சிறுவர்மணி

கருவூலம்: மகாராஷ்டிரா    மாநிலம்!

கே.பார்வதி

மகாராஷ்டிரா மாநிலம்! இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குஜராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கில் சத்தீஸ்கர், தெற்கில் கர்நாடகம், தென்கிழக்கில் தெலுங்கானா மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. முதல் மாநில சீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராஷ்டிரா மாநிலம் மே 1, 1960 - இல் உருவானது. இம்மாநிலம் முந்தைய பம்பாய், தக்காணம், விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 

இம்மாநிலத்தின் பரப்பளவு 30,7,731 ச.கி.மீ. ஆகும். இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.34 % ஆகும். பரப்பளவில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. இம்மாநிலத்தின் தலைநகரம் மும்பை மாநகரமாகும். புணே மற்றும் நாக்பூர் மாநிலத்தின் மற்ற பெரிய நகரங்களாகும். சிறப்பான நிர்வாகத்திற்காக இம்மாநிலம் 36 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரா இந்தியாவின் செல்வ வளம் மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 
மகாராஷ்டிரா 720 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது.  மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் கூடிய காடுகள் அடர்ந்த பகுதிகளும் இம்மாநிலத்தில் உள்ளன. 
கிருஷ்ணா, பீமா, கோதாவரி, டாபி, பூர்ணா மற்றும் வர்தா - வைங்கங்கா ஆகியவை மாநிலத்தின் முக்கிய நதிகளாகும். அரிசி, முந்திரி, மாம்பழம், காய்கறிகள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், புகையிலை ஆகியவை இங்கு விளையும் முக்கியப் பயிர்களாகும். 

சுற்றுலாத் தலங்கள்! 

எல்லோரா குகைகள்!

ஒளரங்காபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது எல்லோராக் குகைகள். இது மகாராஷ்டிராவின் புகழ் பெற்ற தொல்லியற்களமாகும். இங்கு புகழ்பெற்ற எல்லோரா குடைவரைகள் உள்ளன. எல்லோரா ஒரு "உலகப் பாரம்பரியக் களம்' ஆகும். சரணந்திரிக் குன்றுகளின் செங்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. பெரியதொரு மலையைக் குடைந்து இவை அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 
இக்குகைகளில் பெளத்த, சமண, இந்துக் கோயில்களும் துறவிகளுக்கான மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 - ஆம் நூற்றாண்டுக்கும் 10 - ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. இங்கு 12 பெளத்த குகைகள், 5 சமணக் குகைகள்,  மற்றும் 17 இந்துக் குகைகள் அமைந்துள்ளன. இக்
குகைகள் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. 

பெளத்தக் குகைகள்!

இங்கு இவை முதலில் அமைக்கப்பட்டவை. பல அடுக்குகளைக் கொண்ட துறவிகளின் தங்குமிடங்கள் இங்குள்ளன.

 சமணக் குகைகள்! 

சமண தத்துவங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை.
இந்துக் குகைகள்! 
இவை கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை! சிறப்பான வடிவமைப்பையும் நுட்பமான வேலைப்பாடும் கொண்டவை. கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 - ஆம் எண்ணுடைய குகை அனைத்துக் குகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

எல்லோரா கைலாசநாதர் கோயில்!

இக்கோயில் ஒற்றைக் கல்லால் ஆனது. பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயில் கட்டப்பட்டதாம். நான்கு லட்சம் டன் பாறைகள் இக்கோயிலுக்காகக் குடைந்தெடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 250 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட 37,500 சதுர அடி நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. அதில் 148 அடி நீளமும், 62 அடி அகலமும், 100 அடி உயரமும் உடையதாக இந்த ஆலயம் உள்ளது!

அஜந்தா குகைகள்!

ஒளரங்காபாத்திலிருந்து 107 கி.மீ. தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் காணப்படும் குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ள கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இங்கு புத்த மதச் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. இவை புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரிக்கின்றன. 
இக்குகைகள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 - ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இவை இந்திய தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்
படுகின்றன. இவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
இங்கு நடந்த பல்வேறு கட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 குகைகள் பெளத்த வழிபாட்டு இடங்கள். எஞ்சியவை துறவியர் தங்கும் விகாரங்கள். இங்குள்ள குகைகளில் கலைநயம் மிக்க தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் போன்றவை உள்ளன.
அஜந்தா குகை ஓவியங்கள் இயற்கை முறையில் வர்ணம் தீட்டப்பட்டவை. கி.மு.200 முதல் கி.பி. 650 வரையிலான பல்வேறு காலங்களில் வரையப்பட்டவை. இவை தனித்தன்மை வாய்ந்தவை. இன்றும் சில ஓவியங்களில் வண்ணங்கள் மங்காமல் உள்ளன. 

ஜோதிர் லிங்க தலங்கள்!

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் 3 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளன. அவை திரியம்பகேஸ்வரர் கோயில், பீமா சங்கர் கோயில், கிரீஷ்னேஸ்வரர் கோயில் ஆகியவை ஆகும். 
திரியம்பகேஸ்வரர் கோயில் நாசிக் மாவட்டத்தில் உள்ளது. கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. அழகிய சிற்பங்களுடன் கலைநயமிக்க கோயில் இது.

பீமா சங்கர் கோயில்!

இக்கோயில் புணே மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் பாங்கினி என்ற இடத்தில் ஒரு குன்றின் மீது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளுக்கு இடையே பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது!

கிரீஷ்னேஸ்வரர் கோயில்!

எல்லோரா குகையிலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆலயம் மிகப் பழமையானது. தற்போது உள்ள கட்டிடம் 18 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

தாராசிவா குகைகள்!

உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பே தாராசிவா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இது மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். 
இக்குடைவரைகள் கி.பி. 7 - ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவையாகும். இதன் மைய மண்டபத்தில் புத்தரின் சிலையம் உள்ளது. அஜந்தா, எல்லோரா வடிவமைப்பில் ஒரு குகை உள்ளது. முதலாம் குகை 20 கல் தூண்களைக் கொண்டது. இவற்றில் நான்கு குகைகள் சமணர்களுக்கானவை.

அஹமத் நகர் கோட்டை!

மத்திய மகாராஷ்டிரத்தில் உள்ள இந்த வட்ட வடிவ கோட்டை கி.பி. 1490 - இல் கட்டப்பட்டது. 18 மீ உயரமான சுற்றுச் சுவரையும் ஆழமான அகழியும் 
கொண்டது.
பண்டிட் ஜவாஹர்லால் நேரு 1944 - இல் இந்தக் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதுதான் "டிஸ்கவரி ஆஃப் இந்தியா' நூலை எழுதினார். 1942 - 45 வரை சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலர் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். தற்போது இக்கோட்டை ராணுவப் பயன்பாட்டில் உள்ளது.  சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கின்றனர். 

ஹரிச்சந்திர காட் கோட்டை!

அகமது நகர் மாவட்டத்தில் உள்ளது இக்கோட்டை.  குன்றுகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது. "கொங்கன் கடா' குன்று மலையேற்றத்திற்குச் சிறந்ததாகும். இங்குள்ள ஹரிச்சந்திரா கோயிலில் உள்ள நந்தியும், சிவலிங்கமும் பிரமிக்க வைப்பவை. தாராமதி, ரோஹிதாஸ் மற்றும் ஹரிச்சந்திரா ஆகியவை ஹரிச்சந்திரா காட்டில் உள்ள மூன்று சிகரங்களாகும். ஹரிச்சந்திராகாட் சிகரத்திலிருந்து ஒரு நாணயத்தை கீழ் நோக்கி வீசினால் அது புவிஈர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கித் தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தைக் காணலாம்.

ஷிவ்னர் கோட்டை!

சத்ரபதி சிவாஜி 1627 - இல் இக்கோட்டையில்தான் பிறந்தார். இந்தக் கோட்டை மிக உயரமானது. தனித்துவமானது. இதனை அடைவதும் மிகக் கடினமானது. கோட்டையை அடைவதற்குமுன் 7 கதவுகள் மூலமாகச் செல்ல வேண்டும். இங்கு தேவி சிவாய் கோயில் உள்ளது. 
இவற்றைத் தவிர அர்னால் கோட்டை, பஸீன் கோட்டை, சக்கன் கோட்டை, கலில்காட் கோட்டை, காந்தர் கோட்டை, மும்பை கோட்டை உள்ளிட்ட பத்தொன்பது கோட்டைகள் இம்மாநிலத்தில் உள்ளன.

அவுண்டா நாகநாதர் கோயில்!

இந்த ஆலயம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள அவுண்டா நாகநாத்தில் உள்ளது. இந்தக் கோயில் 13 - ஆம் நூற்றாண்டில் தேவகிரி யாதவ மன்னர்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இக்கோயிலானது பாண்டவர்கள் தங்கள் 14 ஆண்டு வனவாசத்தின்போது தருமனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. கோயில் விமானமானது வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் உயரமாக சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது.

பாஜா குகைகள்!

இக்குகைகள் புணே மாவட்டத்தில் 400 அடி உயரத்தில் உள்ள ஒரு குன்றில் உள்ளன. இக்குகைகளில் 14 ஸ்தூபிகள் உள்ளன. இக்குகைகள் அழகிய மரவேலைப்பாடுகளுக்குப் புகழ் பெற்றவை. குகை எண் 29 - இல் தேரோட்டும் சூரியன், யானைச் சவாரி செய்யும் இந்திரன் மற்றும் நுழைவாயிலில் துவார பாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. இக்குகைகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT