சிறுவர்மணி

சகோதரன்!

29th May 2021 04:16 PM | எ.சோதி

ADVERTISEMENT

 

விஸ்வஜித் என்ரு ஒரு அரசர் இருந்தார். அவனுக்கு ஆதிரையர் என்று ஒரு அமைச்சர் இருந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவர்.
ஒருநாள் அரசனும் ஆதிரையரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அரசனைப் பார்க்க ஒரு இளைஞன் வந்தான்.
அவன் நேரே அரசனிடம் சென்று, ""எனக்கு செலவுக்கு 200 பொற்காசுகள் வேண்டும்! உடனே தா!'' என்று ஒருமையில் அரசரை அழைத்துக் கேட்டான். அரசனும் உடனே பொற்காசுகளை அவனுக்கு வழங்கிவிட்டு, அவனிடம், ""தம்பி முத்து!.... இப்படி வீண் செலவு செய்துகொண்டு ஊர்சுற்றிக்கொண்டு இருக்காதே.... ஏதாவது வேலை செய்து பிழைப்பாய்!'' என்று அறிவுரை கூறினான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர் ஆதிரையருக்கு ஆச்சரியமாக இருந்தது. "என்ன இது?... இந்த அரசர் இப்படி இருக்கிறாரே,.... யார் இந்த இளைஞன்.... அரசரை ஒருமையில் அழைக்கிறானே...' என்று பலவாறாக நினைத்தார்.
அமைச்சர் அரசரிடம், ""அரசே உங்களிடம் உரிமையுடன் பொற்காசுகளைப் பெறுகிறானே.... இவன் யார்?'' என்று கேட்டார்.
அரசரும் அமைச்சரிடம், "" அமைச்சரே இவன் பெயர் முத்து,.... நான் குழந்தையாக இருந்தபோதே என் தாயார் இறந்துவிட்டார். அப்போது அரண்மனைப் பணிப்பெண்ணாக இருந்த இந்த முத்துவின் தாயார்தான் எனக்கும் தாயாக இருந்தாள். நானும் இவனும் அந்தத் தாயின் பாலைக் குடித்தே வளர்ந்தோம். சொல்லப்போனால் இவன் என் சகோதரன். படிப்பு வராமல் ஊர் சுற்றித் திரிகிறான். முரடன். என்ன செய்வது?... இவன் எது கேட்டாலும் நான் இல்லை என்று சொல்வதில்லை.'' என்றார்.
அமைச்சர் தன்னைப்பற்றி விசாரிப்பதுமுத்துவுக்கு சற்றும் பிடிக்கவில்லை. முத்துஅரசரை நோக்கி, ""அறிவு நிறைந்த அமைச்சர் துணையாக இருப்பதால் நீ புகழுடன் இருக்கிறாய்.... இந்த அமைச்சரை என்னுடன் அனுப்பி வை.... நானும் உன்னைப் போல் பெருமை பெறுவேன்....'' என்று மரியாதையின்றி ஒருமையில்அரசனிடன் கூறினான்.
அமைச்சரைப் பார்த்தார் அரசர். அமைச்சருக்கு அரசரின் எண்ணம் புரிந்தது.
""அரசே!.... தங்கள் சகோதரருடன் என்னை அனுப்ப நினைக்கிறீர்கள்..... ஆனால் நான் தங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்....உங்கள் சகோதரனைப் போலவே என்னுடன் பால் குடித்து வளர்ந்த சகோதரன் ஒருவன் இருக்கிறான்.... நாளை அவனை உங்கள் சகோதரனுடன் அனுப்பி வையுங்கள்....'' என்றார்.
மறுநாள் அரசவைக்கு எருமை மாடு ஒன்றை இழுத்து வந்தார் அமைச்சர். அவர் அரசரிடம், ""இந்த எருமை மாடுதான் என் சகோதரன்!.... நான் குழந்தையாக இருந்தபோது இந்த எருமை கன்றாக இருந்தது.... இதன் தாயின் பாலைக் குடித்து
நாங்கள் இருவரும் வளர்ந்தோம்.... எனவே என் சகோதரனான இந்த எருமைமாட்டை உங்கள் சகோதரனுடன் அனுப்பி வையுங்கள். இதன் அறிவுரையைக் கேட்டு உங்கள் சகோதரர் பேரும் புகழும் அடைவார்....''
அந்த இளைஞனைப் பார்த்து சபையோர் சிரித்தார்கள்.
அறிவுடைய பெரியோரைச் சீண்டி அவமானப் பட நேர்ந்ததே என்று எண்ணி வெட்கித் தலைகுனிந்தான் முத்து.

Tags : சகோதரன்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT