சிறுவர்மணி

நூல் புதிது

DIN

பட்டாம்பூச்சி தேவதை (கதைகள்)- கன்னிக்கோவில் இராஜா; பக். 112; ரூ.120; லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18; தொடர்பு எண்: 98412 36965.

இருவர் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களைப் பார்த்து "பூனையும் எலியும் போல இருக்கிறார்கள்' என்பது வழக்கம். ஆனால் இந்த எலிகள் எப்படி பூனையிடம் பயமில்லாமல் கதைகள் கேட்டன... வியப்பாக இருக்கிறதல்லாவா?   தன் பாட்டி மியாவ் சொன்ன ஐடியாவைக் கேட்டு எலிகளுக்குக் கதை சொல்லத் தொடங்கி இறுதியில் பூனை எப்படி மனம் மாறுகிறது என்பதுதான் "பூனையிடம் கதை கேட்ட எலிகள்' கதை.

"எத்தனை முறை அழித்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்குவோம்' என்பதை வண்டுக்கு உணர்த்தி, வண்டை மனமாற்றம் செய்ய வைக்கிறது "பட்டாம்பூச்சி தேவதை' கதை. உண்மையிலேயே நம் மனத் தோட்டத்திலும் தேவதையாகவே வலம் வருகிறது இந்தப் பட்டாம்பூச்சி.

நமது இயல்பான உணவு முறையை மாற்றும்போது நம் உடல் அதை ஏற்க மறுத்து, தேவையில்லாத சிக்கல் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியம் கெடும் என்பதைப் புரிய வைக்கும் "அம்மாவிடம் சொல்லிவிட்டு போ' கதை அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. பாராசூட்டில் பறக்க ஆசைப்பட்ட யானையின் கதை "முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை' என்பதை உணர்த்துகிறது. இதுபோல  புரியாத கிளியக்கா, புலி வருது புலி வருது, இசை மீட்டிய குரங்கு, பானைகளின் நீர்ப் பந்தல், வீடு திரும்பிய அணில், விதை பறப்பிய பறவைகள் முதலிய 12 விதவிதமான, சுவாரசியமான கதைகள் இந்நூலில் உள்ளன.

விரிந்த மொட்டுகள் - (பாடல்கள்) கவிஞர் செம்மை சேவியர்; பக்.53; ரூ.50; வினோத் பதிப்பகம், இ.பி.காலனி, லட்சுமிபுரம், திருநின்றவூர்-602 024.

மாணவச் செல்வங்களுக்காக எளிய, அழகு தமிழில் பாடப்பட்டிருக்கும் இந்நூலில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பிடித்த வாத்து, முயல், நாய்க்குட்டி, காகம், பூனை, பச்சைக்கிளி, நண்டு, மான்குட்டி முதலிய விலங்குகள் பற்றிய பாடல்கள் சுவையானவை.  மாம்பழம், கொய்யாப்பழம் முதலிய பழங்கள் பற்றிய பாடல்கள்கூட 

சாப்பிடுவதைப் போல படிக்கவும் சுவை தருகின்றன. இட்லி, தோசை,  ஆப்பம், இடியாப்பம் என உணவு சம்பந்தப்பட்ட பாடல்களும் படிக்கவும், சுவைக்கவும் இனிமை. 

உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் பற்றி  உள்ள பாடல்கள் படிக்கவும் மனப்பாடம் செய்யவும் எளிமையாக உள்ளன. "உயிரெழுத்துகள்' என்ற பாடல், "அம்மா இங்கே வாங்க/ கொஞ்சிக் கொஞ்சிப் பேசுங்க/ ஆசான் வழியில் நீங்க/ இசையைச் சொல்லித் தாங்க' என்று எளிய தமிழில் அமைந்துள்ளது.

மேலும், "கசடதபற / வல்லெழுத்தாம்/ காகம் கொத்தும் அழகைப்பார்/ ஙஞணநமன/ மெல்லெழுத்தாம்/ பஞ்சு பறக்கும் அழகைப்பார்' என்று மெய்யெழுத்துகள் பற்றிய பாடலும் வெகு சிறப்பு. அதுமட்டுமல்ல... கொட்டம், அண்ணாந்து, முடங்கி, உறுமல், முணக்கம், கதி, கிறங்கி, தாளடி, வனப்பு, குவியிதழ், நறவு முதலிய தமிழ்ச் சொற்களுக்கும் இக்கவிஞர் விளக்கம் தந்துள்ளார்.

வண்ண வண்ண மலர்கள் (மழலையர் பாடல்கள்-முதல் பாகம்)- கவிஞர் நாமக்கல் ராஜா; பக் 24; ரூ.40;  நாமகிரி பதிப்பகம், 579, அண்ணா சாலை, திருவள்ளுவர் குருகுலம் பள்ளி வளாகம், ஜோதியம்மாள் நகர் அருகில், சைதாப்பேட்டை, சென்னை-15. தொடர்பு எண்: 9360334799.

"குழந்தை இலக்கிய ரத்னா' விருது பெற்றவர் இக்கவிஞர். குழந்தைகளுக்கான 21 பாடல்கள் இதில் உள்ளன. நூலின் தலைப்புக்கு ஏற்றபடியே ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு பாடலும் வண்ணப் படங்களுடன் வண்ண மயமான எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கிறது.

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் போற்றும் விதமாக - அம்மா, அப்பா, ஆசிரியர், கடவுள் எனத் தொடங்கி, இந்தியா,  காந்தி, நேரு மாமா, பாரதியார், ஒருமைப்பாடு, அன்பு வழி, தினசரி கடமை, உண்மை, அன்பு, கருணை, நம்பிக்கை, வர்ணஜாலம், சின்னக்கண்ணா எனப் பாடல்கள் அனைத்துமே திகட்டாத தேன்சுவை. இதிலுள்ள பாடல்களை குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே பயிற்றுவித்தால் அவர்கள் மனம் செம்மைப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT