சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: சர்வதேச மருத்துவ மரம் - வீரை மரம்

15th May 2021 04:32 PM | - பா.இராதாகிருஷ்ணன் 

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா, 

நான் தான் வீரை மரம் பேசறேன்.  என் தாவரவியல் பெயர் டிரைபீட்டஸ் செபியேரியா என்பதாகும். நான் ஈப்போர்பியேசிய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சுடர் வீரை, நல்வீரை என்ற வேறு பெயர்களுமுண்டு.  என் தாயகம் இந்தியா.  நான் இலங்கையிலும் அதிகமா காணப்படறேன்.  சுமாரான மண்ணில் கூட, வறட்சியைத் தாங்கி நன்கு வளருவேன். நான் ஒரு பசுமை மாறா மரமாவேன்.  அக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசித்த பழங்குடிகள் பல நூறு ஆண்டுகளாக நோய்கள் பல தீர்க்கும் மூலிகை மரமா என்னை வளர்த்து வந்திருக்காங்க. நான் பெயருக்கேற்றப்படி தான் இருப்பேன். உலர்ந்த வீரை மரங்களில் ஆணி அடிப்பதே மிகவும் சிரமம் என்றால், என் உறுதியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். 
குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா ? நான் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டையில் எங்கும் வியாபித்திருந்தேன்.  அப்போது அந்த ஊரின் பெயர் சாக்கோட்டை அல்ல, வீரைவனம்.  
என் பழங்கள் முட்டை வடிவில் இரத்த சிவப்பு நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். சுவை மிக்கது, புளிப்புத் தன்மையுடன் இருக்கும்.   அதே சமயத்தில் சத்துகள் பல நிறைந்தது.   ஆனால், உண்டவுடன் தண்ணீரால் வாயை கொப்பளித்து விட வேண்டும். இல்லையெனில் பற்களில் கறை படியும். வீரைப் பழத்தில் ஜாம் செய்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.  என் பழங்களை என் நண்பர்கள் யானையும், கரடியும் ருசித்து சாப்பிடுவாங்க. என் பூக்கள் கொத்து கொத்தாக இருக்கும்.  
என் இளம் இலைகள் பசுமையாகவும், முதிர்ந்த இலைகள் கரும்பச்சை நிறமாகவும் இருக்கும். என் இலைகளை வெந்நீரிலிட்டு அருந்தினால் செரியாமை, காய்ச்சல், சிறுநீரகப் பிரச்னைகள், நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகள், ஜலதோஷம் அடியோடு தீரும்.  என் இலைகளை பசிய அரைத்து கை, கால் வீக்கம், கட்டிகள் மீது தடவினால் அவை இருந்த இடம் தெரியாது.  இது கீல்வாதம், மூட்டுவலிக்கும் அருமருந்து.  நான் வைரமாக, அதாவது வைரம் பாய்ந்த உள்ளமைப்பு உறுதியைக் கொண்ட மரமாகயிருப்பினும், நார்த் தன்மையானதால் என்னை உதிரி உபயோகங்களுக்கும், எளிதில் உடையாத மர பொம்மைகள் செய்வதற்கும், மரக் கரண்டிகள் செய்வதற்கும் நான் உதவுவேன். ஏழை, எளிய மக்களுக்கு அடுப்பெரிக்கவும் நான் உதவுவேன். வேலிகளில் கம்பி கட்டையாகவும் என்னை பயன்படுத்தலாம்.   
குழந்தைகளே, மரம் என்பது ஓர் உயிர். மனிதர்களும், விலங்கினங்களும் தோன்றுவதற்கு முன்பே நாங்கள் இந்த பூப்பந்தில் வாழ்ந்து வருகிறோம்.  உங்களுக்குத் தெரியுமல்லவா, ஒரு மரம் ஆண்டொன்றுக்கு ஒரு டன் கரியமில வாயுவை உட்கொண்டு மனிதர்கள் நல்லபடியாக சுவாசிக்க பிரணா வாயுவை வெளியிடுகிறது.  அதோட, காற்று மண்டலத்தைத் தூய்மைப்படுத்துவதில் நாங்கள் முதலிடத்தில் நிற்கிறோம். குழந்தைகளே, மண்ணிலிருந்து பல விதமான சத்துகளை மரங்கள் வேர்கள் மூலமாக உட்கிரகிக்கின்றன. அந்தச் சத்துளை இலை, காய், பழங்கள் மூலமாக உயிரினங்களுக்கு திரும்பக் கொடுக்கும் வள்ளல்களாக மரங்கள் விளங்குகின்றன. 
மனிதர்கள் தங்கள் சுயலாபத்திற்காக காடுகளை அழிப்பதால், காட்டு வளம் அழிக்கிறது.  காடுகளை நம்பி வாழும் உயிரினங்கள், உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் நிலங்களை நோக்கி ஓடி வருகின்றன. விளைவு, விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் மோதல். இதனால், அரிய பல உயிரினங்கள் அழிந்து வருவதை நீங்கள் செய்தித் தாள்கள் வாயிலாக அன்றாடம் படிக்கிறீர்கள் அல்லவா.  காடுகள் அழிக்கப்படுவதால் தான் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்படுகிறது.  காட்டின், நாட்டின் எதிர்க்காலம் உங்கள் கையில் குழந்தைகளே. காடுகளும், அதில் வாழும் உயிரினங்களும் இயற்கையின் சொத்து.  அதை அழித்து மனிதன் உயிர் வாழ நினைப்பது, இலவுக் காத்த கிளி கதையாகி விடாதா. நான் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை, அருள்மிகு வீரசேகரர் திருக்கோவிலில் நான் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

ADVERTISEMENT

Tags : சர்வதேச மருத்துவ மரம் - வீரை மரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT