தில் உள்ள ஒரு குடை அவர்கள் முன்பாக விழுகிறது... இப்படி ஆரம்பிக்கும்  மந்திரக் குடை நாவலில் ஒரு மாயாஜாலமே நடக்கிறது. 

இப்படி நடக்கும் மாயாஜாலத்தின் மூலம் காட்டில் உள்ள ரகசியங்கள், அங்கு வாழும் உயிர்களின் வாழ்க்கை, இயற்கையின் அற்புதம் போன்றவற்றை மிகவும் சுவாரசியாக எடுத்துக் கூறுகிறது இந்த நாவல். 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி - சு.பிரவந்திகா; பக்.96; ரூ.100; லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18; தொடர்பு எண்: 98412 36965.

ADVERTISEMENT

படிக்கும் பருவத்திலேயே கதை சொல்லியாக உருவெடுத்த   சிறுமி பிரவந்திகாவின் புதிய வரவு இந்நூல். தூங்குமூஞ்சி ராஜா, கூட்டாஞ்சோறு, முன்னால் ஓடிய டயர், பூச்சி ராணி யாரு? முத்தரசனும் முகக்கவசமும், நாடகம் பார்க்கலாம் வாங்க முதலிய  12 கதைகள் உள்ளன.

பள்ளி திறந்ததும் முகக்கவசம் போடாமல் பள்ளிக்குப் போக வேண்டும் என நினைத்த முத்தரசனின் அவஸ்தையையும், பாதுகாப்பின் அவசியத்தையும் கூறுகிறது ஒரு கதை.  அரசரைப் பார்த்து புலி  பேசும்  ஒவ்வொரு வார்த்தையும் பசுமரத்து ஆணி. மிக்சர் கேட்ட சுப்பிரமணி காக்கா கதை நினைவை விட்டு அகலாதது. வேகம் விவேகம் அல்ல என்பதை எடுத்துரைக்கும் கதை நல்ல படிப்பினை. இப்படியான கதைகள் அனைத்துக்கும் சிறுவர்களே ஓவியம் வரைந்திருப்பது கூடுதல் சிறப்பு. 

மூணு கண்ண வந்துட்டான் (கதைகள்)- ஹரிவர்ஷ்னி ராஜேஷ்; பக்.96; ரூ.80; மகேஸ்வரி பதிப்பகம, 3/350, கால்நடை மருத்துவமனை பின்புறம், விருதுநகர் -626 001. தொடர்புக்கு: 8526769556.

இந்நூலின் ஆசிரியரும் ஒரு சிறுமிதான். குழந்தைகள் விரும்பும்படியா கதாப்பாத்திரங்களை தம் கதைகளில் உலாவர வைத்திருக்கிறார். பெரியவர்களைவிட தற்போது சிறியவர்கள் தம்மைச் சுற்றி நடப்பதை மிகவும்  உற்று நோக்குகிறார்கள் என்பதை இதிலுள்ள கதைகள் எடுத்துக் கூறுகின்றன.


உனக்கென்ன வந்துச்சு? ஆமையைக் காப்பாற்றியது யாரு?, ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டலாமா? வெள்ளத்தைத் தடுக்கலாம் வாங்க, அலாவுதீன் பூதத்தின் கொள்ளு பேரன்,  தீபன் அப்புடி என்னதான் சாப்புட்டான்?  முதலிய எட்டு கதைகள் உள்ளன.      கொரோனா விழிப்புணர்வு,  சமுதாய அக்கறை,  பிறருக்கு உதவுவது, சுகாதாரத்தின் அவசியம்,  தன்னம்பிக்கை,  கற்பனை, நகைச்சுவை என எல்லாம் இதில் கலந்துள்ளன. இதிலுள்ள கதைகளை "கியூ ஆர்' கோட் மூலம் உடனடியாகக் கேட்டும் மகிழலாம்.

ஞானாபரணம் - ஜெகப்பிரியா; பக்.320; ரூ.200; இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை- 600 060. தொடர்புக்கு: 9381701961/ 9176799961.

நூலின் தலைப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம். இது சிறியோருக்கான நூலும்கூட என்பதை இதிலுள்ள பதிவுகள் கூறுகின்றன. காரணம், சிறியோர்தானே பெரியோர் ஆகிறார்கள்? இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளவற்றை ஐந்து வயதிலிருந்தே குழந்தைகளைப் படிக்கச் சொல்லித் தந்துவிட்டால் போதும், பிறகு  அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

அறிஞர்கள், ஞானிகள், சாதனையாளர்கள், தீர்க்கதரிசிகள், அருளாளர்கள், வெற்றியாளர்கள்  என - அகத்தியர்,  ஆதிசங்கரர்,  அன்னை தெரசா, பரஞ்சோதி முனிவர், ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், பாரதியார், சாரதா தேவியார், சிவானந்தர், வள்ளளார், ரவீந்திரநாத் தாகூர்,  திருவள்ளுவர், ஓஷோ, கலில் ஜிப்ரான், நேரு முதலியோரின் அற்புத வைர வரிகளே படிக்கும் பிள்ளைகளை நற்பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

"இந்த நூல் முழுவதையும் ஒருவர் வாசித்துவிட்டால் அவர் அறிஞராக, தலைவராக, மாபெரும் சாதனையாளராகப் பரிணாமம் பெறுவது உறுதி.  உங்களுக்குள் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள்'' என்கிற பதிப்புரை வாசகம் முற்றிலும் உண்மை.

இதிலுள்ள வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.  எழுதிய 'இளைஞர்கள் எதை வாசிக்க வேண்டும்?' என்கிற கட்டுரையில் அவர் பட்டியலிடும் நூல்களைப் படிக்கவில்லை என்றாலும், இந்தக் கட்டுரைகளை, சிறார்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.  வரலாற்றில் இடம்பிடிக்க இந்த ஞானாபரணத்தைப் படித்தால் போதுமானது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT