சிறுவர்மணி

அரங்கம்: நேசக்கரம்

தினமணி

காட்சி -1
இடம்: வாணியின் வீடு.
பாத்திரங்கள்: வாணி, அம்மா, அப்பா, வாணியின் பள்ளித் தோழன் ரவி.
(ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது)

(வாணி, ரவி இருவரும் ஒரே பள்ளியில், ஒரே குடியிருப்பில் வசிப்பவர்கள். இருவரும் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வாணியின் அம்மா காமாட்சி...)

காமாட்சி: மூணு மாதத்துக்குப் பிறகு வெளியே கிளம்புறீங்க... இதைக் கொஞ்சம் குடிச்சுட்டுப் போங்க..
ரவி: என்ன ஆன்ட்டி இது?
காமாட்சி: கஷாயம்பா... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய்த் தொற்று தாக்காமல் உங்களைப் பாதுகாக்கும்...
வாணி: அம்மா... நான்தான் இரண்டு நாளைக்கு முன்னாடி குடிச்சேனே... ரொம்ப கசக்குதும்மா...
காமாட்சி: வெளியே போகப் போறீங்க... அவசியம் குடிச்சிட்டுத்தான் போகணும்... கசப்பு, துவர்ப்புன்னு நாம ஒதுக்குற உணவுப் பண்டங்கள்தான் நம்ம உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருது... ஆனா... நோய் வந்ததும்தான் நாம அதைத் தேடிப் பிடித்து சாப்பிடுறோம்...
ரவி: எனக்கு குடுங்க ஆன்ட்டி நான் ஒரே மூச்சுல லபக்குன்னு குடிக்கறேன்...
காமாட்சி: நீங்க இதைக் குடிச்சிட்டுக் கிளம்பினா.... நானும் உங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமே... (இருவரும் கஷாயத்தை வாங்கிக் குடித்தனர்.)
வாணியின் அப்பா: இதை அவசியம் போட்டுட்டுப் போங்க... (கதர் துணியால் செய்த முகக் கவசத்தையும், கை உறைகளையும் கொண்டு வந்து தந்தார்)
காமாட்சி: பசங்களா... ரொம்ப நாள் கழிச்சு உங்க ஃபிரண்ட்சைப் பார்க்கப் போறீங்க... ஆர்வக் கோளாறுல... ஒருத்தரை ஒருத்தர் தொட்டுப் பேசாதீங்க... கை குலுக்காதீங்க.. கை, காலை சுத்தம் செஞ்சிட்டு வீட்டுக்குள்ளே போங்க... உங்க ஃபிரண்ட்சுக்குக் கொடுக்க வேண்டியதை மறக்காம கொண்டு போங்க..
வாணி: சரிம்மா.... நாங்க கிளம்பறோம் (இருவரும் கிளம்பினர்)

காட்சி - 2
இடம்: அண்ணாநகர், திருமங்கலம் நாற்கரச் சாலை.
பாத்திரங்கள்: வாணி, ரவி, வயதான போக்கு
வரத்துக் காவலர்.


(வாணியும் ரவியும் ஆளுக்கொரு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தனர். ரவியின் சைக்கிளில் பொருள் நிறைந்த ஒரு பெரிய பையும், ஒரு லேப்டாப் பையும் இருந்தன. வாணியின் சைக்கிளிலும் அதேபோல இருந்தன. அப்போது காவலர் அவர்களை வழிமறித்தார்.)

காவலர்: ஊரடங்கு நேரத்தில் வீட்டுல இருக்காம இருவரும் எங்கே கிளம்பிட்டீங்க...? அம்மா, அப்பா உங்களைக் கண்டிக்க மாட்டாங்களா...?
வாணி: அவங்க அனுமதியோடதான்....எங்க ஃபிரண்ட்ஸ் வீட்டுக்குப் போறோம்...
காவலர்: இந்த நேரத்துல எதுக்காகப் போறீங்க...?
ரவி: எங்களுக்கு ஒரு மாசமா ஆன்லைன்ல பாடம் நடத்துறாங்க சார்...எங்க வகுப்புல படிக்கிற எல்லார்கிட்டேயும் அதுக்கான வாய்ப்பு வசதி இருக்கு.... ஆனா... எங்க வகுப்புல படிக்கும் ராமுவும், லதாவும் மிகவும் ஏழை. அவர்களிடம் ஸ்மாட் ஃபோனோ, லேப்டாப்போ, கம்ப்யூட்டரோ கிடையாது. அதனால... டீச்சர் ஆன்லைனில் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை நோட்ஸ் எடுத்து வைத்து, நாங்க அவர்களுக்குக் கொண்டு போய்த் தரப் போகிறோம்... "திடீர்னு ஸ்கூல் ஆரம்பிச்சுட்டா அவங்க என்ன பண்ணுவாங்க... நீங்கள் அவங்க வீட்டுக்குப் பக்கத்துலதான இருக்கீங்க... போய்க் கொடுத்துட்டு வாங்கன்னு' எங்க ஆன்லைன் டீச்சரே சொன்னதுனாலதான் சார் கிளம்பினோம்...
வாணி: இதோ பாருங்க சார்.. எங்க டீச்சர் எங்களிடம் சொன்னதை... நாங்கள் விடியோ எடுத்து வச்சிருக்கோம்... வழியில் யாராவது... உங்களை விசாரித்தால் இதைக் காட்டச் சொன்னாங்க...
காவலர்: கொண்டா அந்த ஃபோனை... என்ன சொல்லியிருக்கார்னு பார்க்கிறேன்.... (வாங்கிப் பார்த்தார்) ம்ம்ம்.... இந்த வருஷம் உங்க படிப்பு ஆன்லைன்லயே முடிஞ்சிடும் போலிருக்கே... ஆமா... சைக்கிள் பின்னாடி என்ன பையில...?
ரவி: மளிகை பொருள்கள் சார்... எங்க ஃபிரண்ட்ஸ் வீட்டுல மூனு மாசமா யாரும் வேலைக்குப் போகாததுனால... பாவம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவாங்களேன்னு எங்க அம்மாவும் வாணி அம்மாவும் கொடுத்தனுப்பினாங்க...
காவலர்: பசங்களா... இந்த மாதிரி கஷ்டகாலம் வரும்போதுதான் நாம் பிறருக்கு உதவணும்... அதுக்காகவாவது நாம இந்தக் கரோனாவுக்கு நன்றி சொல்லணும்... பத்திரமா போய்ட்டு வாங்க...
(காவலருக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் சைக்கிளில் ஏறிச் சென்றனர்)

காட்சி -3
இடம்: ராமுவின் வீடு
பாத்திரங்கள்: வாணி, ரவி, ராமு, ராமுவின் அம்மா.
(வாணியையும் ரவியையும் பார்த்ததும் ராமு மிகவும் மகிழ்ந்து ஓடிவந்தான்)

ரவி: நில்லு...நில்லு... ஆறடி தள்ளியே நில்லு.... (என்று சிரித்தான்). ராமு அம்மா... இந்தாங்க... எங்கம்மா உங்களிடம் இந்த மளிகைப் பொருள்களைக் கொடுக்கச் சொன்னாங்க...
ராமுவின் அம்மா: ரொம்ப நன்றிப்பா... ஆபத்துக்கு உதவின உங்க அம்மாவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை... (நெகிழ்ந்தார்).
ரவி: தாங்க்ஸ்செல்லாம் எதுக்கு ஆன்டி... மனுஷனா பிறந்தவங்க ஒருத்தருக் கொருத்தர் உதவனும்னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க... சரி... வாடா... ராமு... உனக்கு டீச்சர் நடத்தின பாடத்தைக் காட்டறேன். கடகடன்னு நோட்டுல எழுதிக்கோ... வாணி... நீ அதுக்குள்ள லதா வீட்டுக்குப் போய் அவளுக்கு வேண்டியதைக் கொடுத்துட்டு டீச்சர் நடத்திய பாடத்தையும் காட்டிட்டு இங்கே வந்துடு... நாம இங்கிருந்தே கிளம்பலாம்...
வாணி : சரி.

காட்சி - 4
இடம்: லதாவின் வீடு
பாத்திரங்கள்: வாணி, லதா, லதாவின் அம்மா, தாத்தா.
(லதாவுக்கு அப்பா கிடையாது. வயதான தாத்தாதான் இருக்கிறார். அவரும் நோயாளி. லதாவின் அம்மா ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து லதாவைப் படிக்க வைக்கிறார்)

லதா: ஹாய்... வாணி... நல்லாயிருக்கியா..?
வாணி: ஓ.. நல்லாயிருக்கேனே.. ரவியோடுதான் வந்தேன். அவன் ராமு வீட்டில் இருக்கான். லாக்
டவுன் இரண்டு மாசம் ரொம்ப போர்டி... இப்ப ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சதுனால... கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கேன்... லதா அம்மா... இந்தாங்க.. மளிகைப் பொருள்கள்.. அம்மா இதையெல்லாம் உங்ககிட்டகொடுக்கச் சொன்னாங்க.. கூடவே தாத்தாவுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளும்... முகக்கவசம், சானிடைசர்களும் இருக்கு... மறக்காம யூஸ் பண்ணுங்க... வேற என்ன தேவைன்னாலும் கூச்சப்படாம கேட்கச் சொன்னாங்க...
லதாவின் அம்மா: ரொம்ப... நன்...றி...ம்ம்மா... (அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது)
லதா: டீச்சர் என்னடி சொல்லிக் கொடுத்தாங்க...? எப்பதான் ஸ்கூல் ஓபன் ஆகுமோன்னு இருக்குடி வாணி...
வாணி: எனக்குந்தான்டி.... சரி, கையை சுத்தம் செய்துகிட்டு வந்து பாடத்தைப் படிக்கலாம். (இருவரும் கையை சுத்தம் செய்தனர்) வாணி தான் கொண்டு வந்த லேப்டாப்பைத் திறந்து ஆன்லைனில் நடந்த பாடங்களை (விடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்ததால்) லதாவை எழுதிக்கொள்ளச் சொல்ல... அவளும் எழுதினாள்).
லதாவின் அம்மா: இந்தாம்மா... வாணி கண்ணு... நீ பெரிய வீட்டுப் புள்ள... என் புள்ள படிப்புக்காக இந்த ஊரடங்கு நேரத்துலேயும் இம்புட்டு சிரமப்பட்டு வந்திருக்கே... உனக்கு ஒரு வா வரக் காப்பித் தண்ணியாவது தரணுமில்லே... மறுக்காம வாங்கிக்கக் கண்ணு...
(பால் இல்லாமல், சுடுநீரில் காப்பித் தூளையும் பனை வெல்லத்தையும் போட்டு அன்பாகக் கொண்டு வந்து கொடுத்த அந்த அம்மாவிடமிருந்து அதை வாங்கி, ஏழைகளின் அன்புகலந்த அந்த வரக் காப்பியை ரசித்துக் குடித்துவிட்டு "நல்லா இருக்கு ஆன்டி உங்க வரக் காப்பி' என்றாள். லதா பாடங்களை எழுதி முடித்தவுடன் லதா வீட்டாரிடம் சொல்லிக்கொண்டு ராமுவின் வீட்டுக்குப் போனாள். அங்கிருந்து வாணியும் ரவியும் தங்கள் வீட்டுக்குக் கிளம்பினர்)


காட்சி - 5
இடம்: அண்ணாநகர் நாற்கரச் சாலை....
பாத்திரங்கள்: வாணி, ரவி, அதே காவலர்.


(காவலர் எதிர் திசையில் போய்க் கொண்டிருந்த இருவரையும் பார்த்து, கையைக் காட்டினார். தான் அங்கு வருவதாக ஜாடை காட்டியவர் சட்டென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே வாணியும் ரவியும் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையைக் கடந்து போய் அவரை மெதுவாகத் தூக்கி சாலையின் ஓரத்தில் உட்கார வைத்தனர். ரவி தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அவர்
முகத்தில் தெளித்தான். காவலர் சுய நினைவுக்கு வந்தார்)
ரவி: என்னாச்சு... சார்...? (அவர் கையில் ரத்தம் கசிவதைப் பார்த்த ரவி தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை ஊற்றி அவர் கையை மண் இல்லாமல் சுத்தப்படுத்தினான்.)
காவலர்: வயசாயிடுச்சு பசங்களா... பி.பி. வேற இருக்கு... திடீர்னு திடீர்னு மயக்கம் வந்தா இப்படித்தான் கீழே தள்ளிவிட்டுடுது... ரொம்ப தாங்ஸ் பசங்களா...
வாணி: இந்தாங்க இந்த பேண்டெய்டைப் போட்டுக்கோங்க... சீக்கிரம் சரியாயிடும்... (தன் பையைத் திறந்து ஒரு பேண்டெய்டை எடுத்து அவருக்குப் போட்டுவிட்டாள்.)
காவலர்: பரவாயில்லையே... கைவசம் எல்லாம் வச்சிருக்கீங்களே...
வாணி: எப்போதும் பஸ்ட் எய்டு திங்ஸ் எங்கிட்ட இருக்கணும்னு அப்பா சொல்லியிருக்காரு... உனக்குப் பயன்படாட்டியும் மத்தவங்களுக்காவது ஆபத்துக்கு உதவும், வெளியில் செல்லும்போது கட்டாயம் இது உன் பையில் இருக்கணும்னு சொல்லியிருக்காரு...
காவலர்: ரொம்ப நன்றி பசங்களா... ரோட்டுல ஒரு ஈ... காக்கா கூட இல்லை... நீங்க மட்டும் இல்லேன்னா... என் நிலைமை என்ன ஆகியிருக்கும்? பார்த்துப் போங்கப்பா... நீங்க நல்லாயிருக்கணும்...
(காவலர் உள்ளம் அந்தச் சிறுவர்களை வாழ்த்தியது. வாணியும் ரவியும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தனர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பணியாணைக்காக காத்திருப்பு

வந்துசோ்ந்த இயந்திரங்கள்

சீலாம்பூா் கபரி மாா்கெட்டில் இளைஞா் கொலையுண்ட சம்பவத்தில் 2 போ் கைது

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

SCROLL FOR NEXT