சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: இந்திய பாதாம் மரம்

19th Sep 2020 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

குழந்தைகளே நலமா,

நான் தான் இந்திய பாதாம் மரம் பேசுகிறேன்.  என்ன இவனுக்கு இவ்வளவு நாட்டுப் பற்றா, பெயருக்கு முன்னால் இந்தியா என்று சொல்கிறானே என்று எண்ண வேண்டாம். பாதாம் வேறு,  இந்திய பாதாம் வேறு.  அவருடைய தாவரவியல் பெயர் அல்மண்ட் பிரனஸ் டல்சிஸ் என்பதாகும்.  என்னுடைய தாவரவியல் பெயர் இந்தியன் அல்மண்ட் டெர்மினாலியா கட்டப்பா  என்பதாகும்.  நான் நம்முடைய வெப்பமண்டலத்தில் வளரும் ஒரு வகை இலையுதிர் மரமாவேன்.  என் இலைகள் நீண்ட முட்டை வடிவத்தில் 
இருக்கும். 

என்னை சிலர் தமிழகத்தில் பாதானி என்றும், வாதானி என்றும் அழைக்கிறார்கள். என் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூரா, இந்தோனேசியாவா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில், நம் தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறேன். நான் பார்ப்பதற்கு அழகிய குடை போல் இருப்பதால், என்னை அழகுக்காகவும் பெரிய தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கிறார்கள். 

குழந்தைகளே, நான் சுமார் 25 மீட்டர் உயரம் வரை வளருவேன். என் கிளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது போல் குடை வடிவத்திலிருக்கும்.  என் இலைகள் கரும் பச்சை நிறத்தில் தோன்றி, நாளாக மஞ்சள் நிறத்தில் மாறி, பின் சிவப்பு நிறமாகி உதிர்ந்து விடும். என்னுடைய பழங்கள் சிறியதாக, கூர்மையான முட்டை வடிவத்திலிருக்கும்.  அதாவது, குழந்தைகளே, பச்சை நிறத்தில் காயாக இருந்து, மஞ்சள் நிறத்தில் நார் நிறைந்த ஓட்டின் மீது நல்ல சதை கொண்ட பழமாக மாறி கீழே விழுந்து விடும். விழுந்த பழத்தின் மேலே உள்ள சதைப் பகுதியை உடைத்தால் உள்ளே பருப்பு இருக்கும். இது உண்மையான பாதம் பருப்பின் சுவையை ஒத்ததாக இருக்கும். அதனால் தான் என்னை இந்திய பாதாம் என்று அழைக்கிறாங்க. என் சதைகளை பறவைகள் விரும்பி உண்ணும். 

ADVERTISEMENT

குழந்தைகளே, என் இலைகள் அடர்த்தியாக சீரான கிளைகளில் பெரியதாக இருப்பதால் உங்களுக்கு நல்ல நிழல் கொடுப்பேன்.  என் வேர்கள் நன்றாக மண்ணோடு இறுகி வளரும் தன்மையானது என்பதால் நான் மண் அரிப்பையும் தடுப்பேன். எனவே என்னை நீங்கள் ஆற்றோரங்களில் வளர்க்கலாம். 

நீங்கள் வளர்க்கும் மீன் தொட்டிகளில் மீனுக்கு உணவு இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு வேண்டாம் அந்தக் கவலை. என் காய்ந்த இலைகளை பொடியாக்கி மீன் தொட்டிகளில் போட்டால் குட்டி, சுட்டி மீன்கள் அதை விரும்பி உண்பார்கள். விரைவில் குஞ்சுப் பொரிப்பார்கள். குறிப்பாக "பீட்டா' எனப்படும் ஒரு வகை மீன்கள் வளருவதற்கு என் காய்ந்த இலைத் தூள்களை பயன்

படுத்தறாங்க. என் இலைகளும்,  பட்டைகளும் சாயம் தயாரிக்கவும் பயன்படுகின்றன.   நீங்கள் அணியும் ஆடைகளிலும் சாயமேற்ற நான் பயன்படுகிறேன். 

என் இலைகள், பட்டைகள், பழத்தின் சதை, பருப்பு  ஆகியவற்றின் மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் அவை இன்றும் ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு வருகின்றன. என் பழம் மற்றும் இலைகளில் பாக்டீரியா பூஞ்சைகளை அழிக்கும் சக்தி நிறைய இருக்கு. குழந்தைகளே. உங்கள் உடம்பில் கரும்புள்ளியிருந்தால் என் பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துப் பாருங்கள் கரும்புள்ளி மறைந்து விடும்.  என் பருப்புகளை நீங்கள் உண்டால் உங்களுக்கு வயிற்றுப் போக்கு இருக்காது, குடல் வியாதிகள் தீரும். 

சீன மக்கள் என் காய்ந்த இலைகளை அரைத்து தேயிலைக்குப் பதிலாக பயன்படுத்துகிறார்கள். என் காயைக் கல்லால் உடைத்துப் பருப்பை சாப்பிடலாம், சுவையாக இருக்கும். என் காயிலிருந்து பருப்பை உடைக்கிறேன் என்று சொல்லி உங்கள் விரல்களை காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். வருடத்திற்கு 18 மில்லியன் கன மீட்டர் காற்றினைத் தூய்மை செய்யும் பணியை மரங்கள் ஆற்றுகின்றன. காடின்றேல் நாடில்லை. துயரம் நீங்க தூய்மை காப்போம். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT