சிறுவர்மணி

தும்பியும் பட்டாம்பூச்சியும்!

11th Sep 2021 12:00 AM | ஜெ.வேல்முருகன்

ADVERTISEMENT

 

ஒரு ஊரில் மகான் ஒருவர் இருந்தார். அவர் குளக்கரையில் இறை வழிபாடு முடித்து விட்டு, அருகில் இருந்த பாறையில் அமர்ந்தார். அப்போது அவர் முன்னால் பட்டாம்பூச்சி ஒன்று தன் சிறகை விரித்து அழகாக ஆடத் தொடங்கியது. விதவிதமாக வட்டமிட்டும், சாய்ந்தும் பட்டாம்பூச்சி ஆடுவதைக்கண்டு மகான் சிரித்தார். மகான் ரசிப்பதைப் பார்த்ததும் பட்டாம்பூச்சி ஆடிக்கொண்டே இருந்தது.

அப்போது அங்கே வந்த தும்பி ஒன்று தானும் மகான் முன்னால் ஆடத்தொடங்கியது.

தும்பி  ஆடுவதைப் பார்த்தும் மகான் சிரித்தார். கோபத்தில் சிறிது நேரம் ஆடாமல் ஒதுங்கியிருந்த பட்டாம்பூச்சி தும்பி மீது கொண்ட பொறாமையால், தானும் அதனுடன் சேர்ந்து ஆடியது. ஒவ்வொரு முறையும் தும்பியை ஆட விடாமல் தள்ளித் தள்ளி விட்டது. மகான் அவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அந்த நேரம் பார்த்து காற்று வேகமாக வீசத்தொடங்கியது.

இரண்டும் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த   குளத்து நீரில் விழுந்தன. தும்பியோ,  திடமுள்ள தன் சிறகை அடித்து, அடித்து மேலே வந்து விட்டது. ஆனால் பட்டாம்பூச்சியின் மெல்லிய சிறகு நனைந்து விட்டதால், அதனால் பறந்து தண்ணீரை விட்டு மேலே வர முடியவில்லை. இதைக் கண்டதும் ,தும்பி பட்டாம்பூச்சியை நீரிலிருந்து தூக்கி வந்து, தரையில் விட்டு காப்பாற்றியது. சிறிது நேரத்திற்கு பிறகு ,தும்பியும் பட்டாம்பூச்சியும் நட்போடு கைகோர்த்து, மகான் முன்னால் மீண்டும் ஆடத்தொடங்கின.

இப்பொழுது காற்று வேகமாக வீசியும், இரண்டும் கீழே விழாமல் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தன. ஒற்றுமையே நம் வலிமை என்பதை பட்டாம்பூச்சியும் தும்பியும் உணர்ந்துக் கொண்டதை எண்ணி மகான் மனம் மகிழ்ந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT