சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: உரல்லி மரம்!

பா.இராதாகிருஷ்ணன்

குழந்தைகளே நலமா,

நான் தான் உரல்லி மரம் பேசுகிறேன். எனது தாரவியல் பெயர் "லிட்சியா க்ளட்டினோசா' என்பதாகும். நான் லாரேசியே எனும் ஓட்டுண்ணி குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை இண்டியன் லாரெல் என்றும் சொல்வாங்க. எனக்கு அமா, எனம்பிரகி, பிசின்பட்டி, எலும்புருக்கி, மூச்செய்பெயட்டி என்ற வேறு பெயர்களு முண்டு. எனது தாயகம் இந்தியா. நான் ஆந்திராவில் பிரபலம். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் வாணிப மரமாக இருந்தேன்.

கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரம் உள்ள இமயமலையில் நான் பரவியிருக்கேன். இதர மலைப் பகுதிகளிலும் என்னை நீங்கள் காணலாம். நான் ஒரு சிறந்த மூலிகை மரமும் கூட. சித்தா, ஆயுர்வேதம், சீன மருத்துவத்தில் என் பயன்பாடு அதிகமா இருந்திருக்கு. அதனால, நான் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மரமுன்னு சொல்ல வரேன். நான் இப்போது அழிந்தே விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும் போலுள்ளது.

குழந்தைகளே, இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் என்னை அழிந்து வரும் மரங்கள் பட்டியலில் சேர்த்திட்டாங்க என்பதை உங்கக் கிட்ட எப்படி நான் சொல்வேன். என்னுடைய இலை, கிளை, பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் அனைத்தையும் மருந்தாக பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்திருக்காங்க. ஊதுவத்தி தொழில் வளர்ச்சிக்கு என் பங்கு மகத்தானது. என் பட்டையைக் கூழாக்கி ஊதுவத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ஒட்டும் பொருளா பயன்படுத்தறாங்க.

நான் அதிகம் கனமில்லாதவன் என்பதால் என்னை வைத்து விவசாயக் கருவிகள் செய்யலாம். என் வேர்களிலிருந்து கயிறுகள் திரிக்கலாம். என் வேர்களில் அவ்ளோ பலமிருக்கு. என் தளிர் இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். என் விதையிலிருந்து மெழுகுவர்த்தியும், சோப்பும் தயாரிக்கிறாங்க. என் பட்டைகளைப் பயன்படுத்தி, பல விதமான நோய்களை குணப்படுத்தலாமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. முக்கியமா எலும்பு முறிவை சரி செய்யலாம். அதாவது, முறிந்த எலும்புகளை ஒட்ட என் பட்டைக் கூழ் பெரிதும் பயன்படும். என் மரத்தின் கூழ் மாத்திரைகள் செய்வதில் ஒட்டும் பொருளாவும் பயன்படுது.

குழந்தைகளே, ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை. நாங்கள் எங்களுக்குத் தேவையான உணவை சுயமாகவே தயாரிக்கும் திறனைப் பெற்றிருக்கிறோம். நீங்கள் வெளியிடும் கரியமில வாயு எனப்படும் நச்சுவாயுவை உட்கொண்டு, உங்களுக்கு பிராண வாயுவைத் தருகிறோம். நாங்கள் நீங்கள் இளைப்பாற நிழல் மட்டும் தரவில்லை. புவிவெப்பத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் மழையைத் தருகிறோம். எப்படி என்று தானே கேட்கிறீர்கள். வானில் மழை மேகம் உருவாகும் போது, மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வீசும் குளிர்ந்த காற்றால் அது குளிர்விக்கப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் மேகங்கள் மழையைப் பொழிவிக்கின்றன.

எங்களை நம்பி வரும் உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகிறோம். எங்களை வெட்டுவோருக்கும் நிழல் தந்து உதவுகிறோம். நாங்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பின்பும் நன்மையையே செய்கிறோம். உங்கள் தேவையான கட்டுமான பொருள்கள் செய்யவும், வீட்டு உபயோக பொருட்களாகவும், அலங்கார பொருட்களாகவும் நாங்கள் உருமாறி உங்களுடனேயே இருக்கிறோம். ஏழை, எளிய மக்களுக்கு அடுப்பெரிக்கவும் உதவுகிறோம். நாங்கள் யாரையும் வேற்றுமை பாராட்டுவதில்லை.

எனவே, குழந்தைகளே, யாரையும் வேற்றுமை பாராட்டாதீர்கள். அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை உணருங்கள், அன்போடு வாழுங்கள், அன்பே உங்கள் வாழ்க்கையின் ஆணி வேர். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT