சிறுவர்மணி

கருவூலம்: தோதாய்ஜி!

17th Oct 2020 06:00 AM | கோட்டாறு ஆ.கோலப்பன்

ADVERTISEMENT

புத்தரின் கொள்கைகளால் வசீகரிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஜப்பானில்புத்தருக்குப் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியக் கோயில் "நாரா' என்னும் ஜப்பானிய நகரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு "தோதாய்ஜி' கோயில் என்று பெயர்.

கி.பி. 738 இல், "ஷோமு' என்ற பேரரசர் ஜப்பானை ஆண்டு வந்தார். அப்போது ஜப்பானில் பூகம்பத்தினாலும், கடல் சீற்றத்தினாலும் பேரழிவு ஏற்பட்டது. இத்தகைய பேரிடரிலிருந்து நாட்டை புத்த பகவான் காப்பாற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கை பேரரசர் ஷோமுவுக்கு இருந்தது. எனவே நாரா என்னுமிடத்தில் புத்தருக்கு "தோதாய்ஜி' கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயிலைக் கட்டிமுடிக்க சுமார் 14 ஆண்டுகள் ஆயின. கி.பி. 752 - ஆண்டு தோதாய்ஜி கோயில் கட்டி முடிக்கப்பட்டது. தோதாய்ஜி என்றால் கிழக்கின் மிகப் பெரிய கோயில் என்று பொருளாகும்!

இங்கு அமைக்கப்பட்ட புத்தருக்கு "டாய்புட்சு' என்று பெயர். டாய்புட்சு என்றால் "பிரம்மாண்ட புத்தர்' என்று பொருள்!

ஆனால் இந்தக் கோயில் ஜப்பானிய மக்களால் பெரும்பாடு பட்டு கட்டப்பட்டதாகும்.

ADVERTISEMENT

சுமார் 26 லட்சம் பேர் இக்கோயிலைக் கட்ட பொன்னாகவும் பொருளாகவும் தந்தார்கள்! சுமார் மூன்று லட்சம் பேர்கள் இக்கோயிலை நிர்மாணிக்க நேரடியாகத் தங்கள் உழைப்பைத் தந்து உதவினர்.

இக்கோயில் முழுக்க, முழுக்க மரத்தால் ஆனது!

உள்ளே முகத்தில் சாந்தம் தவழும் புத்தரின் பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டது! இதில் இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், தோதாய்ஜி கோயிலின் திறப்பு விழாவில் சுமார் 10,000 புத்த பிட்சுக்கள் கலந்து கொண்டனர்! சுமார் 4000 நடனக் கலைஞர்கள்கி.பி. 752 - இல் நடந்த இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மற்றும் ஒரு மிகமிக சுவாரசியமான தகவல்! சிலையின் கண்களைத் திறக்கும் மிகமிக முக்கிய சம்பிரதாய நிகழ்ச்சி! ஏராளமான பொதுமக்களும், புத்தபிட்சுக்களும் சூழ்ந்திருந்தனர்!

அப்போது அந்த மிக முக்கிய நிகழ்ச்சியான "கண்கள் திறப்பு' சடங்கை இந்தியாவிலிருந்து சென்ற "போதி சேனா' என்ற புத்த சந்நியாசி நிறைவேற்றி வைத்தார்.

பக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது!

போதி சேனா இந்தியாவிலிருந்து புத்த தத்துவங்களை ஜப்பானிய புத்த சந்நியாசிகளுக்கு போதிக்கச் சென்றவர் ஆவார்.

பிரம்மாண்ட புத்தர் சிலையின் உயரம் சுமார் 49 அடி 7 அங்குலம் ஆகும். முகம் மட்டும் 17 அடி 6 அங்குலம்! இச்சிலையின் கைகளில் சுமார் 6 பேர் உட்காரலாம்! "டாய்புட்சு' சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது.

ஜப்பானிய மக்கள் புத்தரின் மீது கொண்ட பக்தியையும், அன்பையும் இந்தச் சிலை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT