சிறுவர்மணி

வித்தியாசமான பரீட்சை!

17th Jul 2021 06:00 AM | - நெ . இராமன்.

ADVERTISEMENT


நான்கு பள்ளி மாணவர்கள். நால்வருக்கும் மறுநாள் பரீட்சை! ஆனால் அவர்கள் படிக்காமல் விளையாடினார்கள்!

ஆசிரியரை ஏமாற்றுவதற்கு திட்டமிட்டார்கள். மறுநாள் தலையை நன்றாகக் கலைத்துக்கொண்டார்கள். வகுப்புக்குள் சென்று ஆசிரியரிடம், ""சார்!.... நாங்க நாலுபேரும் நேற்று ஒரு கோவில் திருவிழாவிற்குப் போனோம். திரும்பி வரும் வழியில் எங்கள் கார் பஞ்சர் ஆகிவிட்டது! வீடோ ரொம்ப தூரம். அருகில் மெக்கானிக் ஷாப் எதுவும் இல்லை. என்ன செய்வது?.... அதனால் காரைத் தள்ளிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தோம்! வீடு திரும்பும்போது ரொம்ப நேரமாகிவிட்டது! உடம்பும் சோர்வாகிவிட்டது! களைப்பினாலே நாங்க நாலு பேரும் தூங்கிட்டோம் சார்!.... பரீட்சைக்குப் படிக்க முடியலே!'' என்று பரிதாபமாக வேண்டினர்.

ஆசிரியரும் அவர்களிடம், ""அப்படியா? சரி,.... உங்க நாலு பேருக்கும் அடுத்த வாரம் தனியாகத் தேர்வு வைக்கிறேன். நல்லாப் படிச்சுட்டு வாங்க!'' என்றார்.

அடுத்த வாரம் தேர்வு நாள். மாணவர்கள் நால்வரும் உண்மையிலேயே நன்றாகப் படித்துவிட்டு வந்திருந்தார்கள்!

ADVERTISEMENT

ஆசிரியர் அவர்களைப் பார்த்து, தம்பிகளா!.... இது ஸ்பெஷல் தேர்வு!.... அதனால் நீங்க நாலுபேரும் வேறு வேறு அறைகளில் அமர்ந்து எழுத வேண்டும்!' என்று கூறினார்.

மாணவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள்தான் நன்றாகப் படித்துவிட்டு வந்திருந்தார்களே.....

ஆனால் கேள்வித்தாளில் இருந்த கேள்விகளைக் கண்டு மிரண்டு போனார்கள்! ஆசிரியர் இரண்டே கேள்விகள்தான் கேட்டிருந்தார்!

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு 10 நிமிடத்தில் பதில் அளிக்கவும்.

1.கோவில் திருவிழாவிற்கு நீங்கள் சென்ற காரின் பெயர் என்ன? - மதிப்பெண் 50
2.காரின் எந்த டயர் பஞ்சரானது? (ஏதேனும் ஒன்றை டிக் செய்யவும்) - மதிப்பெண் 50

அ . முன் பக்கம் வலது
ஆ . முன் பக்கம் இடது
இ . பின்பக்கம் வலது
ஈ . பின்பக்கம் இடது

திருதிருவென விழித்துக் கொண்டிருந்த நால்வரையும் வரச் செய்தார் ஆசிரியர். அவர்களிடம் ""பரீட்சையில் அதிக மதிப்பெண் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. உண்மையை மறைத்துப் பொய் கூறும் ஒழுக்கமற்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது!' என்றார்.

அதிலிருந்து அந்த நான்குபேரும் எதற்கும் பொய் கூறுவதில்லை!

Tags : Siruvarmani Strange exam!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT