சிறுவர்மணி

அரங்கம்: அன்புள்ள தாத்தா பாட்டி

23rd Oct 2021 05:06 PM | சூடாமணி சடகோபன்

ADVERTISEMENT


காட்சி - 1
இடம்: சிறுமி விஜியின் வீடு.
நேரம்: இரவு.
மாந்தர்கள்: சிறுமி விஜி மற்றும் அவளது தாய் சுந்தரி.

சுந்தரி: விஜிக்குட்டி, நேரமாயிடுச்சு பாரு, காலையில் சீக்கிரமாக எழுந்திரிச்சு பள்ளிக்குத் போகணுமே !. அதனால நேரத்தோடப் போய்த் தூங்கு.
விஜி:அம்மா, தூக்கம் வரமாட்டேங்குது! ஒரு நல்ல கதை சொல்லும்மா.
சுந்தரி: விஜி கண்ணு, ஆபிசுல இன்னிக்கு செம வேலை. அதனால ரொம்ப டயர்டா இருக்கு. நாளைக்கு கண்டிப்பாக உனக்கு ஒரு கதை சொல்றேன். இப்ப சமத்தா போய்த் தூங்கு.
விஜி: ப்ளீஸ்! ஒரு சின்ன கதையாவது சொல்லும்மா !
சுந்தரி: சரி சொல்றேன்!..நீயும் கதை கேட்டுக்கிட்டே சீக்கிரமாத் தூங்கிடுவியாம்! சரியா?
விஜி: சரிம்மா.!
சுந்தரி: ஒரு ஊர்ல ஒரு தாத்தா பாட்டி இருந்தாங்களாம். அந்த தாத்தாவுக்கு வயசாயிட்டதால, அவரை வேலையிலிருந்து நீக்கிட்டாங்களாம். கையில காசு
இல்லாம ரொம்ப திண்டாடிக் கிட்டிருந்தாங்க பாவம்.
விஜி: ஆமாம்! ரொம்ப பாவம்மா அவங்க!....
சுந்தரி: வேலைக்குப் போக முடியாததால் அந்தக் குடும்பம் பணத்திற்கு ரொம்ப கஷ்டப்பட்டது.
விஜி: அவங்களுக்கு உதவி செய்ய யாருமே முன் வரவில்லையாம்மா ?
சுந்தரி: ஆமாம் அந்த சூழ்நிலையிலும் அந்தப்பாட்டி தாத்தாக்கிட்ட சொன்னாங்களாம், நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நான் சம்பாரிச்சு உங்களைக் காப்பாத்துவேன். நீங்க நிம்மதியா இருக்கலாம். இத்தனை நாட்கள் நீங்க வேலைக்குப் போய் என்னைக் காப்பாத்தினீங்க!. இப்ப என்னோட முறை. அவ்வளவு தான்.
விஜி: நல்ல பாட்டி அவங்க!
சுந்தரி: அதற்கு அந்தத் தாத்தா சொன்னாராம்!. போடி பைத்தியமே, ஒனக்கோ அறுபத்தைந்து வயசாகுது! இந்த வயசுல உனக்கு யாருடி வேலை கொடுப்பா?....பாட்டியும் சிரிச்சிக்கிட்டே சொன்னாங்களாம்!.. நான் எதுக்கு புதுசா வேலைக்குப் போகணும்? நானே
சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்கப் போகிறேன். நம்ம இரண்டு பேருக்கும் அதுல கிடைக்கற வருமானமே போதும்....
விஜி: அவங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவங்களா இருக்காங்கம்மா!
சுந்தரி: ஆமாம் நீ சொல்றது ரொம்ப சரி.
விஜி: தாத்தா, பாட்டியைப் பார்த்துக் கேட்டாராம்!. அப்படி என்ன தொழில் பண்ணப் போறே? அதற்கு பாட்டி சொன்னாங்களாம், நான் நம்ம வீட்டு வாசல்ல ஒரு இட்லி கடை ஆரம்பிக்கப் போறேன்னு.
அதைக் கேட்டு தாத்தாவும் ரொம்ப மகிழ்ச்சியடைந்தாராம். இருக்காதா பின்னே, ஒருவரோட பிரச்னைகளெல்லாம் தீரப்போகிறதுன்னா, யாருக்குதான் மகிழ்ச்சியிருக்காது? மேலும் எத்தனை வயசானாலும், சொந்த கால்களிலேயே நிக்கணும்னு பாட்டி நினைக்கறங்களே, அதற்காகத்தான் தாத்தா ரொம்ப மகிழ்ச்சியடைந்தாராம்.
சரி, இந்தக் கதையை இப்படியே முடிச்சிக்கிறேன். நான் தூங்கணும். என் செல்லக்குட்டி, நீயும் உடனே தூங்கிடுவியாம், சரியா!
விஜி: சரிம்மா!

 

காட்சி - 2
இடம்: சிறுமி விஜியின் வீடு.
நேரம்: அதே இரவு
மாந்தர்கள்: சிறுமி விஜி மற்றும் அவளது
தாய் சுந்தரி.

ADVERTISEMENT

(அம்மாவிடம் ஆசையாகக் கதை கேட்கப்பட்ட பிறகும் சிறுமி விஜிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டுப் புரண்டு படுத்தாள். அவளுக்குப் புதியதாகப் பல சந்தேகங்கள் எழுந்தன. தூக்கத்தில் ஆழ்ந்திருந்த தன் தாய் சுந்தரியைத் தட்டி எழுப்பினாள் விஜிக்குட்டி)

விஜி: அம்மா! எனக்கு ஒரு சந்தேகம் !
சுந்தரி: விஜிக்குட்டி, இன்னும் நீ தூங்கலியா ?
விஜி: அம்மா! அந்த தாத்தா பாட்டி எதற்கு தனியாயிருந்து கஷ்டப்படணும்? அவங்களைப் பாத்துக்க யாருமில்லையா?
சுந்தரி: பாவம் அந்தத் தாத்தா பாட்டிக்கு குழந்தைகள் இல்லையாம். அதனாலத்தான் தனியாக இருந்து கஷ்டப்படுறாங்க. அவங்களுக்குனு ஒரு சொந்த மகனோ அல்லது மகளோ பிறந்தி ருந்தால், அவங்களைக் கண்டிப்பாக காப்பாத்திருப்பாங்க. பெற்றவங்களைக் காப்பாற்றாமல் வேறு என்ன வேலை குழந்தைகளுக்கு? சரி நீ தூங்கு!
விஜி: அய்யோ பாவம்மா அந்தத் தாத்தா பாட்டி!..அது சரி, அவங்களைப் போலத்தானே, என்னுடையத் தாத்தா, பாட்டியும் தனியாக இருக்காங்க!.. என்னுடையத் தாத்தா பாட்டிக்குத் தான் நாம எல்லோரும் இருக்கிறோமே, பின்ன எதற்கு அவங்க இந்த வயசுல தனியாக முதியோர் இல்லத்துல தங்கியிருக்கணும்? தாத்தா பாட்டியைக் காப்பாற்றுவது அப்பாவோட கடமையென்று நீங்கதானே இப்ப சொன்னீங்க?....
(விஜிக்குட்டியின் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சுந்தரி தவித்தாள்.)

விஜி: என்னுடையத் தாத்தா பாட்டியும் இப்ப நம்ம வீட்டுல இருந்தாங்கனா, நமக்கெல்லாம் எவ்வளவு துணையாயிருப்பாங்க!. முக்கியமாக ஆபிசுக்குப் போகிற உங்களுக்கு எவ்வளவு துணையாக இருப்பாங்க! எனக்கும் கதை சொல்லிக்கிட்டு, நம்ம வீட்டையும் எப்படி நல்லா பாத்துக்கிட்டிருப்பாங்க! அவங்களும் மிகப் பாதுகாப்பாக நம்ம கூடவேயிருப்பாங்க இல்லையா?
(விஜிக்குட்டி பேசப்பேச, சுந்தரி அவளுக்கு எப்படி பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. சுந்தரியின் கண்களிலிருந்து தூக்கம் முழுவதுமாகக் கலைந்து விட்டிருந்தது.)

விஜி: நீங்கள் இருவரும் அலுவலகத்திலிருந்து தினமும் ஆறு மணிக்கு மேல் தான் திரும்பி வீங்க. நானோ பள்ளியிலிருந்து தினமும் நாலு மணிக்கே திரும்பிடுவேன். நீங்கள் வரும் வரை, பக்கத்து வீட்டிலோ, அல்லது எதிர் வீட்டிலோதான் நான் இருக்கணும். அந்த வீட்டு அங்கிள், ஆன்ட்டியெல்லாம் உங்களைப்பத்தி எப்படியெல்லாம் பேசுனாங்கனு ஒங்களுக்கும் நல்லாத்தெரியும். ப்ளே ஸ்கூலில் அதிக நாட்கள் நான் தங்க வேண்டாம்னு தானே கொஞ்ச காலம் எதிர் வீட்டுல, கொஞ்சகாலம் பக்கத்து வீட்டுலத் தங்க வெச்சீங்க!. அங்க என்னை எப்பப் பாத்தாலும் தூங்க வெச்சுக்கிட்டேயிருப்பாங்க, அவங்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாதுனு. நம்ம தாத்தா பாட்டி இப்ப நம்ம வீட்டுலேயே இருந்தாங்கனா, நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம், போகலாம். எனக்கும் போரடிக்காது. அவங்க எங்கூட விளையாடிகிட்டிருப்பாங்க!. எனக்குப் பாடம் சொல்லித்தருவாங்க!. தாத்தா ரைம்ஸ் சொல்லித்தருவாரு!. விடுகதைகள் சொல்லித் தருவாரு!. பாட்டி எனக்கு நிறைய கதைகள் சொல்லுவாங்க! இதெல்லாத்தையும் அனுபவிச்சிகிட்டு, ஒவ்வொரு நொடியிலும் அவங்க எவ்வளவு மகிழ்ச்சியாயிருப்பாங்க! நான் ஒவ்வொரு நாளும் என் தாத்தா பாட்டியின் அன்பை இழந்து கொண்டிருக்கிறேன்.
(தாய் சுந்தரியினால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. குற்ற உணர்வு மேலிட்டது.
சுந்தரியின் மனசாட்சி பேச ஆரம்பித்தது.)

சுந்தரியின் மனசாட்சி: சிறுமியாக இருக்கும் "விஜி'க்குட்டிக்கு வெளிஉலகம் தெரிய ஆரம்பித்து விட்டது. தாத்தா பாட்டியின் ஞாபகம் அவளுக்கு வந்து விட்டது. எங்கேயென்று கேட்க ஆரம்பித்து விட்டாள். அவளைப் பெற்றவர்களாகிய நாங்கள் செய்யும் தவறு அவளுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது.
நாங்கள் இருவரும் வேலைக்குச் சென்று வருவதால், என்னால் என்னுடைய மாமியாரையும் மாமனாரையும் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியாது என்ற ஒரு காரணத்தினால் தானே அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறோம் அந்த உண்மையை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது? இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்ட வேண்டும்.
சுந்தரியின் தூக்கம் அவளை விட்டு முழுவதுமாக விலகிச்சென்றது. எப்படியோ மீதியிருக்கும் அன்றைய இரவைத் தூங்காமலேயே கழித்தாள்.

காட்சி -4
இடம்: சிறுமி விஜியின் வீடு.
நேரம்: மறுநாள் காலை.
மாந்தர்கள்: சிறுமி விஜி, தாய் சுந்தரி, தந்தை மூர்த்தி.

சுந்தரி: இன்னும் அரை மணி நேரத்திற்குள் எல்லோரும் குளித்து, புறப்படத் தயாராகி விடுங்கள். நாம எல்லோரும் ஒரு இடத்துக்குப் போகப்போகிறோம். அந்த இடம் ஒரு சஸ்பென்ஸ். அதை இப்போழுது உங்களிடம் சொல்லப்போவதில்லை.
விஜி குட்டி, இன்னிக்கி நீ பள்ளிக்குப் போக வேண்டாம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு !
விஜி: ஏம்மா பள்ளிக்குப் போக வேணாம்னு சொல்றீங்க?
சுந்தரி: காரணம் சொல்றேன். நானும் அப்பாவும் கூட இன்னிக்கி ஆபிசுக்குப் போகப்போவதில்லை.
(மூர்த்தியும் காரணம் புரியாமல் முழித்துக்கொண்டிருந்தார். சரியாக ஒருஅரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் ஒரு பெரியக்கார் வந்து நின்றது. அனைவரும் அந்தக்காரில் ஏறி புறப்பட்டனர். அந்தக்கார் ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்று நின்றது.)
மூர்த்தி: என்ன சுந்தரி, எங்கப்பா, அம்மாவைப் பார்த்துவிட்டு போகலாம்னு இந்த முதியோர் இல்லத்திற்கு எங்களைக் கூட்டிட்டு வந்திருக்கியா?
விஜி: வாவ்!. தாத்தா பாட்டியைப் பார்ப்பதற்கு எங்களைக் கூட்டிட்டு வந்திருக்காங்க எங்கம்மா!
மூர்த்தி: என்ன சுந்தரி, இங்க வருவதைப்பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லல !
சுந்தரி: அதுக்குக் காரணம் நம்ம விஜிக்குட்டி தாங்க! தாத்தா பாட்டியின் நினைவலைகளில் தான் எப்பொழுதும் மூழ்கியிருக்கிறாள் அவள்.
மூர்த்தி: என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதே சுந்தரி. அதே ஏக்கத்துலதான் நானும் இருக்கிறேன். அவங்க நம்ம கூட இல்லாததால் நாம நிறைய இழந்து கொண்டிருக்கின் றோம்..அவங்களை ஒதுக்கி வெச்சு, நம்மை நாமே இத்தனை நாட்களாக ஏமாற்றிக் கொண்டு வருகிறோம்.
சுந்தரி: நீங்கள் இரண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்க. ஆபிசுக்குப் போகிற என்னால தினமும் அவங்களுக்கும் சேர்த்து சமைச்சுப் போட முடியாதுங்கற ஒரே காரணத்திற்காகத்தான் நான் அவர்களை முதியோர் இல்லத்துல சேர்க்கச் சொன்னேன். அது எவ்வளவு பெரியவறுன்னு நேற்று இரவு, நம்ம விஜி எனக்கு உணர்த்திட்டாள்.
மூர்த்தி: அப்ப உன்னுடைய இந்த திடீர் மன மாற்றத்திற்கு நம்ம விஜிக்குட்டி தான் காரணமா?
சுந்தரி: ஆமாங்க!.நம்ம குழந்தை தாத்தா பாட்டி பாசத்திற்கு எப்படி ஏங்கிட்டிருந்தாள்னு நேத்து தான் எனக்குத் தெரிஞ்சுது. அவளுக்கு ஒரு சின்னக்கதை சொல்லப்போக, அந்தக் கதையின் ஆழம் எனக்கே தெரியாமல், அவள் கேட்ட கேள்விகள், தொலைக்கப்பட இருந்த உறவுகளை எப்படி ஒன்று சேர்த்திருக்கிறது என்று பார்த்தால், எனக்கே பிரமிப்பாக இருக்கு.

விஜி: அம்மா, உனக்கு ரொம்ப ரொம்ப நன்றியம்மா! நீங்கள் இருவரும் ஆபிசுக்குச் சென்று வேலை செய்து விட்டு வருவதால் உங்களது குழந்தைகளைச் சரியாக கவனித்துக் கொள்ள முடியாது. உண்மைதான்.
உங்களுக்கு எங்களைத் தூக்கிக் கொஞ்சவோ, அரவணைத்து அன்பைக் காட்டவோ, வீட்டுப் பாடங்களைச் சொல்லித்தருவதற்கோ எங்களுக்குப் பிடித்த கதைகளைச் சொல்லுவதற்கோ, எங்களை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்த, வெளியில் கூட்டிக்கொண்டு போகவோ, எப்பொழுதும் நேரம் கிடைத்தது இல்லை.
இவற்றையெல்லாம் செய்து தர, உங்களது சார்பாக தாத்தா பாட்டி இருக்கும்பொழுது நீங்க எதற்காகக் கவலைப்படவேண்டும்?. அவங்க கிட்ட உங்க குழந்தைகளை ஒப்படைச்சுட்டு ஒங்க வேலைகளை நீங்க தாராளமாகப் பார்க்கலாமே.
(சுந்தரியும் மூர்த்தியும் வெட்கித் தலை குனிந்தனர். வெளியில் வந்த தாத்தா பாட்டியிருவரும்
தங்களுடைய பேத்தி விஜிக்குட்டியை உச்சி முகர்ந்து, அன்பைப் பிழிந்து அரவணைத்துக் கொண்டிருப்பதை ஒரு வித குற்ற உணர்வுடன் பார்த்துக் கொண்டு நின்றனர். இத்தனை நாட்களாக ஒரு வெறுமையில் மூழ்கிக் கொண்டிருந்த அந்த வீடு மகிழ்ச்சிக் கடலில் மூழ்க ஆரம்பித்தது.)

திரை

ADVERTISEMENT
ADVERTISEMENT