சிறுவர்மணி

அரங்கம்: மஹாசிங்கமும் வெண்முயலும்

DIN

காட்சி : 1(அ)
இடம் : கோமிடறு காடு / மேற்குப் பகுதி
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : மஹாசிங்கம்,  வெண்முயல்

காலை 7.10 : மஹாசிங்கம்  தூங்கி எழுகிறது. உடலைச் சிலுப்புகிறது. கொட்டாவி விடுகிறது.
காலை 7. 25 : மஹாசிங்கம் தூக்கக் கலக்கத்துடன் நீர்குடிக்க ஆற்றுக்குச் சென்று முகர்ந்து பார்க்கிறது.
காலை 7. 27 : மஹாசிங்கத்தின் பக்கவாட்டில் ஒரு வெண்முயல் திடீரெனத் தாவிக் குதித்து ஓடுகிறது. சிங்கம் தண்ணீருக்குள் தொப்பென்று விழுகிறது.
காட்சி : 1(ஆ)
இடம் : கோமிடறு காடு / மேற்குப் பகுதி
நேரம் : காலை 7.35
மாந்தர் : மஹாசிங்கம்,  மதிநரி
மஹாசிங்கம் நனைந்தபடியே எழுந்து வருகிறது.
மதிநரி  : (அதிர்ந்து) மன்னா.. நீங்களே இப்படி..
மஹாசிங்கம் : (மிகவும் அதிர்ந்து) ந.. ந.. நரியே.. நான்.. நான்.. சும்மா.. விளையாட்டிற்கு.. உள்.. உள்ளே..

(மதிநரி கண் இமைக்காமல் பார்க்கிறது.)

மஹாசிங்கம் : (தயக்கமாக)  நரியே.. நீ பார்த்ததை யாரிடமும் சொல்லவேண்டாம்.. விலங்களுக்குத் தெரிந்தால்.. என்..
மதிநரி  : (விரைவாக) சரி, மன்னா.. நான் யாரிடமும் எதுவும் கூறமாட்டேன்..
மஹாசிங்கம் : நன்றி, நரியாரே..
(மதிநரியின் கண்கள் விரிகின்றன.)

காட்சி : 2
இடம் : கோமிடறு காடு / நதிக்கரை
நேரம் : பிற்பகல் 3. 50
மாந்தர் : மஹாசிங்கம், புலி, சிறுத்தை, மதிநரி
(மஹாசிங்கம்  கோபமாக இருக்கிறது.)

புலி : கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலைதான்.. ஆனால், ஒருமுறை எங்கள் பகுதியை நீங்கள் வந்து பார்த்தால் போதும், அரசே..
சிறுத்தை : அதன்பிறகு எங்களுக்கான எல்லையை விரிவுபடுத்தலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் , வேந்தே..
மஹாசிங்கம் : இங்கே அரசன் நானா, நீங்களா ? நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்; நீங்கள் சொல்வதை நான் கேட்கமாட்டேன்; நான் வரமுடியாது சென்று விடுங்கள்..
புலி மற்றும் சிறுத்தை : (ஒன்றாக) அரசே, அரசே.. கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறோம் வேந்தே. ஒரே ஒருமுறை வாருங்கள்.. தயவுசெய்து..
மஹாசிங்கம் : (வீராப்பாக) முடியாது ! முடியாது ! முடியாது !
மதிநரி : (அங்கே வந்து) என்ன நடக்கிறது, இங்கே? மன்னா.. இவர்கள் என் பகுதியைச் 
சேர்ந்தவர்கள்..
மஹாசிங்கம் : (உளறியபடி) அப்.. அப்.. அப்படியா.. இதோ வருகிறேன் வாருங்கள், விலங்குகளே!
(புலியும் சிறுத்தையும் அதிர்ச்சி அடைகின்றன.)

காட்சி : 3
இடம் : கோமிடறு காடு /எல்லை
நேரம் : மாலை 5.50
மாந்தர் : அயன்நரி,  பசுங்கிளி,  வயல்எலி

(மதிநரி எதையோ மென்றுகொண்டு அமர்ந்திருக்கிறது.)

சிறுத்தை : நரி நண்பா, என்ன நடக்கிறது எனக்கு ஒன்றும் புரியவில்லையே..
புலி : நாங்கள் பல மாதங்களாகச் சொல்லியும் கேட்காத அரசர், நீ ஒரு வார்த்தை சொன்னதும் கொஞ்ச நேரத்திலேயே எல்லையை விரிவுபடுத்திக் கொடுத்துவிட்டாரே, எப்படி ?
(மதிநரி மெல்லுவதில் மும்மரமாக இருக்கிறது.)

சிறுத்தை : உன்னைத்தான், நரி.. (தயங்கி) நரியாரே..
மதிநரி : ம்ம்ம்.. அப்படி மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்..
புலி : சரி, நரியாரே.. விஷயத்தைச் சொல்லுங்கள்..
மதிநரி : சிங்கம் தண்ணீருக்குள் இருந்து வெளியே வருவதை நான் பார்த்தேன்.  அப்போதிருந்து இப்படித்தான்.. ஒரு மாதிரியாகத்தான் எல்லாம் நடக்கிறது..
(சிறுத்தையும் புலியும் ஒற்றை ஒன்று பார்த்துக்கொள்கின்றன.)

காட்சி : 4
இடம் : கோமிடறு காடு / வெவ்வேறு இடங்கள்
நேரம் : வெவ்வேறு நேரங்களா
மாந்தர் : மஹாசிங்கம்,  மதிநரி, விலங்குகள்

தெற்குப் பகுதி :
மஹாசிங்கம் கம்பீரமாக நடந்து வருகிறது; மதிநரியைப் பார்த்ததும் பணிவாக நடக்கத் தொடங்குகிறது.
வடக்குப் பகுதி :
மஹாசிங்கம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவை மதிநரி இழுத்துச் செல்கிறது. சிங்கம் அமைதியாகப் பார்க்கிறது.
மேற்குப் பகுதி :
விலங்குகள் சுற்றியிருக்கும்போது மதிநரி மஹாசிங்கத்தை ஏளனம்செய்து சிரிக்கிறது; மஹாசிங்கத்தின் முகம் சுருங்குகிறது.

காட்சி : 5
இடம் : விலங்குகள் கிராமம்
நேரம் : இரவு 10.15
மாந்தர் : புள்ளிமான், வரிக்குதிரை, குரங்கு, வெண்முயல்.

புள்ளிமான் : விஷயம் தெரியுமா? ஒரு மாதகாலமாக நம் மன்னர் அந்த பெரிய வால் நரிக்கு ரொம்பவும் பயப்படுகிறாராம்.
வரிக்குதிரை : ஆமாம்.. பொது இடத்தில் அந்த நரி அவரைக் கேலிசெய்தும் அவர் அமைதியாகச் சென்றுவிட்டாராம்.
குரங்கு : அந்த நரி ஏதோ மந்திரம் பழகியிருக்கிறதாம். அதை வைத்து அரசரை வசியம் செய்துவிட்டதாகப் பேச்சு இருக்கிறது..
வெண்முயல் : என்ன சொல்கிறீர்கள், எல்லோரும்? நம் அரசர் யாருக்கும் அஞ்சுபவர் அல்லவே..  
ஒரு நரிக்குப் போய்..
புள்ளிமான் : ம்ம்ம்.. அதெல்லாம் முன்னாடிதான்.. இந்த ஒருமாதமாக நரியிடம் படாதபாடுபட்டும் பணிவாகவே இருக்கிறார்.
வரிக்குதிரை : அவர் ஒருநாள் ஆற்றுநீருக்குள்ளிருந்து வந்தாராம்.. அன்றிலிருந்துதான் இந்தக் கதியாம்..
(முயல் சிந்திக்கத் தொடங்குகிறது.)

காட்சி : 6
இடம் : கோமிடறு காடு /குகை
நேரம் : காலை 10 மணி
மாந்தர் : மஹாசிங்கம், வெண்முயல்

(மஹாசிங்கம் சோகமாக படுத்திருக்கிறது.)

வெண்முயல் : (குரல்) அ.. அரசே..
மஹாசிங்கம் : (திரும்பிப் பார்த்து, கோபமாக) உரர்ர்ர்ர்.. எல்லாம் உன்னால்தான்.. நீதான் என்னை இப்படி மாற்றிவிட்டாய்..
(மஹாசிங்கம் முயலின் மேல் பாயத் தயாராகிறது.)

வெண்முயல் : (பயமும் உறுதியும் கலந்து) அரசே.. வேந்தே.. மன்னா.. ஒரு நிமிடம்.. ஒரே நிமிடம்.. எல்லாவற்றையும் தெளிவுபடுத்தி விடுகிறேன்..
(மஹாசிங்கம் அப்படியே பல்லை இறுக்கிக்கொண்டு நிற்கிறது.)

வெண்முயல் : (பெருமூச்சு விட்டு) யோசித்துக் கண்டுபிடித்துவிட்டேன், மன்னா.. அன்று.. அன்று.. நரி நீங்கள்.. நீங்கள் விழுந்ததைப் பார்க்கவே இல்லை..நீண்ட நேரம் கழித்தே நான் அதைக் கடந்து ஓடினேன்..
மஹாசிங்கம் : (அதிர்ந்து) அப்.. அப்படியென்றால் ?
வெண்முயல் : ஆம், அரசே.. அந்த நரிக்கு எதுவும் தெரியாது. நீங்கள் தேவையில்லாமல் பயத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.. அது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகிறது.
(மஹாசிங்கம் அமைதியாக இருக்கிறது.)

வெண்முயல்: மன்னா, தாங்கள் இடறி விழுந்தது வெளியில் தெரிந்தால்.. அதற்கு அஞ்சித்தான் நீங்கள்.. 
மஹாசிங்கம் : (சிறிது நேரம் சிந்தித்துவிட்டு) ஆம்.. முயலே.. ஆம்..
வெண்முயல் : பிறருக்குத் துன்பம் கொடுப்பதற்கும் ஏளனம்செய்வதற்கும்தான் நாம் அஞ்சவேண்டிய குற்றங்கள், மன்னா.. இது போன்ற சிறு சிறு இடர்ப்பாடுகளுக்கு அஞ்சலாமா ?
மஹாசிங்கம் : புரிந்துகொண்டேன், முயலே.. நரியிடம் நான் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது.. முடித்துவிட்டு வருகிறேன்..
(திடமாகச் செல்லும் மஹாசிங்கத்தை மகிழ்ச்சியுடன் பார்க்கிறது வெண்முயல்.)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT