சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: அட்சயப் பாத்திரம் - திருவோடு மரம்

17th Jul 2021 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT


குழந்தைகளே நலமா, நான் தான் திருவோடு மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் மெக்ஸிகன் காலா பேஷ் என்பதாகும். நான் பிக்கோனியசேஸி குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் தெற்கில் உள்ள கோஸ்டாரிக்கா வரை உள்ள பகுதிகளாகும். நான் ஒரு குளிர்ச்சி விரும்பி. அதனால் குளிர்ச்சி நிறைந்த வடமாநிலங்களில் நான் அதிகமாகக் காணப்படுவேன். நான் ஹிமாசலப்பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படுகிறேன். வடமாநிலங்களில் என்னை திருவோடுக்காக வளர்க்கிறாங்க. எனவே தான் குழந்தைகளே, எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பா எனக்கு "திரு' என்ற அடைமொழியைக் கொடுத்திருக்காங்க.

தென் அமெரிக்க கண்டம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நான் அதிகமாக இருக்கேன். தமிழ்நாட்டில் உள்ள சில சைவ மடங்களிலும் என்னை நீங்கள் காணலாம். நான் 8 மீட்டர் உயரத்துக்கு வளரக் கூடிய ஒரு சிறு மரமாவேன். என் காய்கள் நாகலிங்க மரத்திலிருக்கும் காய்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். அது மாங்காயை விட அளவில் பெரியதாக இருக்கும்.

குழந்தைகளே, நீங்கள் திருக்கோவில்களின் அருகில் துறவிகள் தங்கள் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டியது போன்று ஒரு பாத்திரம் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதன் மூலம் அவர்கள் வீடுகள்தோறும் சென்று உண்ண உணவு சேகரிப்பது வழக்கம்.

இந்தத் திருவோடு என் காயிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு அதிசய செய்திதானே. அதை, அட்சய பாத்திரம், கபாலம் என்றும் அழைப்பார்கள். என் மரத்தின் பெரிய காயை வெட்டிக் காய வைத்தால் திருவோடு தயாராகிவிடும்.

ADVERTISEMENT

நம் நாட்டில் துறவிகள் மட்டுமே திருவோடுகளில் உணவை உண்கின்றனர். அவர்கள் என் காயைக் கொண்டு தயாரித்த திருவோட்டை பயன்படுத்துவதிலும் காரணம் இருக்கிறது குழந்தைகளே. என் மரத்தின் இந்த ஓட்டில் உணவை வைப்பதன் உணவு எக்காரணத்தைக் கொண்டும் விரைவில் கெடாது, உடலுக்கும், உள்ளத்திற்கும் வலு கொடுக்கும்.

நான் பெரிய மலர்களை, தண்டு மற்றும் கிளைகளுக்கு அடிப்பகுதியில் கொண்டிருப்பேன். மாலை நேரத்தில் என் பூக்கள் பூத்து நறுமணத்தை வீசும். இந்த வாசனைக்கு மயங்கி சிறிய வகை வெளவால்கள் என்னை நாடி வந்து, தேன் எடுத்து பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுறாங்க. என் மலரின் அமைப்பு, அளவு, நிறம், மணம், பூக்கும் நேரம் மற்றும் தேனை கொடுக்கும் தன்மை ஆகியவற்றால் வெளவால்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதிக நறுமணமுள்ள தேனை நான் கொடுப்பதால், வெளவால்களின் கோடை கால தாகத்தைத் தீர்க்கும் தன்மை என் பூக்களுக்கு உண்டு.

என் பழங்கள் உடைக்க இயலாத அளவுக்கு மிகவும் கடினத் தன்மை வாய்ந்தது. இதன் சுற்றளவு சுமார் 7 முதல் 10 செ.மீ. அளவு இருக்கும். என் பழத்திற்குள்ளிருக்கும் சி-அலாட்டா விதைகளை குதிரையாலோ அல்லது மனிதர்களாலோ சாதாரணமாக பிரித்து விட முடியாது. குழந்தைகளே, யானையை போன்ற விலங்குகளால் தான் அது முடியும். இந்தப் பழம் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் குணாதிசயம் கொண்டது. ஏனென்றால், மற்ற பழங்களைப் போல் நிலத்தில் போட்டால் எளிதாக முளைக்காது. என் பழத்தில் இருக்கும் விதைகளை எளிதில் பிரிக்க முடியாது. மேலும், மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் ஓடுகளால் மூடப்பட்டுள்ளதால், காடுகளில் நான் பரந்து வளராமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

என் காய்களில் காணப்படும் புரதச் சத்தோடு இணைந்த லிக்கோரைஸ், இனிப்புச் சுவை மிகுந்தது, உண்பதற்கும் ஏற்றது. ஹோண்டுராஸ், எல்சல்வடார் மற்றும் நிகாரகுவா போன்ற லத்தீன் - அமெரிக்க நாடுகளில் "செமிலா டெ ஜிகாரோ' என்ற பெயரில் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. என் காய் மற்றும் பழங்கள் உடைக்கப்பட்டு உணவு, பானங்கள் அடைக்கும் பொருள்களில் மூடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் என் திருவோட்டின் மீது கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் அழகான படங்களை வரைந்து தட்டு, கோப்பைகள் செய்து, விற்று லாபம் பார்க்கின்றனர். குழந்தைகளே, வனத்தை வளர்த்து, வளத்தைப் பெருக்குங்கள். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

Tags : Siruvarmani Thiruvodu tree
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT