சிறுவர்மணி

அரங்கம்: அதிர்ஷ்டம்!

தினமணி

காட்சி : 1
இடம் : புவியூர் / கிழக்குப் பகுதி
நேரம் :  வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : சம்முரன், ஊர் மக்கள்.
முதல் நாள் : சம்முரன் பழக்கூடையை இறக்கி வைக்கிறார். 


மரத்தடியில் அமர்கிறார்.
இரண்டாம் நாள் : 
சம்முரன் உரக்கக் கூவுகிறார். 
மக்கள் அவரைத் தாண்டிச் செல்கிறார்கள்.
மூன்றாம் நாள் : 
சம்முரன் பழக்கூடையைத் தலையில் சுமந்து நடந்தபடி கூவுகிறார்.
மக்கள் அவரிடம் வரவில்லை.

காட்சி : 2
இடம் : புவியூர் / மேற்குப் பகுதி
நேரம் : காலை 
பாத்திரங்கள் : சம்முரன், ஒரு பெண், ஒரு தாத்தா, ஒரு குரங்கு

சம்முரன் மரநிழலில் பழக்கூடையை இறக்கி வைக்கிறார்.

சம்முரன் : வாங்கம்மா, அருமையான பழங்கள்.. வாங்குங்கம்மா, சுவையான ரகங்கள்.. 
ஒரு பெண் : என்ன தம்பி, பழம் என்ன விலை ?
சம்முரன் : நியாயமான விலைதாங்கம்மா.. கிலோ வெறும் அறுபது.. நீங்க முதல் போணி அதனால அம்பது ரூபாதான்.. 
பெண் : ஒரு கிலோ போடு.. ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்காப்பா..?
சும்முரன் : (அதிர்ந்து)  என்னம்மா நீங்க.. மொதல் போணினு சொன்னனே !
பெண் : சரி, இருப்பா.. மத்த செலவெல்லாம் முடிச்சுட்டு வர்றேன்.. 
(பெண் நகர்ந்து செல்கிறார்.)

சம்முரன் : (கலக்கமாக) மறக்காம வாங்கம்மா.. தரமான பழங்க.. (மெதுவாக) மகளுக்கு எதாவது வாங்கிட்டுப் போகணும்... 
(மரத்திலிருந்து ஒரு கை கீழே வந்து ஒரு பழத்தை எடுத்துச் செல்கிறது.) 

சம்முரன் : (பதற்றமாக) ஏய்.. ஏய்.. திருட்டுக் கொரங்கே.. யாருகிட்டே !
(சம்முரன் அங்கும் இங்கும் நகர்ந்து ஒரு கல்லை எடுக்கிறார்.) 

ஒரு தாத்தா : (பின்னால் வந்து) நல்ல பழமா, தம்பி ? ஒரு அஞ்சு கிலோ போடு..
(சம்முரன் முகத்தில் புன்னகை தோன்றுகிறது.)

காட்சி : 3
இடம் : சம்முரன் வீடு
நேரம் : இரவு 8.30 
மாந்தர் : சம்முரன், பனிமலர்
(சம்முரன் சொல்லி முடிக்கிறார். )

பனிமலர் : (யோசனைக்குப் பிறகு) அப்படினா அந்தக் கொரங்கு தொட்டதாலதான் இன்னிக்கு வியாபாரம் நடந்துச்சுனு சொல்றீங்களா, ப்பா ?
சம்முரன் : பின்னே, இல்லியா ? மூனு நாளா சரியாவே விக்கல.. அது தொட்றதுக்கு முன்னாடிகூட ஒரு அம்மா சில்ற இல்லன்னு போயிட்டாங்க.. 
(பனிமலர் அமைதியாகப் பார்க்கிறாள்.)

சம்முரன் : ஆனா, அந்தக் கொரங்கு கைபட்ட கொஞ்ச நேரத்துலியே அஞ்சு கிலோ கேட்டு வந்தாங்க.. அரை மணில மொத்த வியாபாரமும் முடிஞ்சிடுச்சு.. அதிர்ஷ்டகாரக் கொரங்கு..
பனிமலர் : (கையில் பணம் ) இந்த மாதிரி எல்லாம் அந்தக் கொரங்கு தொட்டாத்தான் வரும்னா.. நாளையிலிருந்து என்னப்பா பண்றது ?
சம்முரன் : (திடமாக) அதுக்கு ஒரு யோசனை வெச்சிருக்கேன் !

காட்சி : 4
இடம் : புவியூர்  
நேரம் :  வெவ்வேறு நேரங்கள்
பாத்திரங்கள் : சம்முரன், குரங்கு 

முதல் நாள் : 
சம்முரன் பழக்கூடையை மரத்தடியில் வைத்துக் காத்திருக்கிறார். குரங்கு ஒரு பழத்தை எடுத்து, தாவிச் செல்கிறது.
பதினைந்தாம் நாள் காலை :
குரங்கு, பழக்கூடையின் அருகில் அமர்ந்து சாப்பிடுகிறது.
முப்பதாம் நாள் மாலை :
 சம்முரன் பணத்தை எண்ணுகிறார்.

காட்சி : 5
இடம் : சம்முரன் வீடு
நேரம் : இரவு 9.30
மாந்தர் :  சம்முரன், பனிமலர்

(சம்முரன் கூடையைத் தயார்
செய்கிறார்.)

பனிமலர் : என்னப்பா.. இன்னிக்கு வேற என்னமோ கொண்டுபோறீங்க போலிருக்கு.. பழம் இல்லையே..
சம்முரன் : இப்போ அடிச்ச புயல்ல நம்ம தோட்டத்துக்காரர் மரம் எல்லாம் சாஞ்சிருச்சு.. நமக்குப் பழம் கட்டுப்படியாகல.. அதான் இந்த ஒருவாரம் மட்டும் பச்சைப் பயறு..
பனிமலர் : நல்ல ஏற்பாடுதான்.. வியாபாரம் சரியா நடக்குமாப்பா ?
சம்முரன் : (பெருமூச்சுவிட்டு) அது அந்த கொரங்குக்குத்தான தெரியும்.. 
பனிமலர் : (வியப்பாக) அதை ரொம்பத்தான் நம்பறீங்க! இப்ப நாம ஊர்க்காரங்களுக்குத் தெரிஞ்சவங்க ஆயிட்டோம்.. கொரங்கு தொடலனாலும் வியாபாரம் நடக்கும்..
சம்முரன் : நல்லாப் போயிட்டிருக்கு.. அதை ஏன் மாத்தணும் ? 
பனிமலர் : (அலட்சியமாக) சரி.. உங்க விருப்பம்.

காட்சி : 6
இடம் : புவியூர் / மரத்தடி
நேரம் : காலை 
பாத்திரங்கள் : சம்முரன், குரங்கு 
(சம்முரன் கூடையை இறக்கி வைக்கிறார்.)

சம்முரன் : வாடா, என் ராசா.. வந்து எனக்கு அதிர்ஷ்டத்தத் தொட்டுக் குடு.. 
(குரங்கு கூடையை உற்றுப்பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்கிறது.) 

சம்முரன் : என்னடா, செல மாதிரி நிக்கற! சீக்கிரம் தொடு.. இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்.. 
(குரங்கு அசையாமல் நிற்கிறது.)

சம்முரன் : ரொம்பப் படுத்தாதடா.. பொழுது போகுது.. 
(குரங்கு மெதுவாக ஒரு பிடி பச்சைப்பயறை எடுக்கிறது.)

சம்முரன் : ஆ.. அப்புடி.. அப்பத்தான வியாபாரம் ஒழுங்கா நடக்கும்..
(குரங்கு மெல்ல அதை வாயில் போட்டு மெள்ளுகிறது.)

சம்முரன் : அவ்வளவுதான்டாப்பா.. (கூடையில் கைவைத்து) சரி, நான் வரட்டுமா..
(குரங்கு அவர் கையைத் தட்டிவிடுகிறது.)

சம்முரன் : (ஆச்சர்யமாக) என்னடா ?
(குரங்கு பச்சைப்பயறை அள்ளி வாயில்போடத் தொடங்குகிறது.)

சம்முரன் : (அதிர்ச்சியில்) டேய்.. என்னடா பண்ற ? போதும் விட்றா.. 
(குரங்கு அடுத்தடுத்து வேகமாக எடுத்து 
உண்கிறது.)

சம்முரன் : அட, பாழாப்போன கொரங்கே.. என்  பொழப்பக் கெடுக்கறதுக்குனே வந்துருக்கியா.. ச்சீ, ஓடிப்போ..
(குரங்கு சம்முரனைப் பார்த்துச் சீறுகிறது.)

சம்முரன் : ஐயோ !
(குரங்கு பச்சைப்பயறை நிறைய எடுத்து 
உண்கிறது.)

காட்சி : 7
இடம் : சம்முரன் வீடு
நேரம் : இரவு 7.50
மாந்தர் :  சம்முரன், பனிமலர்
(பனிமலர் சத்தமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.) 


பனிமலர் : ஹா.. ஹா.. ஹா.. 
சம்முரன் : (கவலையாக) பனி.. இதெல்லாம் கேட்டா உனக்கு சிரிப்பா வருது ?
பனிமலர் : (ஓய்ந்து) பின்னே.. வேறென்னப்பா செய்யறது ?  அதிர்ஷ்டத்தை கொடுக்கற அதே கொரங்குதான இதையும் கொடுத்திருக்கு ? அப்புறம் என்ன ?
(சம்முரன் அமைதியாக இருக்கிறார்.)

பனிமலர் : அப்பா.. ஒவ்வொரு நாளும் எதாவது வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது இயல்புதான்..  அதத் தவறாப் புரிஞ்சுகிட்டோம்னா இப்படித்தான் ஆகும்.. 

சம்முரன் : உண்மைதான்.. எதார்த்தமா நடக்கறத மிகைப்படுத்திப் புரிஞ்சுக்கறது தப்புதான்.

(பனிமலர் புன்னகை செய்கிறாள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT