சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: ஊட்டச்சத்து தரும் - கிளைரிசிடியா மரம்

17th Oct 2020 06:00 AM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT


குழந்தைகளே நலமா?

நான் தான் கிளைரிசிடியா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் கிளைரிசிடியா மேக்குலேட்டா, கிளைரிசிடியா செப்பியம் என்பதாகும். நான் பாபேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை மூடாக்கு மரம், சீமை அகத்தி, சீமை கொன்றை என்றும் சொல்வாங்க. எனக்கு கரிசல் மண்ணிலும், பாறைகள் அதிகம் கொண்ட இடங்களிலும் வளரும் திறன் இருக்கும்.

மண்ணின் ஈரப்பதத்தைத் தாங்கி நான் வளருவேன். நான் வெளிறிய உட்பகுதியுடன் கூடிய சிறிய இலை உதிரக் கூடி மரமாவேன். சிறிய மரமான நான் எனது வேர் முடிச்சுகளின் மூலம் நிலத்தில் தழைச் சத்தை நிலைப்படுத்தக் கூடிய இருவித்திலை மரமாவேன். அதனால், என்னை நீங்கள் வளர்த்தால் உங்கள் மண் வளம் அதிகமாகும்.

எப்படி? என் இலைகள் வேகமாக மட்கி மண்ணில் கரைந்து மண்ணை வளப்படுத்தும் இயல்புடையது. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துவேன். நிகராகுவா நாட்டின் பிரபலமான கோகோ பயிருக்கு நிழல் தரும் மரம் நான் தான். அங்கு என் பெயர் கோகோ ஷேட் ட்ரீ என்பதாகும்.

ADVERTISEMENT

என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனம். என் இலைகளில் ஊட்டச்சத்து அதிகமாயிருக்கு. என் தழைகளை மாடுகளுக்குக் கொடுப்பதன் மூலம் பசுந்தீவனச் செலவை நான் வெகுவாகக் குறைக்கிறேன். நான் விளை நிலங்களுக்கு நல்ல தழை உரமாவேன். என் இலைகளுக்கு இடையே சிவப்பு ஊதாநிறத்தில் பளிச்சென்று பூக்கள் நீண்ட கிளைகளில் முழுவதுமாக பூத்துக் குலுங்கும். சுற்றுப்புறத்தை அழகு ஊட்ட என்னை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும், வளர்க்கலாம்.

என் கிளைகள் காகிதம் தயாரிக்கவும், மரக்கூழ் செய்யவும் பயன்படுத்தலாம். ஏழை, எளிய மக்கள் சிறந்த எரிபொருளாகவும் என்னைப் பயன்படுத்தறாங்க. என்னை மக்கள், விறகுக்காகவும், கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்கவும், பசுந்தாள் உரத்திற்காகவும், உயிர் வேலி அமைக்கவும், அதிக வெப்பத்தில் என்னருகில் வளரும் மற்ற செடிகள் கருகாமல் இருக்கவும் என்னை பந்தலாக்கியும் வளர்க்கிறாங்க. குறிப்பாக, காபி பயிருக்கு என்னை நிழல் தரும் மரமா வளர்க்கலாம்.

அது மட்டுமா குழந்தைகளே, நான் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி, மண்ணின் வளத்தினை அதிகப்படுத்த உதவுகிறேன். நான் வெட்ட வெட்ட
அதிகப்படியான கிளைகளை உருவாக்கி இலைகளைப் பெருக்கி, பேசா நம் குழந்தைகளான கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கிறேன். அதாவது தழைச்சத்தை நான் அதிகமாகக் கொடுப்பேன்.

குழந்தைகளே, உங்களுக்கு இதிலிருந்து என்னத் தெரியுது. நாங்க இப்பூபந்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வைத் தருகிறோம். சாதாரண அளவுள்ள ஒரு மரம் தன் ஆயுள் காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெருமானமுள்ள சேவையை செய்கிறது. வறட்சியிலும் வாடாத வளங்களை நீங்கள் பெற வேண்டுமா, மரங்களை நடுங்க, பலன்கள் பெறுங்க. உங்களின் கால்நடை வளர்ப்புகளுக்கு நான் பக்க பலமா இருப்பேன். மிக்க நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT