சிறுவர்மணி

நூல் புதிது

11th Sep 2021 12:00 AM

ADVERTISEMENT

 


குட்டிகளுக்கான குட்டிக் கதைகள் - கமலினிகதிர்; பக்.64; ரூ.150;  இனிய நந்தவனம் பதிப்பகம், எண்.17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003. தொலைபேசி: 94432-84823.

"முயலை வென்ற ஆமை' கதைக்குப் பிறகு முயல்களுக்கு ஆமைகளைக் கண்டாலே பிடிக்காது என்பது பழைய வரலாறு. ஆனால், இந்நூலிலுள்ள  "ஆமையும் முயலும்' என்ற முதல் கதையில், ஆமைகளின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களையும் சிக்கல்களையும் கேள்விப்பட்ட முயல்கள் வருத்தப்பட்டு, அவற்றுக்காக இறைவனிடமும் பிரார்த்தனை செய்கின்றன என்பது புதிய வரலாறுதானே!

"இரண்டு இதயங்கள் பேசுவதற்கு மொழி தேவையில்லை, அன்பான இதயங்கள் இரண்டும் பேச முடியும் என்று கூறி, அபி ஆட்டுக் குட்டியை தன் சகோதரியாக நினைத்து வளர்க்கும் தூரனின் அன்பையும்;  கடமையை மறந்த சோம்பேறி குயிலிடம், "உழைக்காமல் இருந்து சாவதைவிட உழைத்துத் தேய்ந்து பிறருக்குப் பயன்பட்டு செத்துப்போவது சிறந்தது' என்று கூறும் தேனீயின் அறிவுரை எனக் கதைகள் அனைத்தும் கருத்துப் பெட்டகமாக உள்ளன.

ADVERTISEMENT

போகர் ஆமை, ஆதிரை முயல்,  புரூனோ நாய்க்குட்டி,  புகழ் ஆட்டுக்குட்டி முதலியவை எல்லோரும் மனதிலும் இடம்பிடிக்கும். கணக்கு, அறிவியல், பொது அறிவு, நீதி, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கதைகளுக்குள் புகுத்தி சிறுவர்களுக்கு விருந்து படைத்துள்ளார் நூலாசிரியர்.  

பாடி, ஆடு பாப்பா (சிறுவர் பாடல்கள்) -கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்; பக்.352; ரூ.400; மணிமேகலை பிரசுரம், சென்னை-17; 044-24342926, 24346082.

பாலர் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைப் பாடல்கள், மாணவர் பாடல்கள், தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள், பாடி ஆடு பாப்பா, பாடலும் ஆடலும் முதலிய பதினோரு உள்தலைப்புகளைக் கொண்டு இதிலுள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

அப்பா அம்மா, அணிலே நில், வா முயலே, மின்மினிப்பூச்சி, நெல்லும் உமியும், மத்தாப்பு, வாணவேடிக்கை, இனிய தமிழில் பேசிடுவோம், காலையில் எழுவோம், பாட்டி பாட்டி கதை சொல்வாய், நாவை அடக்கு - என குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொண்டு பாடும் விதத்தில் ஒவ்வொரு பாடலும் அமைந்திருப்பதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு. 

இந்த நூல் அற்புதமான குழந்தைப் பாடல்களைக் கொண்டது என்பதற்குச் சான்று, அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நூலாக இதைத் தேர்ந்தெடுத்து விருதும் வழங்கி இருப்பதே ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT