சிறுவர்மணி

தை மகள் அருள்க!

9th Jan 2021 06:00 AM | தளவை இளங்குமரன்

ADVERTISEMENT

 

வெள்ளம் புயல்மழை பேரிடர் களைந்து 
விரும்பிடும் இயல்பதும் திரும்பிட வருக!
நெல்லுடன் கரும்பு, வாழையும் விளைந்து 
நினைந்திடும் நலம் பெற நிறைந்தருள் தருக!

பள்ளி, கல்லூரி  யாவையும் திறந்து 
பாடங்கள் பாங்குடன் பயின்றிட  வருக!
கள்ளம் இல்லாத மாணவர் திரண்டு 
கல்வியில் தேர்ந்திடக் கனிந்தருள் தருக!

வண்ணம் பூசிய  மெருகுடன்  ஒளிரும் 
வீடுகள் யாவையும் அழகுற வருக!
அள்ளும் மாவிலைத் தோரணம் அசைந்து 
ஆசிகள் கோரிட  அகத் தருள் தருக!

ADVERTISEMENT

தள்ளி ஒதுக்கிடும் பொருள்களும் எரிந்து 
தழலிடைப் போகியில் பொசுங்கிட வருக!
வெள்ளி முளைத்திருள் விரைவினில் கரைந்து 
விடியலை அடைந்திட விசும்பருள் தருக!

புள்ளும் விலங்கும் பூசல்கள் மறந்து
பூரிக்கப் போந்த புத்தாண்டும் வருக!
பள்ளம் மேடுகள் மாந்தருள் மறைந்து 
பாருக்குள் வாழ்ந்திடும் மனநிலை தருக!

இல்லம் தோறும் இன்பம் வழிந்து 
இதயங்கள் போற்றிடப் பொங்கலும் வருக!
கொள்ளை நோயாம் "கொரானா' ஒழிந்து 
குவலயம் வாழ்ந்திடத் "தை மகள்' அருள்க!

ADVERTISEMENT
ADVERTISEMENT