சிறுவர்மணி

அரங்கம்: குறும்புக்கார குரங்கு

சூடாமணி சடகோபன்


காட்சி - 1.
இடம்: சென்னைக்கு அருகிலுள்ள
ஒரு மலைக்கோயில் மாந்தர்கள்: அந்த மலைக்கோயிலை சுற்றியுள்ள மரங்களில் வசிக்கும் குரங்குகள்.


குட்டிக்குரங்கு: அம்மா, சும்மா சும்மா இந்த மரக்கிளைகளில் ஓடி விளையாடுவது எனக்கு ரொம்ப போரடிக்குது.
அக்கா குரங்கு: ஆமாம்!. தம்பி சரியாத்தான் சொல்றான். எத்தனை நாட்களுக்குத் தான் நாம இந்த மரத்தை மட்டும் சுத்தி சுத்தி வருது ?
குட்டிக்குரங்கு: ஆமாம்மா! அப்பாவையும் கூப்பிட்டுகிட்டு நாம சென்னைக்கு ஜாலியாக ஒரு சுற்றுலா போயிட்டு வரலாமே?
அக்கா குரங்கு : ஆமாம், சென்னையில் உலகப்புகழ் பெற்ற கடற்கரையிருக்காம்! மிகப்பெரிய வன விலங்கு பூங்கா கூட இருக்காம்! இது தவிர நாம சுத்தி பாக்கறதுக்கு நிறைய இடங்கள் வேற இருக்காம்
குட்டிக்குரங்கு: ஆமாம்மா! நாம எத்தனை நாட்களுக்குத் தான் இந்த கோயிலுக்கு வரும் மனிதர்களை மட்டுமே பாத்துகிட்டு இருக்க முடியும்?
அம்மா குரங்கு:  சரி,சரி! எனக்கும் இங்க ரொம்ப போரடிக்குது. நீ சொன்னபடியே அப்பா கிட்ட சொல்லி இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கிறேன்!
குட்டிக்குரங்கு: ஹைய்யா ஜாலி!


காட்சி - 2.
இடம்:  குரங்குகள் உட்காரும் மரக்கிளை.
நேரம்:  இரவு.
மாந்தர்கள்: அப்பா குரங்கு, அம்மா குரங்கு, அக்கா குரங்கு மற்றும் குட்டிக்குரங்கு.

அம்மா குரங்கு: ஏங்க! நம்ம மகனுக்கு இங்க ரொம்ப போரடிக்குதாம்! ரெண்டு நாளைக்கு எங்கயாவது ஜாலியாக சுற்றுலா போயிட்டு வரலாமுன்னு சொல்றான்
குட்டிக்குரங்கு: ஆமாப்பா! நம்ம அக்கா கூட சொல்லிச்சு, சென்னை கூட நம்ம ஊருக்குப் பக்கத்துல தான் இருக்காம். அங்க வேடிக்கை பாக்க வேண்டிய இடங்கள்  நிறைய  இருக்காம்
அம்மா குரங்கு: நாம சொன்னா, அப்பா கேட்காமலாயிருப்பார்!  சரி, இப்ப நாம சென்னைக்கு எப்படி போறது?
குட்டிக்குரங்கு: அம்மா, நாம கிளைக்கு கிளை தாவிக்கிட்டே சென்னை வரைக்கும் போயிடலாம். சென்னை அம்பது கிலோ மீட்டர் தூரம்தான் இருக்குனு அக்கா சொல்லிச்சு.
அப்பா குரங்கு: டேய், அப்படியெல்லாம் சென்னைக்கு போக முடியாது. நம்ம ஊரைத் தாண்டி விட்டால், ஒரு மரம் கூட கிடையாது. ரோடு அகலம் பண்றேன்னு அத்தனை மரங்களையும் வெட்டிப்புட்டாங்க.
குட்டிக்குரங்கு: அப்ப நாம சென்னைக்கு சுற்றுலா போகவே முடியாதா?
அப்பா குரங்கு: கவலைப்படாதே.. உன்னை எப்படியாவது சுற்றுலாவுக்கு அழைத்துக் கொண்டு செல்கிறேன். ஆனால் ஒன்று, நீ எந்த வால் தனமும், குறும்பும் செய்யாமல் அமைதியாக இருக்கணும், புரிஞ்சுதா?
குட்டி குரங்கு: அப்படியே செய்கிறேன் அப்பா. நான் எந்த வால் தனமும், குறும்பும் செய்ய மாட்டேன், இது சத்தியம்! 
அம்மா குரங்கு: அப்ப நான் ஒரு ஐடியா சொல்றேன். நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டுலே யிருந்து சென்னைக்கு தினமும் நிறைய பேரூந்துகள் போகிறதாம். நாம பேருந்தோட டாப்புல  யாருக்கும் தெரியாமல் உட்கார்ந்துகிட்டே போயிடலாம். எப்படி என்னோட யோசனை.
அப்பா குரங்கு: அப்படியே செய்யலாம். நீங்க எல்லோரும் நல்லா தூங்குங்க. நாளை காலைல முதல் பஸ்சுல நாம சென்னைக்கு சுற்றுலா கிளம்பறோம்.
குட்டிக்குரங்கு: ஹைய்யா ஜாலி
    
காட்சி - 3

காலைப் பொழுது நன்றாக விடிகிறது. அப்பா குரங்கு, அம்மா குரங்கு, அக்கா குரங்கு மற்றும் குட்டிக்குரங்கு ஆகிய நால்வரும் பேருந்தின்  மேல் தளத்தில் தொற்றிக்கொண்டு ஜாலியாக தங்களுடைய இன்பச்சுற்றுலாவை தொடங்குகின்றனர்.


பேரூந்து சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூருக்கு வந்து சேருகிறது.

வண்டலூரில் அமைந்திருக்கும் வன விலங்கு பூங்காவை கண்ட குட்டிக் குரங்கு முதலில் அங்கு இறங்கி, வன விலங்குகளைப் பார்த்து மகிழ ஆசைப்பட்டது. அம்மா அப்பாவிடம் அங்கு இறங்க வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தது.
குட்டிக்குரங்கின் தொல்லை தாங்காமல் அனைவரும், டிராபிக் சிக்னலில் மாட்டிக் கொண்டு, திகைத்து நின்று கொண்டிருந்த பேருந்திலிருந்து தாவிக் குதித்து சாலையில் இறங்கின. சாலையில் தாவிக்குதித்து வண்டலூர் வன விலங்கு பூங்காவினுள்  நுழைந்தன. 

வன விலங்கு பூங்காவின் வாயிலில் நின்று கொண்டிருந்த காவலாளி குரங்குகளைப் பார்த்தவுடன் அவற்றை துரத்த ஆரம்பித்தார். அவைகள் காவலாளியிடமிருந்து தப்பித்து எப்படியோ வாசலில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளைகளைப் பற்றி கொண்டு, கிளைக்கு கிளை தாவி, அந்த வன விலங்கு பூங்காவினுள் நுழைந்தன.

காட்சி - 4
இடம்: வண்டலூர் வன விலங்குகள் பூங்கா.
மாந்தர்கள்: அப்பா குரங்கு, அம்மா குரங்கு, அக்கா குரங்கு மற்றும் குட்டிக்குரங்கு.

(கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு விலங்குகளைக் கண்ட குட்டிக்குரங்கு, ஆர்வம் தாங்காமல் ஆனந்தத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்தது.)

குட்டிக்குரங்கு: அப்பா, உலகத்துல இவ்வளவு மிருகங்கள் இருக்கின்றவா? நான் நாய், பூனையைத் தவிர வேறு எந்த மிருகங்களையும் பார்த்தது கூட இல்லையே ! 
அப்பா குரங்கு: மகனே, அங்கே பார்!எத்தனை எத்தனை பறவைகள்!.ஆகாயத்தில் சுதந்திரமாக பறக்க வேண்டியவர்களை இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் இந்த மனிதர்கள்.
அம்மா குரங்கு: ஆமாம்! அங்கே பாருடா என் மகனே ! சிங்கங்கள் தான் எத்தனை கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன! இருந்தாலும் பாவம், அவைகள் அத்தனையும் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றன.
அப்பா குரங்கு: இங்கே பாருடா என் மகனே!. கண்ணாடி கூண்டுகளுக்குள் எத்தனை எத்தனை பாம்புகளை அடைத்து வைத்திருக்கிறார்கள்.
அக்கா குரங்கு:  நீர் யானை, நரி, கரடி, ஓநாய்கள், காட்டு மாடுகள், பலவகைப்பட்ட மான்கள், சிங்கம், புலி, சிறுத்தை ,காண்டா மிருகம், நம் இனத்தைச் சார்ந்த சிங்கவால் குரங்குகள், கருங்குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கு என்று நம்முடைய அத்தனை சகோதரர்களும் இங்கே அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
(திடீரென்று குட்டிக்குரங்கு ஆர்வம் தாங்காமல் பறவைகள் அடைக்கப்பட்டிருக்கும் பெரிய அரங்கின் கதவை திறந்து வைத்து உள்ளே நுழைந்தது.... அதன் வழியே அத்தனை பறவைகளும் ஒவ்வொன்றாக சிறகை விரித்து வெளியேப் பறக்க ஆரம்பித்தன. பாய்ந்து சென்று மான்களை அடைத்து வைத்திருந்த பூங்காவின் கதவையும் திறந்து விட்டது அந்த குட்டிக்குரங்கு!  அங்கிருந்த அத்தனை மான்களும் வெளியே தப்பித்து ஒட ஆரம்பித்தன...... பல்வேறு பறவைகள் கீச் கீச் என்று மகிழ்ச்சியுடன் பறந்து செல்வதைப்பார்த்த பூங்காவின் காவலாளிகள் அங்கு விரைந்து வந்தனர். பரந்து விரிந்த நிலப் பரப்பில் அடைபட்டுக் கிடந்த மான்களும் தப்பித்து வெளியே வந்து, போகும் இடம் தெரியாமல் துள்ளி குதித்து நாலா திசைகளிலும் ஓட ஆரம்பித்தன. கூண்டிலிருந்து வெளியே வந்த பாம்புகள்  தப்பித்து வேகமாக ஊர்ந்து செல்ல 
ஆரம்பித்தன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வன விலங்கு அதிகாரிகளும் காவலாளிகளும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.)

பூங்கா அதிகாரி: நல்ல வேளை! சிங்கம், புலி வசிக்கும் கூண்டுகளை யாரும் திறக்கவில்லை. திறந்து விட்டிருந்தால் பெரிய ஆபத்தில் முடிந்திருக்கும்
காவலாளி: எங்களை மீறி வெளியேயிருந்து யாரும் வரவில்லையே! யார் இந்த கூண்டின் கதவுகளைத் திறந்து விட்டிருப்பார்கள் ?
பறவைகளும் மான்களும் தப்பித்துச் செல்வதைப் பார்த்து குழம்பிக் கொண்டிருந்த அதிகாரிகள் ஒரு குட்டிக்குரங்கு முதலைகளை அடைத்து வைத்திருக்கும் கூண்டைத் திறப்பதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைகிறார்கள். ஓடிச்சென்று அந்த குட்டிக் குரங்கை லாகவமாகப் பிடித்து  உடனே ஒரு கூண்டுக்குள் அடைக்கிறார்கள்.
பூங்கா அதிகாரி:இந்த எல்லா வேலைகளுக்கும் இந்த குட்டிக்குரங்கு தான் காரணமாயிருக்குது  நல்ல வேளை, பெரியதாக ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக நாம் இந்த குறும்புக்கார குட்டிக்குரங்கை பிடித்து கூண்டில் அடைத்து விட்டோம்.
காவலாளி: ஆமாம் சார்.. இல்லாவிடில், இங்கே வந்திருக்கும் பார்வையாளர்களான குழந்தைகளும் பெரியவர்களும் பேராபத்தில் மாட்டிக் கொண்டிருப்பார்கள்.
பூங்கா அதிகாரி: நீ சொல்வது முற்றிலும் சரி!. இங்கு இருக்கும் மிருகங்களில் ஆபத்து நிறைந்ததுவே அதிகமாக உள்ளன.
(தன்னுடைய ஆசை மகனான குட்டிக்குரங்கு, பூங்கா அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்டதை பார்த்து அம்மா குரங்கு, அப்பா குரங்கு மற்றும் அக்கா குரங்குகள் மிகுந்த வேதனையடைந்தன....இன்பச் சுற்றுலாவுக்கு வந்திருந்த குட்டிக்குரங்கு தன்னுடைய வால் தனத்தினால் துன்பச் 
சுற்றுலாவாக மாறியதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டது.)


காட்சி - 5
இடம்-பூங்கா
மாந்தர் - பூங்கா அதிகாரி, காவலாளி, 

     
(வன விலங்கு பூங்கா அதிகாரியும் காவலாளியும் பேசிக்கொண்டிருப்பதை குரங்குகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன).

பூங்கா அதிகாரி: செக்யூரிடி! பறவைகளும் விலங்குகளும் பாம்புகளும் தப்பித்துச் சென்றதை நாம் கண்டிப்பாக மேலிடத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்.
காவலாளி: அதற்கு காரணமாக இருந்த அந்த குட்டிக்குரங்கை நாம்தான் பிடித்து விட்டோமே! இப்ப அந்த குரங்கு ஒன்னுதான் நமக்கு சாட்சி.
பூங்கா அதிகாரி: செக்யூரிடி! அந்த கூண்டினை நன்றாக அடைத்து விட்டு, பூட்டு போட்டியா? அல்லாட்டி, அந்த குரங்கும் தப்பிச்சி போயிடும்!
காவலாளி: பூட்டு போடலீங்கய்யா.
வ.வி.அதிகாரி: என்னய்யா சொல்றீங்க ? மொதல்ல ஓடிப்போய் பூட்டை போட்டு நல்லாப் பூட்டிட்டு வாங்க. அந்த குறும்புக்கார குட்டிக்குரங்கு ரொம்ப பொல்லாதது. அதுக்கு கூண்டுகளை நல்லா தொறக்க தெரிஞ்சுடுச்சு. எப்படியாவது தப்பிச்சுடும்!
காவலாளி: சரிங்கய்யா!                                                 
(காவலாளி கூண்டிற்கு பூட்டைப் போட ஓடுகிறார் இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்பா குரங்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது)

அப்பா குரங்கு: அப்ப கூண்டை பூட்டாம விட்டுட்டாங்களா இவங்க ?
(அப்பா குரங்கு கூண்டை நோக்கி வேகமாக ஓடிச்சென்று கூண்டின் கதவைத் திறந்தது. அழுது கொண்டிருந்த குட்டிக்குரங்கு கதவு திறப்பதைப் பார்த்து விட்டு பாய்ந்து வெளியே ஓடி வந்தது).

அப்பா குரங்கு: ஓடுங்க, ஓடுங்க... காவலாளி மீண்டும் நம்மைப்பிடித்து கூண்டிற்குள் அடைப்பதற்கு முன்பு தப்பித்து ஓடுங்கள். 
(அப்பா குரங்கு, அம்மா குரங்கு, அக்கா குரங்கு மற்றும் குட்டிக்குரங்கு ஆகிய நால்வரும் அங்கிருக்கும் மரக்கிளைகளைப் பற்றி கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றன. பூட்டைப் பூட்டுவதற்கு வந்த காவலாளி கூண்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து விட்டு அதிர்ச்சியடைகிறார். கூண்டும் காலியாகத்தான் கிடந்தது. குட்டிக்குரங்கும் அங்கு இல்லை)

காவலாளி: (பதட்டத்துடன் தன் அதிகாரியை நோக்கி) ஐயா, ஐயா! குட்டிக்குரங்கும் தப்பிச்சிப் போயிடிச்சி வன விலங்கு பூங்கா அதிகாரியும் காவலாளிகளும் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT