சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!:  விசையுறும் பந்து!  - பாட்மின்டன் பந்து மரம்!

31st Jul 2021 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா?

நான் தான் பாட்மின்டன் பந்து மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பார்க்கியா பிக்லாண்டுலோசா என்பதாகும். நான் மைமோசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் மலேசியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா. நான் 20 மீட்டர் உயரத்திற்கு செங்குத்தாக வளர்ந்து, கிளைகளைப் பரப்பி நல்ல தழைகளுடன் வளருவேன். என் பட்டைகள் சாம்பல் நிறத்திலிருக்கும். நான் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பூத்துக் குலுங்குவேன். என் இலைச் சந்துகளில், காம்புகளில் ஒன்றாகவோ அல்லது மூன்று வரையிலோ உருண்டையாக பூமஞ்சரிகளைக் காணலாம். இந்தப் பூமஞ்சரிகள் சிறு பந்து போன்ற உருவத்தைக் கொண்டிருக்கும். அதனால், என்னை பாட்மின்டன் பந்து மரமுன்னு அன்பா கூப்பிடறாங்க. முதலில் பழுப்பு நிறத்திலிருந்து பின் வெண்மை நிறமாக மாறும். நான் ஒரு அலங்கார அழகு மரமாவேன்.

நான் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, தூசியினை வடிகட்டி, உங்களுக்கு சுத்தமான காற்றைத் தருவேன். ஆனால், நீர் செழிப்புள்ள பகுதிகளில் மட்டுமே நான் வளருவேன்.

ADVERTISEMENT

என் கனி இனிப்பு சுவையுடையது என்பதால், இலைகளையும், காய்களையும் கால்நடைகள் விரும்பி உண்பார்கள். என் பூக்களில் அதிக அளவில் மகரந்தம் இருக்கும். இது ரம்மியமான நறுமணம் மிக்கதாக இருப்பதால் என்னை தேனீக்கள் நாடி வருவாங்க. என் பூந்தலையிலுள்ள மகரந்தத்தை நீரில் கலந்து பானமாகவும் அருந்தலாம். இது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

என் மரத்திலுள்ள அனைத்து பாகங்களும் பயன்கள் பல மிக்கவை. ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் என் மரத்தின் பல்வேறு பாகங்களைப் பயன்படுத்தி நோய்கள் பலவற்றை விரட்டி அடித்திருக்கிறார்களாம். குடல்புண், நுண்ணுயிர்கள் மற்றும் பூசணங்களால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைக் காக்கும் சக்தி எங்கிட்ட இருக்கு.

என் பட்டையில் டேனின் உள்ளதால், தோல் பதனிட என் பட்டைகளைப் பயன்படுத்தறாங்க. என் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இதில் ஸிடோஸ்டிரால் உள்ளது. மலேசிய நாட்டு மக்கள் என் விதையை முளைக்க வைத்து, வளர்ந்த நாற்றுக்களை சமைத்து உண்கிறார்கள். இதனால், நல்ல சத்தும், உடலுக்கு பலமும் கிடைக்கிறது என்று சொல்றாங்க.

நான் மிகவும் உறுதியானவன் என்பதால், பல்வேறு வேளாண் கருவிகள் செய்ய என்னை பயன்படுத்தலாம். கட்டட சாமான்களும் செய்யலாம். மரச் சட்டங்கள், பொம்மைகள் செய்ய நான் பெரிதும் பயன்படுகிறேன். ஏழை, எளிய மக்கள் அடுப்பெரிக்கவும் உதவுவேன்.

குழந்தைகளே, நீங்கள் உடல் நலமும், பலமும், செழுமையும், வளமும் பெற்று வாழ வேண்டுமானால் சுற்றுச்சூழலை மாசுபடாமல் காக்க வேண்டுமென்பதையும், அதற்கு மரங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பதையும் அறிவீர்கள் அல்லவா? உங்களுக்கு உயிர்க்காற்று தரும் மரங்களை அழிப்பதும், வனங்களை அழித்து வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதும், மழைவளம் குறைவதற்கும், புவி வெப்பம் மிகுந்து, நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் பாதையிட்டுக் கொடுக்கும் என்பதை நீங்கள் இப்போது நன்கு அறிந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். குழந்தைகளே, மரங்கள் உங்களின் நண்பன் என்பதை நீங்கள் மறவாதீர்கள். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

Tags : Siruvarmani Badminton ball tree!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT