சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பாதுகாப்பு அரண் - தாழை மரம்

13th Feb 2021 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா ?

நான் தான் தாழை மரம் பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ் என்பதாகும். என்னை ஆங்கிலத்தில் ஃப்ராகிரண்ட் ஸ்குருஃபைன் என்று அன்பாக அழைக்கிறாங்க. நான் பாண்டேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். மணற்பாங்கான கடற்கரைப் பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்களில் என்னைக் காணலாம். குழந்தைகளே. இலக்கியங்களில் நெய்தல் திணைக்குரிய மரமா நானிருக்கேன். என் இலையின் ஒரங்களில் முள் இருக்கும். மணம் மிக்க குறுமரமான என்னை "கைதை' எனவும் குறிப்பிடுவர். ஏன் தெரியுமா, தொடும் போது என் இலையிலிருக்கும் முள்உங்கள் கையைத் தைக்கும் என்பதால் என்னை "கைதை' என சொல்றாங்க.

மண்ணரிப்பு, சுனாமி, கடல்சீற்றம் போன்ற பேரிடர்களைத் தடுக்கும் வல்லமையை நான் கொண்டிருக்கிறேன். இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு நான் ஒரு பாதுகாப்பு அரணா இருக்கேன். இராமேஸ்வரம் தீவு, மேலமுந்தல் தாழையடி ஏழுபிள்ளை அருள்மிகு காளியம்மன், அருள்மிகு நம்புயாகி அம்மன் ஆகிய கோயில்களில் என்னைக் காணலாம்.

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாட்டில் 83-ஆவது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, தாழையின் மலரான தாழம்பூ தான். ஒரு காலத்தில் நான் செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர், இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை, வேதாளை, திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, கூடுதாழை, நாகப்பட்டினம் மாவட்டம் பூந்தாழை, தாழைக்காடு, திருவாரூர் மாவட்டம், தாழையூர், தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை போன்ற பல ஊர்களில் பரந்து வளர்ந்து, அங்கு வாழ்ந்த மக்களின் அன்பைப் பெற்று வளர்ந்திருந்தேன். இப்போ, ஹும், என்னத்த சொல்ல. என்னை மறந்துட்டாங்க.

என் பூவில் ஆண், பெண் வேறுபாடு உள்ளது குழந்தைகளே. ஆண் பூ மணமிக்கதாய் இருக்கும். வெளிறிய மஞ்சள் நிறத்திலிருக்கும் இப்பூ மலர்ந்த ஒரே நாளில் கீழே விழுந்து விடும். பெண் பூவும், காயும் உங்களுக்குப் பிடித்த அன்னாசிப்பழம் போன்ற அமைப்பில் இருக்கும். இராமேஸ்வரம் திருக்கோயிலில் பெண் மரம் அதிகளவில் இருக்கு குழந்தைகளே.

மணம் மிக்க என் பூ சிறந்த கிருமிநாசினி. அக்காலத்தில் அம்மைநோய் யாருக்காவது வந்தால் தாழம்பூவைக் கட்டி தொங்க விடுவாங்க. ஏன்னா, என் மணம் அக்கிருமிகளை அண்ட விடாமல் அழிச்சிடும். அதுமட்டுமா, அக்கால மக்கள் ஓலைச்சுவடிகளை பூச்சி அரிக்காமலிருக்க என் பூவைத் தான் பயன்படுத்தியிருக்காங்க. அடிமரத்தில் விழுதுகளை நீங்க பார்க்கலாம். அந்த விழுதுகளைப் வெட்டி வீட்டிற்கு வெள்ளையடிக்க பயன்படுத்தலாம். என் நாறு உறுதியானது என்பதால் நீங்க கயிறாகக் கட்டி ஊஞ்சலாட

லாம். என் பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சி தைலம் எடுக்கறாங்க, இது தலைவலியைப் போக்கும். இயற்கைமுறையில் என் பூவிலிருந்து நறுமணப் பொருள்களையும் தயாரிக்கலாம்.

நான் சிவனின் சாபம் பெற்றதால் பூஜையில் என் பூவை சேர்க்க மாட்டாங்க. ஆனால், இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களேஸ்வரர் திருக்கோயிலில் என் பூவை பூஜைக்குப் பயன்படுத்தறாங்க. ஏன்னா, நான் இங்கு தான் இறைவனை வேண்டி சாப விமோசனம் அடைந்தேன்.

குழந்தைகளே, மரங்கள் உயிரினங்கள் வெளியிடுகின்ற கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை நமக்குத் தருகின்றன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச் சேர்க்கையின் மூலம் உயிரினங்களுக்குத் தேவையான உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலைகளாகவும் மரங்கள் சிறந்த பங்காற்றுகின்றன. நன்றி, குழந்தைகளே மீண்டும் சந்திப்போம்.

நான் நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், அருள்மிகு பல்லவனேசுவரர், மயிலாடுதுறை, அருள்மிகு சாயாவனேஸ்வரர், சீர்காழி, திருமயேந்திரப்பள்ளி அருள்மிகு திருமேனியழகர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கேன்.

(வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT