சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பழங்கால மரம் - படை மரம்

10th Apr 2021 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா?

நான்தான் படை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஸ்ரீபெரா ஸ்வீட்டினொய்டெஸ் என்பதாகும். நான் ஒலியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மகாலிங்க மரம் என்ற வேறு பெயருமுண்டு. என்னை ஆங்கிலத்தில் "வீவர்ஸ் பீம் ட்ரீ' என அன்பா அழைப்பாங்க. என் இலைகள் இறகு வடிவமாய் இருக்கும். என் பூக்கள் மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறத்திலிருக்கும். என் கனிகள் முட்டை வடிவில் இருக்கும். நான் ஏப்ரல் மாதம் முதல் காய்க்கத் தொடங்குவேன். ஒவ்வொரு கனியிலும் நான்கு விதைகள் இருக்கும். நான் சர்வதேச அளவில் பிரபலமானவன். அதனால்தான் என்னைப் பற்றிய குறிப்பு பைபிளில் இருக்கு. "அவனுடைய (கோலியாத்து) ஈட்டி தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும், அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும். பரிசை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்' என்று என்னைப் பற்றி பைபிளில் குறிப்பு இருக்கு.உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, ஒரு நெசவுத்தறியில் "வீவர்ஸ் பீம்' என்பது மிக முக்கியப் பகுதி. அது ஒரு உறுதியான சட்டம் போல இருக்கும். இது தறியின் மேல் பகுதியில் ஒன்றும், அடிப்பகுதியில் ஒன்றும் இருக்கும். இந்தச் சட்டம் மிக உறுதியான மரத்தில் தான் செய்ய முடியும். அந்த இரண்டு "வீவர்ஸ் பீம்' களுக்கு இடையேதான் நூல்கள் ஓடும். இதைத் தான் "படை மரம்' என்று சொல்கிறது பைபிள். அந்தப் படை மரம் என்பது நான்தான், நினைக்கவே மகிழ்ச்சியளிக்கிறது.

என் பட்டை, வேர், பழங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. என் இலைகள் தோல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. என் இலைகளையும், பட்டைகளையும், வேர்களையும், கஷாயமாக செய்து அருந்தினால், வயிற்றுல் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் கரைவதுடன், உடல் பருமனும் குறையும்.

ADVERTISEMENT

அது மட்டுமா? என் பழங்களை உண்டால் நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னைகள், செரியாமை பிரச்னைகள், குடற்பூச்சிகள் தொல்லை, உடல் பருமன், கல்லீரல் பிரச்னைகள் தீரும். விஷ முறிவுக்கும் இது அருமருந்து. அது மட்டுமா குழந்தைகளே, என் பழங்கள் சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் அருமருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

குழந்தைகளே, மரங்கள் நீங்கள் உண்டு உயிர் வாழ காய், கனிகள், இலைகளை மட்டும் கொடுக்கவில்லை. நீங்கள் சுற்றுச்சூழலால் பாதிக்கக்கூடாது என்பதற்காக சுற்றுப்புறத்திலுள்ள அசுத்த காற்றை தான் ஈர்த்துக் கொண்டு புதிய காற்றை வெளியிடுது. நீங்கள் உயிர் வாழ காற்று அவசியம். அந்தக் காற்றில்தான் நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் இருக்கு. நாங்க நீங்கள் விடும் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கிட்டு, உங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை தருகிறோம். உங்களுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவை. எனவே, நீங்க மரங்களை வெட்டி வீழ்த்தி வீராப்பு பேசி வந்தால், பாதிப்பு உங்களுக்குத்தான், காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் என்பதை மறந்துடாதீங்க. நீங்கள் வாழ மட்டுமின்றி, பறவை இனங்கள், பூச்சி இனங்கள், விலங்கினங்கள் போன்ற அனைத்து வகை உயிரினங்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது மரங்கள் மட்டும் தான் குழந்தைகளே. ஆகவே, பிற உயிர்களை வாழ வைக்கும் மரங்களை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. உங்களுக்குத் தெரியுமல்லவா குழந்தைகளே, மழைக்குக் காரணமே மரங்கள்தான், அவை அழிந்தால், மழை குறையுமென்று. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)

Tags : பழங்கால மரம் - படை மரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT