சிறுவர்மணி

அரங்கம்: மீனாக்ஷியின் கனவு

17th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 


(இந்த அரங்கம் நாடகம் யார் எழுதினாங்கன்னு தெரியலே..... 
நன்றாக இருக்கிறது.  நாடகாசிரியருக்கு இப்போதைக்கு ஒரு பெயர்)
-பேரன்பன்-               

காட்சி: 1
இடம்: ஓலைக்குடிசை வீடு
காலம்: பின்சாமப் பொழுது
கதாபாத்திரங்கள்: எட்டுவயதுச் சிறுமி மீனாக்ஷி, அவள் வளர்க்கும் செல்லக்கிளி 
(ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மீனாக்ஷியின் கண்கள் இமைகளுக்குள் வேகமாகச் சுழல்கின்றன. அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள்.)

கிளி: என்ன மீனாக்ஷி கனவா?
மீனாக்ஷி: ஆமா? 
கிளி: தண்ணி குடிச்சிட்டுப் படு! சரியாப் போயிரும்!
மீனாக்ஷி: கெட்ட கனவு இல்ல! இது நல்ல கனவு!
கிளி: எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்! இப்ப படுத்துத் தூங்கு!
மீனாக்ஷி: காலைல எனக்கு கனவு மறந்து 
போயிரும்! இப்பவே சொல்றேன் கேள்!
கிளி: சரி! சொல்லு!
மீனாக்ஷி: நிறையக் குதிரைங்க காத்துல மிதந்து வர்ற மாதிரி இருக்கு! ஒரு பையில இருந்து பொற் காசுகள் தரைல சிதறி ஓடுது!
கிளி: அடேங்கப்பா! அட்டகாசமான கனவுதான்! அப்புறம்?
மீனாக்ஷி: பெரும் ஆரவாரத்துக்கு மத்தியிலே எனக்கு மகுடம் சூட்டுறாங்க! 
(கிளி இப்போது தனது கீச்சுக்குரலில் "கெக்கேபிக்கே' என்று உரக்கச் சிரிக்கிறது.) 

ADVERTISEMENT

மீனாக்ஷி: ஏன் சிரிக்கிற? 
கிளி: இது நல்ல கனவு இல்ல! நகைச்சுவை கனவு! கிச்சுகிச்சு மூட்டாம பேசாம படுத்துத் தூங்கு! மேற்கூரை ஓட்டை வழியா பார்த்தா நட்சத்திரம் தெரியுது! மகுடம் சூட்டுறாங்களாம் மகுடம்! 
(கிண்டலாகச் சொல்கிறது.)

காட்சி: 2
இடம்: கண்மாய்க் கரை   
காலம்;: காலைப் பொழுது
கதாபாத்திரங்கள்: மீனாக்ஷி, கிளி.
(மேய்ச்சல் நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. மீனாக்ஷியும் கிளியும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்கள்.)

கிளி: நீ குதிரைய இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா?
மீனாக்ஷி: இல்லை!
கிளி: பொற்காசு எப்படி இருக்கும்னு தெரியுமா உனக்கு!
மீனாக்ஷி: தெரியாது!
கிளி: மகுடம் சூட்டுறதெல்லாம் அரச குடும்பங்கள்ல்லதான் நடக்கும்! அன்றாட வாழ்வுல நடக்குற சம்பவங்கள்தான் கனவா வெளிப்படும்னு சொல்வாங்க! இதெல்லாம் எப்படி உன் கனவுலே வந்தது?.... (கிளி யோசிக்கிறது..... - பிறகு -) நீ வாசகசாலைல புத்தகம் படிப்பே இல்லையா? அதுல சித்திரக்கதைகள் உண்டா?
மீனாக்ஷி: நான் எழுத்துக்கூட்டி ராஜாராணிக் கதைகள் படிப்பேன்!
கிளி: அப்படிப் படிக்கும்போது நீ அதுல வர்ற கதாபாத்திரங்களோட ரொம்ப ஒன்றிப் போயிடறேன்னு நினைக்குறேன்! அதுதான் உனக்குக் கனவா வெளிப்பட்டுருக்கு!
மீனாக்ஷி: இருக்கலாம்! (ஆமோதிக்கிறாள்)

காட்சி: 3
இடம்: மீனாக்ஷியின் வீடு
காலம்: நண்பகல் பொழுது
கதாபாத்திரங்கள்: மீனாக்ஷி மற்றும் கிளி
(மீனாக்ஷி சந்தையில் ஆடு விற்று விட்டு வருகிறாள். கிளி வீட்டைக் காத்துக் கொண்டு இருக்கிறது.)

கிளி: என்ன மீனாக்ஷி! சீக்கிரமா வந்துட்ட? ஆடு என்ன விலைக்கு வித்த?
மீனாக்ஷி: நூறு பணம்! 
கிளி: பரவாயில்ல நல்ல விலைக்குத்தான் வித்துருக்குற! காசைப் பத்திரமா வை! 
(தரையில் அமர்ந்தபடி காசு இருந்த சுருக்குப் பையை அவிழ்க்கிறாள். கை இடறி காசுகள் தரையில் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றன.)

கிளி: மீனாக்ஷி! அவ்வளவும் தங்கக்காசு! (அலறுகிறது.) நீ ஆடுகளை எவ்வளவுக்கு வித்தேன்னு சொன்ன? 
மீனாக்ஷி: நூறு பணம்! 
கிளி: அப்புறம் எப்படி சாதா காசுகளுக்குப் பதிலா பொற்காசுகள்?
மீனாக்ஷி: அதான் எனக்கும் புரியல! (ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்கிறாள். கூரைப் பொத்தல்கள் வழியாக வந்த சூரிய வெளிச்சத்தில் தங்கக்காசுகள் ஜொலிக்கின்றன)
கிளி: மீனாக்ஷி! நீ கனவில் கண்ட அதே காட்சி! இந்தக் காசுகளை என்ன செய்யப் போறே?
மீனாக்ஷி: அவசரத்துல பைய மாத்திக் கொடுத்துட்டாருன்னு நினைக்குறேன்! செல்வந்தர் போல! இது நமக்குச் சொந்தமானது கிடையாது! அவருகிட்ட திரும்ப ஒப்படைக்கனும்!
கிளி: நல்ல முடிவு! ஒரு நிமிஷம்! சுருக்குப்பைல ஏதோ படம் போட்ட மாதிரி இருக்கு! நல்லாப் பிரிச்சுக் காமி! (பையைப் பிரித்துக் காண்பிக்கிறாள்.)
மீனாக்ஷி: பிறைநிலா! 
(இருவரும் வியப்புடன்  பார்க்கிறார்கள்.)

காட்சி: 4
இடம்: வாரச்சந்தை மற்றும் அங்காடித்தெரு 
காலம்: காலை முதல் பிற்பகல் வரை
கதாபாத்திரங்கள்: மீனாக்ஷி மற்றும் கிளி

(சந்தையில் கடந்த வாரம் தன்னிடம் ஆடு வாங்கிய ஆளை மீனாக்ஷி தேடுகிறாள்.)

கிளி: ஆள் எப்படி இருந்தார்னு சொன்ன?
மீனாக்ஷி: நல்லா சிவப்பா நெடுநெடுன்னு உசரமா இருந்தாரு!
கிளி: போனவாரம் சந்தைக்கு வந்தவரு இந்த வாரமும்  வருவார்னு எப்படி எதிர்பாக்குற?
மீனாக்ஷி: ஒரு நம்பிக்கைதான்! (சிலமணி நேரம் நின்று சந்தைக்கு வந்துபோகிறவர்கள் அனைவரையும் உற்றுப் பார்க்கிறாள். தென்படவில்லை.)
கிளி:  கடைத்தெருப் பக்கம் போயி பார்ப்போமா? அவரு ஒரு வியாபாரியா இருக்கலாம்ல?
மீனாக்ஷி: சரி போகலாம்! (இருவரும் அங்காடி வீதிகளில் சென்று தேடுகிறார்கள். தென்படவில்லை.)
கிளி: போனதடவை நான் உன்கூட சந்தைக்கு வராமப் போயிட்டேன்! வந்திருந்தா நானே எல்லா இடத்துக்கும் பறந்துபோயி ஒரு நிமிஷத்துல தேடியிருப்பேன்! இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை! இப்ப என்ன செய்யுறது?
மீனாக்ஷி: அவர்கிட்ட ஒப்படைக்குற வரைக்கும் இந்தப் பொற்காசுகளைப் பத்திரமா வைச்சிருக்க வேண்டியதுதான்! 
(இருவரும் வீடு திரும்புகிறார்கள்.)

காட்சி: 5
இடம்: வயல் வரப்புஓரம் 
காலம்: காலைப் பொழுது
கதாபாத்திரங்கள்;: மீனாக்ஷி, கிளி மற்றும் அரண்மனை சேவகர்கள்
(ஆடுகளைச் செம்மண் சாலையில் மீனாக்ஷி ஓட்டியபடி சென்று கொண்டிருக்கிறாள். அப்போது அரண்மனை சேவகர்கள் இருவர் மூச்சிரைக்க பின்னால் ஓடி வருகிறார்கள்.)

சேவகர்கள்: ஏய்!....பொண்ணு! மன்னர் வந்துக்கிட்டிருக்காரு! நீ என்ன ரொம்ப செளகர்யமா ஆட்டை பாதைய மறிச்சு ஓட்டிக்கிட்ருக்க? விரட்டி எல்லாத்தையும் ஓரமாப் பத்து! சீக்கிரம்! 
மீனாக்ஷி: சரிங்கய்யா! சூ...சூ...! (கையில் இருந்த கம்பால் ஆடுகளை விரட்டி பக்கத்துத் தரிசு நிலத்தில் இறக்குகிறாள்.)
கிளி: மீனாக்ஷி அங்க பாரு! (கிளி காட்டிய திசையில் பார்க்கிறாள்.)
மீனாக்ஷி: மன்னர் தன் பரிவாரத்தோட வந்துக்கிட்டிருக்காரு!
கிளி: பாதை வளைஞ்சு போகுது! இரண்டுபக்கமும் நெற்பயிர் வளர்ந்து நிக்குது! குதிரைகளோட கால் தெரியலை! குளம்படிச் சத்தம் மட்டும் கேட்குது! அதுங்க 


காத்துல மிதந்து வர்ற மாதிரி இருக்கு!
மீனாக்ஷி: நான் கனவில் கண்ட அதே காட்சி! (ஆச்சரியப்பட்டு நிற்கிறாள். மன்னர் பரிவாரம் ஓரிரு நிமிடங்களில் அவர்களைக் கடந்து செல்கிறது.)
கிளி: என்ன  மீனாக்ஷி! உறைஞ்சு போயி நின்னுட்ட! மன்னரைப் பாத்த பிரமிப்பா?
மீனாக்ஷி: மன்னரோட முகத்தைப் பார்த்தேல்லே?
கிளி: என்னோட மூக்கு மாதிரி நல்லா சிவப்பா இருந்தாரு!
மீனாக்ஷி: மண்டு! மன்னரோட தலைப்பாகை! அதில் பிறைநிலா நெற்றிச்சூடி!
கிளி: பிறைநிலா? பொற்காசுகள் இருந்த சுருக்குப்பைல இந்த வடிவம்தான இருந்துச்சு!
மீனாக்ஷி: எனக்கு ஒரு குச்சி வேனும்! (கிளி எடுத்துக் கொடுக்கிறது.)
கிளி: என்ன செய்ய போற?
மீனாக்ஷி: படம் வரையப் போறேன்! 
(மண்ணில் கோட்டோவியம் போன்று வரைகிறாள்.)

மீனாக்ஷி: இது மன்னரோட முகம் தலைப்பாகையோட! இது என்னட்ட ஆடு வாங்குனவரு முகம் தலைப்பாகை இல்லாம!
கிளி: ரெண்டும் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் இருக்கு! அது சரி! மன்னர் எதுக்காக சந்தைல வந்து ஆடு வாங்கனும்! 
(மீனாக்ஷி இதற்குப் பதில் சொல்லவில்லை)

காட்சி: 6
இடம்: அரசவை
காலம்: காலைப் பொழுது
கதாபாத்திரங்கள்: மன்னர், மீனாக்ஷி, சேவகன் கிளி மற்றும் அரசவை உறுப்பினர்கள்
சேவகன்: மன்னா! தங்களைக் காண ஒரு இடையச் சிறுமி வந்துள்ளாள்!

மன்னர்: வரச்சொல்! 
(மீனாக்ஷி வருகிறாள். கிளி அவளின் தோளில் அமர்ந்து இருக்கிறது.)
மீனாக்ஷி: மன்னா! சந்தைல ஆடு வாங்கும் போது நீங்க தவறுதலாக் கொடுத்த பொற்காசு இதோ! (சுருக்குப்பையை மன்னரின் காலடியில் வைக்கிறாள்.)
மந்திரி: என்ன மன்னர் உன்ட்ட ஆடு வாங்குனாரா? பொற்காசுகளை மாத்திக் கொடுத்தாரா! என்ன உளர்ற? 
(கோபப்படும் மந்திரியை மன்னர் கையமர்த்துகிறார்.)
மன்னர்: நான் இந்தச் சிறுமிகிட்ட ஆடு வாங்குனது உண்மைதான்! அது மாறுவேடத்துல போனப்போ நடந்தது.! ஆடுகளை விக்குறதுக்காக இவள் சந்தைல நின்னுகிட்டிருந்தா! ரொம்பச் சின்னப்பொண்ணா இருந்தா! இவளுக்கு ஏதாவது உதவி செய்யனும்னு தோனுச்சு! அதான் ஆடு வாங்குற சாக்குல சாதாக்காசுக்குப் பதிலா பொற்காசுகளை மாத்திக் கொடுத்தேன்! ஆனா இவள் பொற்காசுகளுக்கு ஆசைப்படாம திரும்ப வந்து ஒப்படைச்சுட்டா! 
மன்னர்: (தொடர்ந்து மீனாக்ஷியிடம் ) நான்தான் உன்ட்ட ஆடு வாங்குனேன்னு எப்படிக் கண்டுபிடிச்ச?
மீனாக்ஷி: உங்களின் நெற்றிச்சூடி! பிறைநிலா அரசின் இலச்சினை! பிறைநிலா வளர்ற மாதிரி தங்களின் செங்கோல் வளரும்ங்குறது நம்பிக்கை! மேய்ச்சலுக்கு ஒருநாள் ஆடுகளை ஓட்டிட்டு போகும்போது நான் உங்களைப் பாத்தேன்! உங்க நெற்றிச்சூடி மாதிரியான முத்திரைதான் பொற்காசுகள் இருந்த சுருக்குப்பைல இருந்துச்சு! அரசின் முத்திரையை அரச காரியங்கள் தவிர வேறு எதுக்கும் பயன்படுத்த முடியாதுங்குற விவரத்தை ஊர் பெரியவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்! முகஒற்றுமையும் இருந்ததுனால நீங்கதான்னு கண்டுபிடிச்சுட்டேன்!
மன்னர்: நல்லது மீனாக்ஷி! உனது நேர்மைக்கு எனது பாராட்டு! அதுக்கு வெகுமதியா நீயே இந்தப் பொற்காசுகளை வைச்சுக்கோ!
மீனாக்ஷி: வேண்டாம் மன்னா!
மன்னர்: வேற என்ன வேண்டும்!
மீனாக்ஷி: நான் மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் போனேன்! அம்மா அப்பா இல்லாததுனால என்னோட படிப்பு நின்னுபோச்சு! நான் திரும்பப் பள்ளிக்கூடம் போகனும்!
மன்னர்: கண்டிப்பா! நல்ல ஒரு பாடசாலைல உன்னை சேர்த்து விடுறேன்! உன்னோட கல்விக்கு நான் பொறுப்பு! 
மீனாக்ஷி: நன்றி மன்னா! நான் வருகிறேன்! 
(அவையோர் அனைவரும் எழுந்து நின்று அவளின் நேர்மையைப் பாராட்டி கரவொலி எழுப்புகிறார்கள்.)

காட்சி: 7
இடம்: கிராமச் சாலை
காலம்: நண்பகல் பொழுது
கதாபாத்திரங்கள்: மீனாக்ஷி மற்றும் கிளி
(தங்கள் ஊருக்குச் செல்லும் கிராமச் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.)

கிளி: உன்னோட கனவுல வந்த மத்த ரெண்டு விஷயங்களும் நடந்துருச்சு! ஆனா மகுடம் சூட்டுறது மட்டும் நடக்கலையே மீனாக்ஷி!
மீனாக்ஷி: அதுவும் நடந்துருச்சு!
கிளி: நடந்துருச்சா எப்படி?
மீனாக்ஷி: கனவுல வந்த காட்சியை அப்படியே புரிஞ்சுக்கனுமா என்ன? கொஞ்சம் யோசிச்சுப் பாரு புரியும்!
(கிளி மௌனமாக இருக்கிறது.)
மீனாக்ஷி: ராஜ்யம் நீங்கினால் மன்னர் என்ன ஆவார்?
கிளி: மன்னரின் சிறப்பு போயிரும்!
மீனாக்ஷி: அதுவே கற்றோனுக்கு?
கிளி: கற்றவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு!
மீனாக்ஷி: நான் திரும்பவும் பள்ளிக்கூடம் போகப் போறேன்! என்னோட தடைபட்ட படிப்பு தொடரப் போகுது! கல்விதான உண்மையான மணிமகுடம்!
கிளி: சமர்த்துப் பொண்ணு! 

(கிளி தனது அலகால் மீனாக்ஷியின் நாசியை உரசிச் கொஞ்சுகிறது.)

திரை

Tags : Siruvarmani Meenakshi dream
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT