சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: கப்பல் வித்தான் கொட்டை  - முந்திரி மரம்

பா.இராதாகிருஷ்ணன்

குழந்தைகளே நலமா?

நான் தான் முந்திரி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் அனகார்டியம் ஆக்சிடெண்டேல் என்பதாகும். நான் அனகார்டியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். அனகார்டியம் என்ற பெயர் என் பழத்தின் உருவத்தை விளக்குகிறது. அன என்றால் மேல்நோக்கியது என்று பொருள், கார்டியம் என்றால் இதயம் என்று பொருள். ஆங்கிலத்தில் காஷு என்று சொல்றாங்க. அது காஜு என்ற சொல்லில் இருந்து வந்தது. எனது தாயகம் பிரேசில். நான் செம்மண், பொட்டல்மண் நிறைந்த பகுதிகளில் நன்றாக வளருவேன்.

குழந்தைகளே, முந்திரியில் முந்திரிப் பழம் என நீங்கள் அழைப்பது, பழமல்ல. அது பொய்க்கனி. இது பூவின் சூலகப் பகுதியிலிருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியிலுள்ள தடித்த பூக்காம்பு பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்திலிருக்கு. முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவிலிருக்கும் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழமாகும். இது பழமாக இருந்தாலும், உள்ளேயிருக்கும் உண்ணக் கூடிய பகுதி தான் முந்திரிக் கொட்டை என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளே, 1560 - 1565 ஆண்டுகளில் நம் நாட்டை போர்த்துகீசியர்கள் ஆண்டபோது என்னை கோவாவில் நட்டு பலன் பல பெற்று மகிழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நான் அதிகமா காணப்படறேன். எனக்கு கப்பல் வித்தான் கொட்டை என்ற காரணப் பெயருமுண்டு. ஏன்னா, என் சுவையில் மயங்கி போர்த்துகீசியர்கள் கப்பலை விற்று என்னை வாங்கி உண்டதாகவும் கூறுவர்.

என்னிடம் மோனோசாச்சுரேட்டம் சத்து உள்ளதால், அது கெட்டக் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், ஆன்டிஆக்சிடென்ட், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்துநாகம் போன்ற தாது உப்புகளும், பி5, பி6, தயாமின், ரிபோஃபிளேவின் போன்ற சத்துகளும் உள்ளன. உங்கள் உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்தும் எங்கிட்ட இருக்கு. உங்களை புற ஊதாக் கதிர்களிலிந்து காப்பதோடு, விரைவில் முதுமை தோற்றம் அடைவதையும் முந்திரி தந்திரமாகத் தடுக்கும். என் பழத்தில் புரோ ஆந்தோசையனிடின் எனும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகமுள்ளது, இது புற்றுநோய் செல் வளர்ச்சியைத் தடுத்து, அக்கொடிய நோய் வராமல் தடுக்கும், அதோட நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அது மட்டுமா, மலேரியா, ஆஸ்துமா, மார்புச் சளி, தோல் தடிப்பு, இருமல், நீரிழிவு, செரியாமை, தோல்படை, காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, சோரியாசிஸ், வாய்ப்புண், உள்நாக்கு அழற்சி, வாய்ப்புண், சிறுநீர்ப்பாதை கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு முந்திரி மருந்தாக பயன்படுத்தப்படுது.

என் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் பிசினை மரப்பொருட்களின் மீது பூசினால் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது குழந்தைகளே, என் பச்சைப் கொட்டையிலிருந்து வெளியாகும் பால் உருசியோல் என்று சொல்வாங்க. இப்பாலை நீங்க தொடதீங்க, இது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால், அடங்கா யானையை அடக்க இப்பாலை பயன்படுத்தறாங்க.

குழந்தைகளே, முந்திரியில் காப்பர் எனும் தாதுப் பொருள் இருக்கு, இது உங்கள் கூந்தலின் கருமை நிறத்தை என்றும் காக்கும். முந்திரி, உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் காக்கும். தூக்கம் வரவில்லையா, கவலைப்படாதீங்க முந்திரியை சாப்பிடுங்க, நல்லா தூக்கம் வந்து புத்துணர்ச்சியோட எழுந்து அன்றைய பணியை துவக்குவீங்க. மழைக்கு முக்கிய காரணமான மரங்களை நடுங்க, வளம் பல பெறுங்க. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT