சிறுவர்மணி

நூல் புதிது!

23rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

முல்லா (வண்ணப் படக்கதை)

ஆசிரியர் - எ.சோதி
பக்கங்கள் - 40
விலை - ரூ 60/-

குறும்பும் நகைச்சுவையும் நிறைந்த முல்லாவின் எட்டு கதைகள் அடங்கிய புத்தகம். "ஏமாற்ற முடியாது' என்னும் முதல் கதையிலேயே முல்லா தன் குறும்பை ஆரம்பித்து விடுகிறார். ஒரு ஆணியை மட்டும் சொந்தம் கொண்டாடி அதன் மூலம் விற்ற வீட்டை மீட்டெடுக்கும் முல்லாவின் சாமர்த்தியம் அருமையோ அருமை! அனைத்துக் கதைகளும் சிறுவர்கள் படித்து மகிழ வேண்டியவை. வண்ணப் படங்களுடன் பளபள காகிதத்தில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் அச்சிடப்பட்டிருக்கிறது. வெளியிட்டோர் : நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003. கைபேசி -9345450749.

ADVERTISEMENT

 

அண்டார்ட்டிகாவில் அரும்புகள்!

ஆசிரியர் : கொ.மா.கோதண்டம்
பக்கங்கள் - 40
விலை - ரூ 90/-

ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை. பல வருடங்களாக சிறுவர்களுக்குக் காட்டு வாழ்க்கையைக் கண்முன் கொண்டு நிறுத்தும் வல்லமை பெற்றவர். எல்லா கதைகளிலும் நீலன் என்ற சிறுவன் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக வருவான். இந்தப் புத்தகம் அண்டார்ட்டிகா பயணம் பற்றி எழுதப்பட்டுள்ளது. பயணத்தில் நீலனுடன் பல சிறுவர்கள் அண்டார்ட்டிகா பயணத்தை மேற்கொள்கின்றனர். பெங்குவினைக்கூட ஒரு கதாபாத்திரமாக்கி பயணத்திற்கு உதவி செய்யும்படி செய்திருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் எஸ்கிமோக்களின் சட்லெட்ஜ் வண்டிகளில் மேற்கொள்ளும் பயணம், போலார் கரடியை சந்திப்பது ஆகிய எல்லா அனுபவங்களும் சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் அருமயான பயணநூல் இது! வெளியிட்டோர் : கோரல் பப்ளிஷர்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், 8, 6-வது கிராஸ் தெரு, 8 - ஆவது மெயின் ரோடு, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை - 600109. கைபேசி - 9043050666.

 

நாங்கள் எல்லாம் யாரு?

(சிறுவர்களுக்கான பொது அறிவுக் கதைகள்)
ஆசிரியர் : கா.சாந்தி பாலமுருகன்
பக்கங்கள் : 80
விலை ரூ 30/-

விலங்குகளே நமக்கு அவைகளைப் பற்றிய விவரங்களை உரையாடல்களுடன் சொல்லும்படியாக அமைக்கப்பட்ட கதைகள்! உயிரினங்களின் வாழ்க்கை, ஆற்றல், சிறப்புகள் அனைத்தும் அவைகளாலேயே எடுத்துரைக்கப்படுகின்றன. கணேசா.... மீசைக்கார வீரன்..... கண்ணாமூச்சி..... சிவப்பா வெளுப்பா?..... முதலிய 10 கதைகள்! அத்தனையும் சுவாரசியம்! முதல் கதையில் யானைக்குட்டி தன் பாட்டியுடன் உரையாடுவது மிக அருமை! விலங்குகளின் சிறப்புகள் கதையின் முடிவில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. படிக்கும் சிறுவர்களுக்கு குறிப்பெடுக்கும் வகையில் சில பக்கங்கள் விடப்பட்டிருக்கின்றன. மிகவும் உபயோகமான, ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம் இது! வெளியிட்டோர் : அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜகன்னாத நகர் அன்னெக்ஸ், வில்லிவாக்கம், சென்னை - 600049. கைபேசி : 9444047790.

 

முயல் குட்டி

(சிறுவர் பாடல்கள்)
ஆசிரியர் - கமலினி கதிர்
பக்கங்கள் - 80
விலை - ரூ 100/-

அழகு....மயில்..... பூம்பனி.... முதலிய 58 குழந்தைப் பாடல்களுடன் இந்தப் புத்தகம் மிளிர்கிறது. கறுப்பு வெள்ளையானாலும் மிக அழகான படங்களுடன் புத்தகம் படிக்க (பாட) தூண்டுகிறது. பூம்பனி பாடலில், "இதயத்தில் சில்லிட்டு இறங்க மனமும் பூவாய் மலர்கின்றதே' என்ற வரிகள் அழகுணர்ச்சியையும், இயற்கையின் தெய்வீக உணர்வையும் தூண்டுகிறது. "எண்ணங்கள் உயர வேண்டும்' என்ற பாடலில், தோல்விகளைத் தாங்குகின்ற உள்ளம் நீங்கள் பெற வேண்டும்..... கலைகளிலே மனம் ஒன்றி இணைந்து மகிழ்ச்சி பெற வேண்டும்' என்பன போன்ற வரிகள் பெரியவர்களும் படித்து மகிழத் தக்கவை. வெளியிட்டோர் : இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி - 620003. கைபேசி : 9443284823.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT