கேள்வி: பாம்பு சட்டையை உரித்துப் போடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி சட்டையை உரிப்பதற்குக் காரணம் என்ன?
பதில்: சட்டை உரித்தல் என்ற நிகழ்வு பாம்பு சிறியதாக இருக்கும்போது அடிக்கடியும் பெரிதாக வளர்ந்த நிலையில் மாதத்துக்கு இரண்டு முறை வரையும் நடைபெறுகிறது.
இந்நிகழ்வு பெரும்பாலும் இனப்பெருக்க காலத்துக்கு முன்னரோ அல்லது முட்டையிடுவதற்குப் பின்னரோ நடைபெறும்.
இச்சமயத்தில் பெரும்பாலும் அவை இரை ஏதும் எடுப்பதில்லை.
பாம்புகள் வளரும்போது அவற்றின் தோல் விரிவடைவதற்கேற்ப அதன் மேற்புற தோலிலாகிய மெல்லிலிய படலம் விரிவடைவதில்லை. எனவே தோலுடன் உள்ள பிடிமானத்தை மேற்புற மெல்லிலிய படலம் இழக்கின்றது.
அப்போது அவற்றின் கண்களுக்கு மேல் இருக்கும் இந்த மெல்லிலிய தோல் படலம் ஒளி கசியும் நிலையை (Translucent) அடைவதால், அச்சமயம் பாம்பினால் சரிவர பார்க்க முடியாது.
இதன் காரணமாக, பாம்பு தனது தலையை கடினமான மரப் பட்டை அல்லது கற்கள் மீது உரசித் தேய்த்து அந்த மேல்புற படலத்தை நீக்கும். அடுத்து செடிகொடிகளிடையே அங்குமிங்கும் சுழன்று உடலின் மேற்புறத்தில் உள்ள மெல்லிலிய படலம் முழுவதை யும் நீக்கும்.
இதுவே பாம்பு சட்டை உரித்தல் (Ecdysis) எனும் நிகழ்வாகும்!
இவ்வாறு பாம்பு தனது சட்டையை உரிப்பதால் பாம்பின் மீதுள்ள ஒட்டுண்ணிகள் நிறைந்த மேற்புற படலம் நீக்கப்பட்டு பாம்பு தனது இயற்கையான நிறத்தில் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் காட்சி அளிக்கும்!