சிறுவர்மணி

கிறிஸ்துமஸ் தாத்தா !

2nd Jan 2021 06:00 AM | -டேனியேல் ஜூலியட்

ADVERTISEMENT

 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருந்தன.

மாணவி ரதியிடம் எல்லோரும், ""உனக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?'' என்று கேட்டனர்.

அதற்கு ரதி, ""நம்ம ஊரு பக்கத்துல இருக்கிற மருதகுளம், கோவைக்குளம் போன்ற ஊர்களில் எல்லாம் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு பொருட்களோடு பவனி வரும் கேரல் ரவுண்டு வருஷாவருஷம் நடக்கிறது. ஆனா நம்ம ஆழ்வாநேரி ஊர்ல தான் கிறிஸ்துமஸ் தாத்தா பவனிவரும் கேரல் ரவுண்டு இதுவரை இல்லவே இல்லை. வருத்தமாயிருக்கு. அதை அறிந்து கொண்ட எங்க அம்மா, அடுத்த வருஷம் நம்ம ஊரிலும் கிறிஸ்துமஸ் தாத்தா கேரல் ரவுண்டு நடத்த நீயே முயற்சி செய்" எனச்சொல்லி போன கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த உண்டியலை எனக்கு தந்தாங்க. இதுல காசு பணம் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து வைக்க சொன்னாங்க நானும் அதுமாதிரி செஞ்சேன். இப்ப உண்டியலை உடைச்சி எண்ணி பார்த்தா மூவாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு! இந்தப் பணத்துக்கு கிறிஸ்துமஸ் தாத்தா அங்கியும் கிப்ட் பொருள்களும் வாங்கிக்கலாம்'' என்றாள்.

ADVERTISEMENT

"சூப்பர் ஐடியா" என ரதியை பல மாணவ மாணவியர்கள் மனமார பாராட்டி புகழ்ந்தார்கள். ரதியின் அப்பா கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்குரிய உடையும், முகக் கவசம் மற்றும் ஸ்டிக், தோள்பை எல்லாம் வாங்கிவந்தார். சிறார்கள் அனைவருக்கும் உற்சாகம் கரைபுரண்டது .

கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேஷம் போட சரியான ஆள் யார் என்ற பேச்சு கிளம்பியது! ஜான் சாலமன் மாமா அவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போடச் சொல்லலாம் என ஒருவர் சொன்னார்.

""அவங்க கொஞ்சம் குட்டையா இருக்காங்க கொஞ்சம் ஒசரமா இருந்தாத்தான் எடுப்பா இருக்கும்...'' என்றார் இன்னொருவர். அங்கிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒருவரைச் சொன்னார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ரதி, ""வேறு ஒருவரின் பெயரைச் சொன்னாள்.

""அவரா?'' என ஆர்வமில்லாமல் மற்றவர்கள் கேட்டனர் பிறகு ரதி எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மறுநாள்.... சிறுவயதிலிருந்தே தான் நீண்ட நாட்களாக கண்ட கனவு இப்போது நனவானதில் பெரிதும் மகிழ்ந்தாள் ரதி. தனக்கு இப்படியொரு கெளரவமா என மகிழ்ந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரித்திட வந்தார் ரதி சிபாரிசு செய்த அந்த மனிதர்! அவருக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் மிக கச்சிதமாக பொருந்திவிட்டது!

அனைவரும், "" சூப்பர் தேர்வு! என்றனர். மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டே அவர்களோடு சேர்ந்து உண்மை தாத்தாவாக தெருத் தெருவாக பரிசு பொருட்களோடு உற்சாக நடைபோட்டார் அவர். அனைவரையும் ஆசிர்வதித்து பெரியவர்களையும் சிறியவர்களையும் ,பெரிதும் மகிழச் செய்தார்!

அந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டிருப்பது யார்?.... யார் ?..... என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கேரல் ரவுண்டு முடித்து அவர் தாத்தா வேடத்தை கலைத்த பின்னர்தான் விடை கிடைத்தது! நரைத்த முடியுடன் வழுக்கையாக இருந்த அவரைக்கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்! இளம் வயதில் இந்த ஊருக்கு அரைக்கால் டவுசரோடு வந்தவர்!.... எல்லோரும் சொல்கிற வேலையை தட்டாமல் செய்து கொடுப்பவர்!.... அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்பவர்!...." டவுசர் மணி' என்ற பட்டப்பெயரோடு வளர்ந்து வலம் வந்தவர்! இப்போது வயதாகிவிட்டதால் "டவுசர் மணி அங்கிள்' என்று அழைக்கின்றனர். ஊரிலுள்ள பெரியவர்கள் எல்லாம், மாணவி ரதியையும் அவளோடு துணை நின்ற மற்ற மாணவ மாணவியர்களையும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

டவுசர், மணி ரதியின் தலையை அன்புடன் தடவிக்கொடுத்தார்.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT