சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: தீமைக்குள்ளும் நன்மை உண்டு - தில்லை மரம்

6th Feb 2021 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா,

நான் தான் தில்லை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் எக்ஸ்கயெகரிய அகல்லச்சா என்பதாகும். நான் எபோர்பியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் கூர் நுனிப்பற்களுள்ள இலைகளையுடைய பசுமையான மரமாவேன். எனக்கு ஆட்கொல்லி மரம், மூஞ்சி வீங்கி மரம், பிளைண்ட் மரம் என்ற பெயரும் உண்டு. என்னை இந்தியில் தேஜபலம் என்று அழைக்கிறாங்க. ஆங்கிலத்தில் “டைகர்ஸ் மில்க் ட்ரீ” என்று சொல்வாங்க. நான் அலையாத்தி, மாங்ரோவ் போல கடல் அரிமானம் உள்ள சதுப்பு நிலங்களில் நன்கு வளருவேன்.

குழந்தைகளே, 100 வருட பழமையான தில்லை மரம் பூத்துக் குலுங்குகிற நேரத்தில் அதன் கீழ் நின்றால் என் பூக்களின் நெடி உங்கள் சுவாசத்திற்குள் புகுந்து உங்களை மயங்கம் அடைய செய்திடும், முகமும் பெரிதாக வீங்கிடும். அதனால் தான் மலை வாழ் மக்கள் என்னை மூஞ்சி வீங்கி மரமுன்னு சொல்றாங்க. என் மரத்தின் பால் உங்கள் உடலில் பட்டால் புண் தோன்றும். எனினும், என் இலை, விதை, பால் முதலியவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் பல மருந்து பொருள்களைத் தயாரிக்கிறாங்க. சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோவிலின் தலவிருட்சம் நான் தான். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லை வனம் என்ற பெயர் பெற்று, பின் ஊர் தில்லையானது. ஆனால், இப்போது நான் காணக் கிடைத்தற்கரிய ஒரு மரமாகி விட்டேன்.

ADVERTISEMENT

குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா, மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களில், சேக்கோட்டை, தில்லை, தும்புலா போன்ற மரங்களின் அருகே பூப்பூக்கும் காலங்களில் செல்லக் கூடாதுன்னு சொல்வாங்க. ஏன்னா, இப்பூக்கள் வீரியமுள்ள நச்சுத் தன்மையைக் கொண்டது. அதனால் அவற்றின் மேல்பட்டு வரும் காற்றை நீங்கள் சுவாசித்தால் மயக்கம் உண்டாகலாம். சில சமயம் உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியலாம்.

குழந்தைகளே, நான் உங்களுக்கு ஒரு செவிவழி கதையை சொல்லட்டுமா? கேட்பீங்களா, முன்பு சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில் கடல் அருகில் இருந்ததாகவும், அங்கு சுயம்பு லிங்கம் இருந்ததாகவும், அதன் அருகில் வளர்தாமரை குளம் இருந்ததாகவும், இந்தக் குளத்தைச் சுற்றி நான் அதிகமாக காணப்பட்டதாகவும் சொல்றாங்க. ஸ்வேத வர்மன் எனும் பல்லவ அரசன், தன் நாட்டை சிறப்பா ஆட்சி செய்து வந்தார். அவருக்கு திடீரென்று பெருநோயான குஷ்டம் வந்திடுது. அதனால், அவருடைய அரசு அதிகாரத்தை பறிச்சிட்டு நாட்டை விட்டே வெளியே அனுப்பிடறாங்க. அவர் தன் பெருநோய் தீர இந்த சுயம்புலிங்கத்தை வணங்கி, அருகிலிருந்த குளத்தில் குளிக்கிறார். அங்கேயே சில காலம் தங்கி இறைவனை வழிபடுகிறார். அப்போது அவருடைய உடம்பில் சில மாற்றங்கள் தெரியுது. அதோட அவருடைய குஷ்ட நோய் நீங்கி விடுகிறது. எப்படி இந்த ஸ்வேத வர்மனுக்கு குஷ்ட நோய் கரைந்தது என்றால் அந்தக் குளத்தைச் சுற்றியிருந்த தில்லை மரங்களின் வேர்கள் தான் காரணம். அதோட அவருடைய உடம்பு தங்க நிறமா மாறிடுது. அதனால் அவரை மக்கள் ஹிரண்ய வர்மன் என அழைக்க ஆரம்பிக்கிறாங்க. சமஸ்கிருதத்தில் ஹிரண்யா என்பதற்கு தங்கம் என்ற பொருளும் உண்டு. இந்த ஸ்வேத வர்மன் தான் அருள்மிகு நடராஜர் கோவிலை கட்டுனதா ஸ்கந்தபுரணாம் சொல்லுது.

அதனால் தான் குழந்தைகளே, என் வேர்களுக்கு தொழுநோயை குணப்படுத்தும் தன்மை இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. என் இலையைக் கிள்ளினால் அதிலிருந்து பால் வடியும், அதுல எஸ்காயெகரியன் எனும் விஷ தன்மை நிறைஞ்சிருக்கு. இது கண்களில் பட்டால் தற்காலிகமாக கண் பார்வை போய்டும். ஆனால், என் வேரை இடித்து சாரெடுத்து கண்ணில் விட்டால் பறிபோன பார்வை திரும்ப கிடைச்சிடுமுன்னும் சொல்றாங்க. என் பட்டையில ஸ்டாக்கினோன் எனும் வேதிப்பொருள் இருக்கு இதுவும் தொழுநோயை குணப்படுத்தும். அக்கால மக்கள் என் வேரையும், பட்டையையும், கொம்புகளையும், இலைகளையும் எரித்து அதிலிருந்து வரும் புகையை தொழுநோய் காயங்கள், மீது பட செய்தும் அந்நோயை விரட்டியிருக்காங்க. சுனாமி எனப்படும் பேரழிவிலிருந்து உங்களைக் காக்க என்னை கடற்கரை அருகில் நட்டு வளர்த்தால் நான் பெரிதும் உதவுவேன். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT