சிறுவர்மணி

எனக்கும் தெரியாது!

16th Oct 2021 06:00 AM | எம். அசோக்ராஜா

ADVERTISEMENT

 

பழைய மாணவர் ஒருவர் வயதாகிப் போன தன் ஆசிரியர் ஒருவரை சந்தித்தார். சந்திப்பின் பொழுது, "சார், உங்களை என்னால் என்றும் மறக்க முடியாது. ஒருமுறை நான் வகுப்பில் பேனாவை களவாடி விட்டேன். நீங்கள் எங்கள் அனைவரின் கண்களையும் கட்டி விட்டு ஒவ்வொருவரின் பாக்கெட்டையும் துழாவி தேடினீர்கள். உங்கள் கைகள் என் பாக்கெட்டை துழாவியபோது பெரும் பயத்தை உணர்ந்தேன். 

நீங்களும் அந்தப் பேனாவை என் பாக்கெட்டில் இருந்து எடுத்து விட்டீர்கள். பின் எல்லோரையும் கண்களை திறக்கச் சொல்லி, "இதோ அந்தப் பேனா' என்று உரிய மாணவரிடம் கொடுத்து விட்டீர்கள். 

ஆனால் நானோ நேரப்போகும் அவமானத்தை எண்ணி உள்ளூர பயந்தபடி இருந்தேன். நீங்களோ என்னை சக மாணவர்களுக்கு காட்டிக் கொடுத்து அவமானப் படுத்தவில்லை. அதன் பிறகும் கூட என்னை வித்தியாசமான முறையில் நடத்தவும் இல்லை. இது என்னை மிகவும் பாதித்த விஷயம்.'' என்று சொல்லி முடித்தார்.

ADVERTISEMENT

கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர், "அடடே.. நீதான் அந்த பேனாவை எடுத்தாய் என்று எனக்கும் தெரியாது. ஏன் என்றால் நானும் என் கண்களை கட்டி விட்டுத் தான் பேனாவை தேடி எடுத்தேன். உன்னை நான் பார்த்திருந்தால், பார்க்கும் நேரங்களில் எல்லாம் இந்த சம்பவம் நினைவுக்கு வரும். உன்னை பற்றிய தவறான எண்ணம் என்னில் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நானும் தவறாக உன்னை வழி நடத்தக் கூடும். இது உன் எதிர்காலத்தையே பாதித்து விடும். அதனால்தான் பேனாவை தேடும் போது நானும் என் கண்களைக் கட்டிக் கொண்டேன். " என்றார். 

அதைக் கேட்ட அந்த மாணவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.

Tags : Siruvarmani I don't even know!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT