சிறுவர்மணி

கருவூலம்: அருணாச்சலப் பிரதேசம்!

கே.பார்வதி

சென்ற இதழ் தொடர்ச்சி....

சேலா கணவாய் இந்தக் கணவாய் தவாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இப்பகுதியில் உள்ள மலைகள் பனியால் மூடப்பட்டு வெள்ளி மலைகள் போன்று எழிலுடன் ஒளிர்கின்றன. "சேலா பாஸ்' சுமார் 12,000 அடி உயரம் கொண்டது. "சேலா பாஸ்' மற்றும் "சேலா ஏரி' அருணாச்சல பிரதேசத்தின்நுழைவாயிலாகும். தவாங் மாவட்டத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே வழியாகும்.

இப்பகுதியில் காணப்படும் கிழக்கு இமாலய மலைகளை பெளத்தர்கள் மிகப் புனிதமானதாகக் கருதுகின்றனர். இந்த சேலா பாஸ் மலைப் பாதையைச் சுற்றிலும் 101 ஏரிகள் அமைந்துள்ளன. எப்போதும் இந்தக் கணவாய் திறந்தே வைக்கப்படுகிறது. மிகக் கடுமையான பனிப்பொழிவின் போது மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனை "பூலோக சொர்க்கம்' என சுற்றுலாப் பயணிகள் அழைக்கின்றனர்.

நூரானாங் அருவி 

பெரிதும் அறியப்படாத அழகிய இடம் இது. தவாங் காட்டில் சுமார் 325 அடி உயரத்திலிருந்து இந்த அருவி இறங்குகிறது. இந்த அருவியைச் சுற்றியுள்ள உயரமான பனி படர்ந்த சிகரங்கள், அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் என பார்க்க ரம்மியமான இடம். அருவியின் அடிவாரத்தில் நீர்மின் நிலையமும் உள்ளது.

தவாங் மடாலயம்

அழகிய பனிபடர்ந்த சில்லென்ற சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள தவாங் மடாலயம் "கோல்டன் நம்கியால் வாட்úஸ' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மடாலயம் இது. உலகின் இரண்டாவது மடாலயம் இது. தவாங் ஆற்றுப் பள்ளத்தாக்கில், அருணாச்சல பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் திபெத்திய மற்றும் பூடான் எல்லைகளுக்கு அருகில் உள்ளது. 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட துறவிகள் உள்ளனர். 25 அடி உயர புத்தரின் பிரம்மாண்டமான  சிலையும் இங்குள்ளது. பிரதான கோயில் கலைப் படைப்புகளுடன் அற்புதமான உட்புறங்களைக் கொண்டுள்ளது. உள்சுவர்களில் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன.  

தவாங்-உக்யெங்லிங் மடாலயம்

தவாங் நகரில் அமைந்துள்ள இதுவும் ஒரு பெளத்த மடாலயம்.  ஆறாவது தலாய்லாமாகிய "த்சாங்யாங் கியாட்சோ' என்பவர் இங்குதான் பிறந்தார். 1847-இல் இந்த மடாலயம் கட்டப்பட்டது.

தவாங் போர் நினைவுச் சின்னம்

இது 1962-ஆம் ஆண்டு சீன-இந்தியா போரின் தியாகிகள் அனைவருக்குமான ஒரு நினைவுச் சின்னமாகும். இறந்த அனைவரின் பெயர்களும், அணிகளும் தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவுச் சின்னம் "தவாங்-சூ' பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

கோரிச்சென் சிகரம்

கோரிச்சென் சிகரம் தவாங் மற்றும் மேற்கு காமெங் மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இதுவே அருணாச்சலப் பிரதேசத்தின் மிக உயர்ந்த சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 20,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் புனிதமான இடம் இது. மலையேற்றத்திற்கு உகந்த இடம்.
மாதுரி ஏரிதவாங் மாவட்டத்தில் இந்த ஏரி உள்ளது. தவாங்கிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. 15,200 அடி உயரம் கொண்டது. பெளத்த மதத்தினரின் மிகப் புனிதமான ஏரி. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் திபெத்தைச் சேர்ந்த பெளத்த மதத்தினர் இங்கு பிரார்த்தனை செய்ய வருகின்றனர். அக்டோபர், நவம்பர், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியைப் பார்க்க வருகின்றனர்.

பம்-லா-கணவாய்

இந்தோ-சீன எல்லையில் தவாங்கிலிருந்து 37 கி.மீ. தூரத்திலும், இமயமலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,200 அடி உயரத்திலும் "பம் லா' கணவாய் அமைந்துள்ளது. பனிப் பொழிவு நிறைந்த இடம். அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தலம் இது.

மெளலிங் தேசிப் பூங்கா

மல் சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்குப் பூங்காவிற்கு அருகிலுள்ள மெளலிங் சிகரத்தின் பெயரே இந்த வனப்பகுதிக்கு இடப்பட்டுள்ளது. இதன் மேற்குப் பகுதியில் சியாங் நதி பாய்கிறது. மேலும் சைரிங், சுபோங், செமோங், க்ரோபோங் முதலிய நதிகளும் இவ்வனப் பகுதியில் பாய்கின்றன. இப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, மான், குரைக்கும் மான், சாம்பார் மான், எருமை, சிவப்புப் பாண்டா முதலிய பலவகையான விலங்குகளும், பறவையினங்களும், ஊர்வன, பூச்சி இனங்கள் முதலானவையும் காணப்படுகின்றன.

செசா ஆர்கிட் சரணாலயம்

100 ச.கி.மீ. பரப்பளவிற்குப் பசுமையான,  வண்ணமயமான மலர்களை இந்த இடத்தில் பார்த்து மகிழலாம்.  260-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் இங்கு காணப்படுகின்றன.

பாசூய் வனவிலங்கு சரணாலயம்

இச்சரணாலயத்தில் பல்வேறு பாலூட்டிகளும், பறவையினங்களும், வங்கப் புலிகளும் உள்ளன.

பாஷ்மக் நகர் கோட்டை:

இக்கோட்டை 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தின் மிக முக்கிய தொல்பொருள் தளமாகும். 

மேஹாவோ ஏரி 

பிரம்மாண்டமான இந்த ஏரி சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. 4 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.

மயூடியா

ரோயிங்கிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த மலைவாசஸ்தலம். பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடம். மலையேற்றத்திற்கு ஏற்ற இடம்.

சங்கீதி

பிரபலமான பள்ளத்தாக்கு இது. பழத்தோட்டங்கள், காடுகள், மலைச்சிகரங்கள் ஆகியவை நிறைந்த அழகிய இடம்! சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க ஏற்ற அருமையான காட்சிகளைக் கொண்டது அருணாச்சலப் பிரதேசம்!

-முற்றும்-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT