சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: மருத்துவ சுரங்கம்  - ஆரஞ்சுப் பழ மரம் 

9th Oct 2021 06:00 AM | --பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT


குழந்தைகளே நலமா?

நான் தான் ஆரஞ்சுப் பழ மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் சிட்ரஸ் சினென்சிஸ் என்பதாகும். நான் ரூட்டேசியியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பண்டைய சீனர்களால் வளர்க்கப்பட்ட ஒரு கலப்பினமாவேன். அதாவது, சிட்ரஸ் மேக்சிமா என்ற தாவரமும், சிட்ரஸ் ரெட்டிகுலடா என்ற தாவர இனமும் கலந்து உருவான கலவை நான். எனக்கு கமலா பழ மரம், தோடா பழ மரம், இன்னரந்தம் மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. எந்த வயதினரும், எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடக் கூடிய ஒரே பழம் ஆரஞ்சு பழம் தான். இது எனக்குப் பெருமையைத் தருகிறது. 

என் பழத்திலும் அதிக அளவில் வைட்டமின் சி வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கோலின் ஆகியவை நிறைந்துள்ளன. நான் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்களைக் கொண்டுள்ளேன். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உங்க உடலில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உற்பத்தியைப் பராமரித்து, நீரிழிவு நோய் ஏற்படாமலும் தடுக்குது. அது என்ன ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் என்று தானே கேட்கிறீர்கள். சொல்றேன், கேளுங்க. 

குழந்தைகளே, உங்கள் உடல் நல ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான ஒன்றுதான் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள். இது உங்க உடலிலுள்ள செல்களைப் பாதுகாக்கும் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். அதோட, சேதமடைந்த செல்களுடன் போராட உங்கள் உடலுக்கு உதவுகிறது.  உங்க உடலில் உள்ள நோய்களைக் கட்டுப்படுத்தவும், எதிர்த்துப் போராடவும் செய்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டுகள் செல்களைப் பாதுகாப்பதில் அதிகப் பங்கு வகிப்பதால் புற்று நோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. செல்கள் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதில் இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பங்கு மகத்தானது.   

ADVERTISEMENT

என் பழத்தில் பெக்டின் எனும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ளது. அது உங்க உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும்.  என் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் இருப்பதால் இவை கண்களுக்கு பார்வை பாதிப்பை ஏற்படுத்தாது. உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புகிறவர்கள் என் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதோட, உங்க சருமம் என்றும் இளமையாகவே காட்சியளிக்கும். என் பழத்தை உண்டால் உங்களுக்கு ஏற்படும் எலும்பு தொடர்பான நோய்களும் சட்டுன்னு குணமாகும். எப்படி என்றால் உங்க உடம்பில் ஜெலட்டின் மற்றும் பீட்டா கிரிப்டாக்சாண்டின் ஆக்சிஜனேற்றத்தைக் தடுக்க உதவுது,  மூட்டு வீக்கமும் குறையும்.  

என் பழத்தில் டி-லிமோனீன் உள்ளது, இது நுரையீரல் புற்று நோய், தோல் புற்று நோய் மற்றும் மார்பகப் புற்று நோய் ஏற்படாமல் உங்களைக் காக்கிறது. என் பழத்திலுள்ள வைட்டமின் சி சத்து, உங்க சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி கற்கள் உருவாக்கத்தை தடுக்கிறது. உங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லையா, பயப்படாதீங்கள், என் பழச்சாறை அருந்துங்க நல்ல தூக்கம் வரும். வளரிளம் பருவத்தினர் முகத்தில் முகப்பரு, எண்ணெய் பசை அதிகமிருந்தால், என் தோலை பொடி செய்து அதனுடன் பால், தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால், முகப்பரு இருந்த இடம் தெரியாது, அதோட அவங்க முகமும் பொலிவு பெறும். அதோட, அந்தப் பொடியை தேநீருடன் கலந்து அருந்தினால், புற்று நோய் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். கோடைக் காலங்களில் என் பழத்தை சாப்பிட்டால், தாகம் அதிகம் ஏற்படாது, அதோடு உங்க சோர்வையும் நீக்கி, புத்துணர்ச்சியும் பெறுவீங்க. நான் 75 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழ்வேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT