சிறுவர்மணி

சூரிய மின் சக்தியில் இயங்கும் புதுச்சேரி விமான நிலையம்!

2nd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

நாட்டிலேயே முதன் முறையாக சூரிய மின்சக்தியில் இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையை புதுச்சேரி விமான நிலையம் பெற்றுள்ளது.
தமிழக -- புதுவை மாநில எல்லையில் புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு ஹைதராபாத்துக்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திற்குத் தேவையான மின்சாரம் சூரிய சக்தி மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ 2.80 கோடியில் விமான நிலைய ஓடுபாதை அருகே 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் தகடுகளுடன் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் அலகு மின்சாரம் தயாரிக்க முடியும்!
புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 7.20 லட்சம் அலகு மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது முற்றிலும் சூரிய சக்தியால் மட்டுமே இயங்குவதால் புதுச்சேரி விமான நிலையத்திற்கு மாதத்திற்கு ரூ. 10 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகிறதாம்! 
இதனால் 5,570 மெட்ரிக் டன் கார்பன் துகள்கள்காற்றில் கலந்து மாசு ஏற்படுவது குறைகிறதாம்! சுமார் 32,850 மரங்கள் மூலம்தான் இந்த அளவு மாசுபடு
வதைத் தடுக்கமுடியும்! 
மத்திய விமான நிலைய ஆணைய அதிகாரி 
கூறியதாவது: 
தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் 8 கோடி அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது! மத்திய விமான நிலைய ஆணையம் இப்போதுவரை 80.3 லட்சம் அலகுகள் ஆண்டுதோறும் சூரிய மின் சக்தியால் அனைத்து விமான நிலையங்களிலும் பல்வேறு உபயோகத்திற்காக அடைய வழி செய்துள்ளது.  இந்த அளவு, மொத்தத் தேவையில் சுமார் 10 சதவீதமாகும். இதில் புதுச்சேரி விமான நிலையம் தனது அனைத்துப் பயன்பாட்டிற்காகவும் சூரிய மின்சக்தியையே உபயோகப்படுத்துகிறது!
தென்மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் 55.26 லட்சம் வாட் திறன் அளவுக்கு சூரிய மின்சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதை 1.05 கோடி வாட் திறனாக வளர்ச்சி பெறச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வருகின்ற 2025 -- ஆம் ஆண்டுக்குள் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் முழுமையாக சூரிய மின்சக்திக்கு மாற்ற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கோட்டாறு ஆ.கோலப்பன். 

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT