சிறுவர்மணி

அரங்கம்: அக்னி குஞ்சுகள்

சூடாமணி சடகோபன்

காட்சி - 1
இடம்: திருச்சி. வங்கி அதிகாரி ராஜனின் வீடு
மாந்தர்கள்: ராஜன், மகள் ராதிகா, மகன் ரவி மற்றும் மனைவி ராகவி.
(ராஜன் என்றைக்கும் இல்லாமல் அலுவலகத்திலிருந்து பிற்பகல் மூன்று மணிக்கே, தனக்கு வந்த மாற்றல் கடிதத்துடன் வீட்டிற்குத் திரும்பி வருகிறார்)

ராஜன் : என் அருமை குழந்தைகளே, உங்களுக்கெல்லாம் நான் ஒரு புதிய செய்தி சொல்லப் போறேன். நாம வேற ஒரு புதிய ஊருக்குப் போக போகிறோம்!.
ராகவி: என்ன சொல்றீங்க?
ராஜன்: ஆமாம் ராகவி! நாம இந்த ஊருக்கு வந்து ஆறு வருடங்களுக்கு மேல ஆகி விட்டது !. அதனால் என்னை எட்டயபுரம் கிளைக்கு மாற்றி விட்டார்கள்! இன்னும் இரண்டு நாட்களுக்குள் நான் அந்த கிளையில் சேர வேண்டும் .
ராதிகா: அப்பா, அப்ப நம்ம தோட்டத்துல வளருகின்ற செடி கொடி மரங்களையெல்லாம் யாரு பாத்துப்பாங்க? ரோஜா, மல்லி, கனகாம்பரம், சாமந்தி, பவழமல்லி னு விதம் விதமா பூக்கள் வேற பூக்கத்தொடங்கிடுத்து!
ரவி: அப்பா! இப்பத்தான், நம்ம தோட்டத்துல பழங்களெல்லாம் கூட கொத்துக் கொத்தாக காய்க்க ஆரம்பிச்சிருக்கு.!
ராதிகா: ஆமாம்பா! கொய்யா, மாதுளை, மாம்பழம், சப்போட்டா, வாழை, பப்பாளி, எலுமிச்சைனு ரொம்ப ஜோரா காய்ச்சுக்கிட்டு வருது !
ராகவி: ஆமாங்க!! கத்திரி, வெண்டை, பாகல், தக்காளினு எல்லாம் நம்ம வீட்டுலேயே நல்லா காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. இந்த சமயத்துல நாம நம்ம தோட்டத்தை அப்படியே விட்டுட்டு போயிட்டா, அத்தனை செடி கொடிகளும் செத்துடுங்க பாவம்!

காட்சி-2
இடம்: எட்டயபுரம் செல்லும் பாதை.
நேரம்: மறுநாள் மதியம் 12 மணி.
மாந்தர்கள்: ராஜன், மனைவி ராகவி, மகள் ராதிகா மற்றும் மகன் ரவி.
( அனைவரும் எட்டயபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருக்கிறார்கள்.)

தந்தை ராஜன்: குழந்தைகளா! நான் என்னுடைய அலுவலகத்திற்கு மாற்றலாகிப் போவதை போல நீங்களும் உங்களது பள்ளியை மாற்றி கொண்டு போவதற்கு எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
ராதிகா: அப்பா! என்னால நம்ம வீட்டுத் தோட்டத்தையும் எங்க பள்ளியையும் விட்டுட்டு வர முடியாது.
ரவி: ஆமாம்பா! நான் கூட வர மாட்டேன்பா!
ராகவி: ஏங்க!. அப்ப ஒன்னு பண்ணுங்க, நான் நம்ம ரெண்டு பிள்ளைங்களையும் வெச்சுக்கிட்டு, நம்ம வீட்டுத்தோட்டத்தையும் பாத்துக்கிட்டு இங்கயே இருக்கேன். நீங்க எட்டயபுரத்தில் தனியா ஒரு வீட்டையெடுத்துக்கிட்டு தங்கிடுங்க. யாருக்கும் ஒரு தொந்தரவும் இல்லை.
ராதிகா: ஆமாம்பா! நானும் தம்பியும் பள்ளி விடுமுறை நாட்களில் எட்டயபுரத்திற்கு அம்மாவோட வந்து உங்களோட தங்கிட்டு போகிறோம்.
ராகவி: ஆமாங்க! நம்ம பிள்ளைங்க சொல்றது தான் சரிங்க!

காட்சி - 3
இடம்: எட்டயபுரம் அருகில்.
நேரம்: மாலை 5 மணி
(அவர்கள் பயணிக்கும் கார் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. வழியெங்கும் மரங்கள் இன்றி பொட்டல் காடாய் இருக்கின்றது)

ராதிகா:அப்பா,என்னப்பா!மரம்,செடி,கொடிகள்னு ஒன்னு கூட கண்ணுல படல !
ரவி : ஓ!அதுனாலத் தான் இங்கு ஆறு, ஏரி, குளம், கண்மாய்னு ஒன்னுத்தயும் காணலியா?. மரம் செடி கொடின்னு இருந்தாத்தானே கொஞ்சம் நஞ்சம் மழையாவது பெய்யும்!
ராகவி: அப்ப இந்த ஊர்ல வெயில் ரொம்ப ரொம்ப அதிகமாயிருக்குமே? நாம பிள்ளைங்களை வெச்சுகிட்டு எப்படிங்க இங்க வசிக்க முடியும்?
ரவி: நான் திருச்சியையும் நம்ம தோட்டத்தையும் விட்டுட்டு வர மாட்டேன்பா.
ராதிகா: ஐடியா!.. நாம ஒன்னு பண்ணாலாமா?
ராஜன்: பண்ணலாமே!. .இந்த ஊருக்கு உபயோகமாக இருக்கும்னா, ஜோரா பண்ணலாமே!
ராதிகா: அப்ப நான் சொல்றதை உடனே பண்ணுங்க! நாம எட்டயபுரம் போனதும், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பிறகு, எனக்காக இரண்டு கோணி மூட்டை நிறைய களிமண், மூணு கிலோ விதைகளையும் வாங்கிட்டு வாங்க!. பார்த்து எல்லா விதமான விதைகளையும் வாங்கிட்டு வாங்க! ஈரம் போகாத நல்ல நல்ல விதைகளா நல்லா பார்த்து வாங்கிட்டு வாங்கப்பா.
ராஜன்: இதையெல்லாத்தையும் வெச்சுகிட்டு என்னம்மா பண்ணப் போறீங்க?.
ராதிகா: உஷ்!. பண்ணி முடிச்சப்புறம் கேளுங்கப்பா.

காட்சி -4
இடம்: எட்டயபுரம்
மாந்தர்கள்: ராஜன்,ராகவி,ராதிகா மற்றும் ரவி.
( ராதிகாவும் ரவியும் தந்தை ராஜன் கொண்டு வந்த களிமண்ணை பிசைந்து ஒரு பந்து போல உருண்டையாக உருட்டி, விதைகளை அதன் நடுவில் வைத்து விதை பந்துகளை தயார் செய்கின்றனர்.)

ராஜன்: இந்த விதை பந்துகளை வைத்து என்ன விளையாடப் போறீங்களா?
ராதிகா: அப்பா.. இந்த விதை பந்துகளை மரங்கள் இல்லாத இடத்தில் தூவினால், அவை மழைக்காலத்தில் நன்றாக முளைக்க ஆரம்பித்து விடும். மரங்கள் இருந்தால்தானே மழையும் பெய்யும். புதுப்புது மரம்,செடி முளைக்கும்:
ரவி: அப்பா, வெறும் விதைகளை மட்டும் தூவி விட்டால், அவற்றை எறும்புகளும், பறவைகளும் கொத்தித் தின்று விடும். அப்புறம் புதுப்புது காடுகள் எப்படி உருவாகும் ?
ராதிகா: ஆமாம்பா!களிமண்ணால் செய்த இந்த விதை பந்துகள், விதைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மழைத்துளிகள் விழுந்த உடன், ஈரத்தை உறிஞ்சி, விதைகளை முளைக்கச் செய்து விடும்
(அந்த ஞாயிற்று கிழமை, ராதிகா மற்றும் ரவி தந்தையுடன் அவர்களது காரில் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சென்று தாங்கள் செய்திருந்த விதை பந்துகளை தூவிவிட்டு வருகின்றனர் பிறகு தங்கள் தாய் ராகவியுடன் பள்ளியைத் தொடர்வதற்காக திருச்சிக்கு திரும்புகின்றனர்.)

காட்சி - 5
இடம்: எட்டயபுரம்
காலம்: ஒரு வருடம் கழித்து!
மாந்தர்கள்: ராஜன்,ராகவி,ராதிகா மற்றும் ரவி.


(பள்ளி விடுமுறை நாட்களைக்கழிக்க எட்டயபுரத்திற்கு ராதிகா ,ரவி தங்களது தாய் ராகவியுடன் வருகின்றனர். அவர்கள்
எட்டயபுரத்தில் பார்த்த இடங்களிலெல்லாம் பச்சை பசேலென்று மரங்கள், செடிகள், கொடிகள் முளைத்திருப்பதை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். திடீரென்று பெய்த கோடை மழையில் நனைந்து விளையாடி மகிழ்ந்தனர்...... இந்த முறை எட்டயபுரம் அவர்களுக்கு குளுகுளுவென்றிருந்தது. பல புதிய குட்டைகள் உருவாகியிருந்தன. அவற்றில் ஆடு மாடுகள் மகிழ்ச்சியுடன் நீர் அருந்தி, குளித்து, முழுகி விளையாடிக் கொண்டிருந்தன. பழ மரங்களைத் தேடி, பல புதிய பறவைகளும் அந்த ஊருக்கு குடியேறியிருந்தன. மொத்தத்தில் மரங்கள் முளைக்க ஆரம்பித்தவுடன் எட்டயபுரத்திற்கே ஒரு அழகான களை தோன்றியிருந்ததை அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.)

ராதிகா: அப்பா! அடுத்த வருடம் நாங்களும் ஒங்க கூடவே வந்து இங்க தங்கப் போகிறோம் !)
ரவி: நம்ம வீட்டை வாடகைக்கு விட்டுடலாம்பா!.... அவங்களை நம்ம தோட்டத்தைப் பார்த்துக்கச் சொல்லலாம்பா.... ஆமாம்பா! எட்டயபுரத்துலேயே எங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல பள்ளிக்கூடமாக பார்த்து சேர்த்து விடுங்கப்பா. இந்த ஊரு எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுதுப்பா!.
(தந்தை ராஜனும் தாய் ராகவியும் தங்களது பிள்ளைகளைப் பெருமையுடன் பார்த்து விட்டு உச்சி முகர்ந்து மகிழ்ந்தனர்.)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT