சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: சங்கக் காலத்தவன் - எறுழம் மரம்

29th May 2021 04:29 PM | - பா.இராதாகிருஷ்ணன் 

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா?

நான் தான் எறுழம் மரம்  பேசுகிறேன். நான் ஒரு சிறு மரமாவேன்.  எனது தாவரவியல் பெயர்  வுட்ஃபோர்டியா ஃபுருட்டிகோசா என்பதாகும். நான் லித்ரேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு வேலக்காய் மரம் என்ற வேறு பெயருமுண்டு.  நான் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், பசுமை மாறா காடுகளிலும் ஒரு காலத்தில் அதிக அளவில் இருந்தேன். இப்போது காணக்கிடைக்காத ஒரு மரமாகி விட்டேன். நான் சங்க காலத்து மரமாவேன். பெருமழையின் போது பூக்கும் என் பூக்கள் வாயகன்ற ஊதுகுழல் மாதிரியான வடிவத்தில் கொத்தாக இருக்கும். ஒரு கொத்தில் 2 முதல் 16 பூக்களிருக்கும்.  அது மழை முடிந்ததும்  வெண்மையாக மாறி விடும்.

குழந்தைகளே, எனக்கு இந்தப் பெயர் ஏன் வந்ததுன்னு தெரியுமா, மரங்கள் நிழலை மட்டும் தரல, ஞானத்தையும் அருளும் என்பது தான் மரங்கள் உங்களுக்கு உணர்த்தும் பாடம்.  "வரும்மழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல், நரை நிறம் படுத்த நல் இணர்ந்து எறுழ்வீ ' என்கிறது நற்றிணை.  பூக்களைத் தனது ஒரே பாடலில் பாடிய கபிலர்,    "எரிபுரை எறுழம்' என என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது என் மலர் நெருப்பு போல் ஒளி பொருந்தியதாகும். 

ADVERTISEMENT

என்னிடமுள்ள மருத்துவ குணங்களை அக்கால பழங்குடி மக்கள் அதிகமாக அறிந்திருந்தனர்.  என் பூக்கள், இலைகள், பழங்கள், பட்டைகள்,  பிசின், வேர் ஆகிய அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உண்டு. குழந்தைகளே, என் பூக்களை அரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  இறுகிய தசைகள் தளர்வுறும், அழர்ச்சி நீங்கும். 

குழந்தைகளே, என் பூக்களையும், வேர்களையும்  வெந்நீரிலிட்டு காய்ச்சி அருந்தினால் முடக்குவாதம் ஓடிவிடும்.  மேலும், இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்னை, இருமல், நீரிழிவு, மஞ்சள்காமாலை, மூலம், மேகவெட்டை, வயிற்றுப் போக்கு, சீறுநீரகத்தில் கல் முதலிய நோய்களுக்கு அருமருந்தாகும்.  என் பூக்களுக்கு புற்றுநோயை குணமாக்கும் தன்மையும் இருக்கும். என் மரப்பட்டையை அரைத்து எலும்பு முறிவு உள்ள பகுதிகளில் தொடர்ந்து தேய்த்து வந்தால் உடைந்த எலும்புகள் உடனடியாக சேர்ந்து விடும்.

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோயை குணப்படுத்தும் ஆற்றலும் எங்கிட்ட இருக்கு. என் பூக்களையும், பழங்களையும், இலைகளையும் கால்நடைகளுக்கு உணவாகத் தந்தால், அது அவைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கித் தரும்.

குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமல்லவா, மரங்கள் இயற்கை அளித்த கொடை என்பது.    நாங்கள் உங்களுக்கு காய், கனி, நிழல், குளிர்ச்சி தருவதோடு, நீங்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்ûஸடை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவைத் தருகிறோம். அது மட்டுமா, இதனால் புவி வெப்பமயமாவது குறைவதுடன், மண்ணில் வேர் பிடிப்பு இருப்பதால் மண் அரிப்பையும் தடுக்கிறோம்.  மரங்களைச் சுற்றி நீர் சேர்வதால், நிலத்தடி நீரும் சுத்தமாகிறது.

எங்களை அழிப்பவர்களுக்கு நாங்கள் நிழல் தந்து உதவுவோடு, மரங்களை வெட்டும் கோடாரிக்கும்  கைப்பிடி செய்ய உதவறோம்.   மரங்களைப் பாதுகாக்க உங்களுக்கும் மனம் வர வேண்டும் குழந்தைகளே. மரங்கள் இல்லையெனில், சுற்றுப்புறத் தூய்மைக் கெடும். அதனால், உங்கள் உடல்நலமும் சீர்க்கெடும்.    மரங்கள் நீங்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான காற்றை சுத்தப்படுத்துவதுடன், கண்களுக்கு குளிர்ச்சியான பசுமையையும் அளிக்கின்றன. நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

Tags : சங்கக் காலத்தவன் - எறுழம் மரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT