சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பழங்களின் அரசி - மங்குஸ்தான் மரம்

23rd Oct 2021 06:00 AM | பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா,

நான் தான் மங்குஸ்தான் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் கர்சினியா மங்கோஸ்டினா என்பதாகும். நான் குளுசியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் மலைப் பகுதிகளில் அதிகம் விளைவேன். இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா, மியான்மர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் என்னை விரும்பி வளர்த்து பயன்கள் பல பெறுகிறார்கள். இந்தியாவில் கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம், கல்லார் மற்றும் பரலியார், திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநகதி பகுதி, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நான் அதிகமாகக் காணப்படுகிறேன்.

என் பழத்தில் உங்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளும் இருக்கு. உங்கள் உடல் சூட்டை தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்க நான் உதவுவேன். என் பழத்திலும் உங்கள் நோய்களைத் தீர்க்கும் அரும்பெரும் குணங்கள் உண்டு. என் பழத்தின் தோற்றம் மாதுளம் பழம் போன்றே இருக்கும். என் பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு. என் பழமானது உங்கள் உடலில் அவ்வவ்போது ஏற்படும் நச்சுத் தன்மையை முறிக்கும் தன்மை கொண்டது. எந்த ஒரு பழத்திலும் இல்லாத ஒரு வகையான இனிப்பும், புளிப்பும் கலந்து சுவையாக இருப்பதால் என் பழத்தை பழங்களின் அரசி என்று அன்போடு அழைக்கிறாங்க.

ADVERTISEMENT

குழந்தைகளே, உங்களுக்கு வாய் துர்நாற்றம் இரு வழிகளில் ஏற்படும். உங்களுக்கு வயிற்றுப் புண் ஏற்பட்டாலோ அல்லது நீங்கள் உணவு உண்ணும் போது பல் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் தங்கி அதன் மூலம் கிருமிகள் உருவாகி துர்நாற்றம் ஏற்படும். அப்போது நீங்கள் என் பழத்தை சாப்பிட்டால் கிருமிகள் அழிந்து, வாய்ப் புண்ணும் குணமாகி துர்நாற்றம் ஓடி விடும். அதோட வாயின் உட்புறங்களில் ஏற்படும் கிருமிகளையும், காளான்களையும் அழித்து விடும். இதனால் பற்களில் ஏற்படும் ஈறு நோய்கள், பல் வலி, தொற்று நோய் மறைந்து விடும். என் பழத்தோலை நன்கு காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் அறவே வராது. இந்தப் பொடியை தேயிலைக்குப் பதிலாக வெந்நீரில் கலந்து குடித்தால் முதுமைக் காலத்தில் ஏற்படும் முகச்சுருக்கம் ஏற்படாது. பெண்கள் பாலில் கலந்து அருந்தினால் எந்த நோயும் அவர்களை அண்டவே அண்டாது. அதோட நான் ஒரு சிறுநீர் பெருக்கியும் ஆவேன்.

கணினியின் திரையை எப்போதும் பார்த்தப்படி வேலை செய்பவர்களுக்கு கண் எரிச்சல் அழற்சி ஏற்படும். அதனால், அவர்களுக்கு தலைவலியும், கழுத்து வலியும் உண்டாகும். இப்படி பாதிப்படைந்தவர்கள் என் பழத்தை சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கி, உடல் நரம்புகளில் புத்துணர்வு பெறுவார்கள். மங்குஸ்தான் பழச்சாறு உடலில் அதிகளவில் ஏற்படும் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு, பக்கவாதம், மூலநோய், செரிமானப் பிரச்னை, நாட்பட்ட புண்கள், காய்ச்சல், இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு, உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், ஆகிய நோய்களையும் தீர்க்கும்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள பரலியாறு பகுதியிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைக்குச் சென்றால் என்னை நீங்கள் காணலாம். அங்கு 100 ஆண்டுகள் கடந்த மங்குஸ்தான் மரங்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக சொல்றாங்க. விவசாயிகள் தென்னைக்கு ஊடுபயிராக என்னையும் நட்டு வளர்த்து வந்தால் பயன்கள் பல கொடுப்பேன். என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. ஏன்னா, என்னை பூச்சிகள் தாக்காது. தனியாக உரம் இட வேண்டிய அவசியமும் இல்லை. குழி தோண்டி நட்டால் போதும், மற்றதை நானே பார்த்துக்குவேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT