சிறுவர்மணி

பொம்மை!

18th Sep 2021 06:00 AM | வ . விஜயலட்சுமி

ADVERTISEMENT


அந்தப் பொம்மைக்கு அழுகை அழுகையாக வந்தது. இத்தனை நாட்கள் பாப்பாவின் செல்லமாக அவள் கையை விட்டுப் பிரியாமல் இருந்தது. சாப்பிடும்போது மடியிலும், தூங்கும்போது படுக்கையின் பக்கத்தில் இருந்த பொம்மை அது. அதற்கு பாப்பா ஒரு குட்டிச் சீப்பை வைத்துத் தலை சீவி விடுவாள். அம்மாவுக்குத் தெரியாமல் தன்னுடைய பவுடரைப் பூசி பொட்டு வைத்து விடுவாள்.

நேற்றுப் பாப்பாவுக்குப் பிறந்தநாள். நிறைய பேர் வந்திருந்தனர். வீடே கொண்டாட்டமாக இருந்தது. இந்த பொம்மையைக் கையில் எடுக்கக் கூட பாப்பாவுக்கு நேரமில்லை. அனைவரும் புதுப்புது உடைகளும், பொம்மைகளும் வாங்கி வந்து பாப்பாவை வாழ்த்தினர். கேக் வெட்டி, பாட்டுப் பாடி,..... அமர்க்களமாக இருந்தது.

மறுநாள் காலை அம்மாவும் ஒவ்வொரு பரிசுப் பொருள்களாகப் பிரித்துப் பார்த்தனர். அதில் ஒரு பெரிய பார்பி பொம்மை செட் இருந்தது. அதற்கென்று விதவிதமாய் உடைகள், மேக்கப் செட் எல்லாம் இருந்தன. அதைப் பார்த்த பாப்பாவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி!

""ஐ!.... புது பொம்மை!..... புது பொம்மை!.... ' என்று கத்தியபடி அதை எடுத்துக் கட்டி அணைத்து, கொஞ்ச ஆரம்பித்தாள்! குட்டிச் சீப்பை எடுத்துத் தலையை வாரி விட்டாள். உடைகளை மாற்றி மாற்றிப் போட்டு அழகு பார்த்தாள். பழைய பொம்மையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

ADVERTISEMENT

பரிசுப் பொருள்கள் சுற்றி வந்த வண்ணக் காகித உறைக் குப்பையைப் பெருக்கிய வேலைக்கார அம்மாள் பழைய பொம்மையையும் செர்த்து எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டாள். குப்பைக் கூடை விளிம்பில் கைகள் மாட்டிக் கொண்டதால், அந்த பொம்மை குப்பைக் கூடைக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போல் இருந்தது..... பரிதாபமாக இருந்தது. அந்தப் பொம்மைக்கு அழுகை, அழுகையாக வந்தது.

அப்போது வேலைக்கார அம்மாவின் மகள் அம்மாவின் பின்னாலேயே விளையாடிக் கொண்டே வந்தவள், இந்தப் பொம்மையைப் பார்த்து விட்டாள். உடனே குப்பைக் கூடைக்குள் கையை விட்டு அந்தப் பொம்மையை எடுத்தாள்.
""அம்மா,.... அம்மா,... இதை நான் எடுத்துக்கவா?'' என்று தாயைக் கேட்டாள். வேலைக்கார அம்மாள் அச்சத்தோடு தன் முதலாளி அம்மாளைப் பார்த்தாள்.
முதலாளி அம்மாவும் தலையை அசைத்ததோடு முதல்நாள் மீதமாக பிரிட்ஜில் இருந்த கேக், இனிப்பு வகைகள் முதலியவற்றை எடுத்து அந்தக் குழந்தைக்குக் கொடுத்தாள்.

சின்னப் பெண்ணிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! பொம்மைக்கும்தான்! மிக்க மகிழ்ச்சியோடு அந்த மாளிகையிலிருந்து வேலைக்காரப் பெண்மணியின் குடிசைக்குப் புறப்பட்டது!

Tags : siruvarmani Toy!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT