குழந்தைகளே நலமா,
நான் தான் உருத்திராட்ச மரம் பேசறேன். குழந்தைகளே, உங்களுக்கு முதலில் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு, கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டு நன்றாகப் படிக்க வேண்டும், சரியா. எனது தாவரவியல் பெயர் இலியோகார்பஸ் கேனிடிரஸ். எனது குடும்பம் இலியோகார்பசியோ. எனக்கு அக்கமணி, கண்மணி, சிவநேத்திரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் இமயமலைச் சாரலிலும், நேபாளம் போன்ற இடங்களிலும் அதிகமா காணப்படறேன்.
குழந்தைகளே, ருத்ராக்ஷம் என அழைக்கப்படும் நான் ஒரு அழகிய தெய்வீக மரமாவேன். "உத்திரன்' என்றால் சிவனையும், "அட்சம்' என்றால் கண்களையும் குறிக்கும். ஒரு சமயம் குழந்தைகளே, கமலாட்சன், தாரகன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை அழிப்பதற்காக சிவன், அவர்களின் முப்புரங்களை சினத்துடன் எரித்தார். அப்போது, அவரின் முக்கண்களும் கோபத்தில் சிவக்க, அக்கண்களைச் சுற்றி வியர்த்து அரும்பிய நீர்த்துளிகள் மண்ணில் விழுந்து மரங்கள் ஆயினவாம். அதனால், என்னை ருத்திராட்சம் என்று அழைக்கின்றனர். அதாவது, "ருத்திராட்சம்' என்றால் சிவனின் கண்களிலிருந்து தோன்றியவன் என்று பொருள். ருத்திரன் என்றால் சுட்டெரிக்கும் சூரியனைக் குறிக்கும். எனவே, நான் சூரியனுக்கு உகந்த மரமாக இருக்கேன்.
என் காய்கள் சிறியதாக, இலந்தைப் பழம் வடிவிலிருக்கும். இதில் பல முகங்கள் இருக்கு. ஒருவர் எத்தனை பூஜைகள் செய்தாலும், விரதங்கள் இருந்தாலும் ருத்ராட்சங்கள் அணிவதற்கு ஈடாகாது என்பது ஆன்றோர் வாக்கு. சிவனடியார்கள் அணியும் ஆபரணங்களில் முதன்மையானது ருத்திராட்சம். ஆயிரம் ருத்ராட்சங்கள் அணிந்தவரை சிவபெருமானுக்கு சமமெனக் கருதி தேவர்களும் வணங்குவர் என்று பெரியவர்கள் சொல்வதிலிருந்து என் பெருமையை நீங்கள் உணரலாம். என் காய்களை உலர வைத்து நூலால் கோர்த்து மாலையாகவும், கைமணிக்கட்டில் வளையலாகவும் அணிந்து கொண்டால் எத்தகைய தீவினைகளும் உங்களை அண்டாது.
இதில் மின்காந்த குணங்கள் இருப்பதால், இரத்த அழுத்த கட்டுப்படுத்தப்பட்டு, மன அமைதி கிட்டும். தியான மாலையில் முகங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருப்பதால் மின் துடிப்புகள் உண்டாக்கி உங்கள் மூளைக்குப் புத்துணர்ச்சியும், இதயத் துடிப்புகள் சீராகவும் இருக்கும்.
மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் நான், இப்போது திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஓரத்தூர் கிராமம், கோரையாறு மேற்குக் கரையில் சுமார் 25 அடி உயரத்தில் வளர்ந்து காணப்படுகிறேன். ருத்ராட்ச கொட்டைகளும் காய்க்கத் தொடங்கியுள்ளன. என்னை அப்பகுதி மக்கள் வந்து விளக்கேற்றி வழிபட்டு செல்கின்றனர். ஐந்து முக ருத்திராட்சத்தை எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. துளசி சாறில் கலந்து உண்டால், பக்கவாத நோய் குணமாகும், இது உறுதி.
என் இலையின் சாறு பஸ்ப செந்தூரங்களுக்கு பயன்படுகிறது. பஸ்ப செந்தூரம் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா குழந்தைகளே? பாஷாணம் மற்றும் உலோகங்கள் மனித உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டிருப்பதால், அதிலுள்ள சத்துகளை வெளியேறவிடாமல் நுண் துகள்களாக்கி, பஸ்மமாக்கி நம் உடல் ஏற்றுக்கொள்ளும்படியாக செய்யும் முறைக்கு செந்தூரம் என்று பெயர். இது நம் உடலில் ஏற்படும் எந்த நோய்க்கும் அருமருந்தாகும். ருத்திராட்ச கொட்டையைத் தேனிலிட்டு அரைத்து நாக்கில் தடவினால் விக்கல், பித்த மயக்கம், மரணத்தை உண்டாக்கும் கபம் அறவே இருக்காது. இரவில் ஒரு குவளை நீரில் 5 ருத்திராட்சத்தையிட்டு வைத்து காலையில், குளித்து விட்டு வெறும் வயிற்றில் அந்நீரை அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் ஓடிடும். நான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்வேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)