சிறுவர்மணி

அரங்கம்: வழிகாட்டி!

17th Oct 2020 06:00 AM | உஷாதீபன்

ADVERTISEMENT

 

காட்சி - 1   
இடம்:  வீடு  
நேரம்-காலை 7.00 மணி  
மாந்தர்- சுந்தர்ராஜன்-அப்பா  கமலா-அம்மா - ரகு-மகன்

சுந்தர்ராஜன் - ரகு...கீழே போய் நியூஸ் பேப்பர் போட்டிருக்கானான்னு பார்த்து எடுத்திட்டுவா....
கமலா - ...நீங்களே போய் எடுத்திட்டு வரக் கூடாதா?    படிக்கிறான்ல....
சுந்தர்ராஜன் -  காரணமாத்தான் சொல்றேன்...
ரகு...போடா கண்ணு...போய்  பேப்பர் எடுத்திட்டு வா....
கமலா -    அன்னைக்கு ஒரு நாள் லிப்ட்ல போய் மாட்டிக்கிட்டான்......அது போல திரும்பவும்     ஆச்சுன்னா...?
சுந்தர்ராஜன் -  ரகு கண்ணு...மாடிப்படில இறங்கிப் போ...ஏறி வா...லிப்ட் வேண்டாம்....சரியா...வயசானவங்களுக்குத்தான் அது....நீ குட்டிப் பையன்ல...படிலயே போய்ட்டு படிலயே ஏறி வா....சரியா...?
ரகு - சரிப்பா ....   (இரண்டாவது மாடியிலிருந்து கீழே இறங்குகிறான்...)(கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து சொல்கிறான்....அப்பா...பேப்பர் இன்னும் போடலை...எதுத்த ந-3 வீட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாதான் கெடந்தது. 
சுந்தர்ராஜன் - அப்டியா....அதை எடுத்து வந்திட்டேல்ல....?        
ரகு -   அதை  ஏன்ப்பா எடுக்கணும்... அது அவங்க பேப்பர்ல....?             
சுந்தர்ராஜன் - அதனாலென்ன....அவங்களுக்கு ஒரு உதவிதான். கொண்டு வந்து அவங்க வீட்டுக் கதவுல செருகினா முடிஞ்சிது....அவங்க  கதவைத் திறக்கிறபோது எடுத்துக்கிடுவாங்க...அவ்வளவுதானே...! 
கமலா -  இது வேறே ஒரு வேலையா..? நம்ம பேப்பரை நாம போய் எடுத்திட்டு வர்றமாதிரி, அவுங்க பேப்பரை அவங்க வந்து எடுத்துக்கிடுவாங்கல்ல...அதை எதுக்கு அவன     செய்யச் சொல்றீங்க...? உங்களுக்கு வேறே வேலையே இல்ல....பையனுக்கு சொல்லித் தர்றதப் பாரு...?
சுந்தர்ராஜன் - நீ சும்மா இரு....நம்ம பேப்பர எடுக்கப் போகும்போது அவுங்க பேப்பரும் கிடந்திச்சின்னா...அதையும் எடுத்து வந்து அவுங்க வீட்டுக் கதவுல செருகிடணும்...தெரிஞ்சிதா?     
ரகு -  ஏம்ப்பா...அவுங்க பேப்பர எடுத்து வந்துருங்கிறீங்களே...நம்ம பேப்பர அவுங்க பார்த்தா இதே மாதிரி அவுங்களும் செய்வாங்களா?         
கமலா - அதெல்லாம் மாட்டாங்கடா....உங்கப்பாதான் இப்டி ஏதாச்சும் கிறுக்கு மாதிரி பண்ணுவாரு.. 
சுந்தர்ராஜன் - நீ எடுத்திட்டு வந்து செருகு...பிறகு பாரு...அவுங்களும் செய்றாங்களா இல்லையான்னு.... ஒருத்தருக்கொருத்தர் உதவிதான்...
இதெல்லாம் நாம பழகிக்கணும்....
ரகு - சரிப்பா....இனிமே செய்றேன்...அப்போ இப்ப திரும்பப் போயி அதை எடுத்திட்டு வந்திடட்டுமா? 
சுந்தர்ராஜன்- இப்போ வேண்டாம்....நம்ப பேப்பர இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்து போட்டிடுவான்...அப்புறமாப் போயி ரெண்டையும் சேர்த்து எடுத்திட்டு வந்திடு...இப்பப் படி.....
கமலா -...படிக்கிற பயலுக்குக் கொடுக்கிற வேலையைப் பாரு...? - நொடித்துக் கொண்டாள். 
சுந்தர்ராஜன் - (தனக்குள் சிரித்துக் கொண்டார்) குழந்தைகளுக்கு சொல்லித் தர்றதுக்கு  அன்றாட நடப்புல எவ்வளவோ விஷயங்கள் இருக்கு...
அதன் மூலமாத்தான் நல்ல பழக்கங்கள் படியும்...இதை முதல்ல நீ தெரிஞ்சிக்கணும்.....
கமலா - அதுக்காக...? நாமளே செய்துக்கிற வேலைகளை அவனுக்கா இழுத்து விடுறது? ...நியாயமான உதவிகளுக்கே மதிப்பில்ல   இந்தக் காலத்துல....நீங்க வலியப் போய் செய்யச் சொல்றீங்க...?
சுந்தர்ராஜன் - இதிலென்ன தப்புங்கிறேன்...ஒரே அபார்ட்மென்ட்ல இருக்கிற நாம நமக்குள்ளே ஒத்துமையா இல்லன்னா எப்டி? இப்டி சின்னச் சின்னக் காரியங்கள் மூலமாத்தான் அதை மத்தவங்களுக்கு உணர்த்தணுமாக்கும்...ஒரு விஷயத்த சொல்றதவிட செய்து காண்பிக்கிறதுதான் நிக்கும்...நீ வேணும்னாப் பாரேன்....நாளைப் பின்ன என்ன நடக்குதுன்னு....!
கமலா - நடக்கும்...நினைச்சிட்டிருங்க...நம்மள மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா..ஏமாளித்தனமா? 
சுந்தர்ராஜன் - இதுல ஏமாறுறதுக்கு என்ன இருக்கு? கவனமாப் பேசு...குழந்தை மனசுல இதுவெல்லாம் படியும்...குழந்தைகள் முன்னால நாம எப்படிப் பேசணும்ங்கிறது கூட நமக்குத் தெரிஞ்சிருக்கணும்...
எதைப் பேசணும்ங்கிறதும் ரொம்ப முக்கியம்...
 ரகு - அப்பா...அப்பா.......கீழே அந்தப் பையன் சைக்கிள்ல போறான்...பேப்பர் போடுற பையன்....(ஜன்னல் வழி பார்த்தவாறே சொல்கிறான்) போய் எடுத்திட்டு வந்திரட்டுமா?
சுந்தர்ராஜன் - பொறு...பொறு...நானும் வர்றேன்.... (இருவரும் எழுந்து கிளம்புகிறார்கள்)

காட்சி-2 
இடம் - லிப்டின் உள் பக்கம்
மாந்தர் - சுந்தர்ராஜன், ரகு.

ADVERTISEMENT

சுந்தர்ராஜன் - இப்டி உள்ளே நுழைஞ்சவுடனே  பட்டன அழுத்தக் கூடாது. இந்த ரெண்டு கதவையும் நல்ல சாத்திட்டுப் பிறகுதான் அமுத்தணும்...தெரிஞ்சிதா... சரியா சாத்தலேன்னா...லிப்ட் கீழே இறங்காது...அத்தோட சுவிட்சை அழுத்திட்டேன்னு வச்சிக்கோ...டொக்கு...டொக்குன்னு சத்தம் வந்திட்டேயிருக்கும். அதனால வெளிக் கதவு, உட்கதவு ரெண்டையும் கரெக்டா எதிர் ஃப்ரேமோட சேருற மாதிரி சாத்தணும். பிறகு சுவிட்சை ஆன் பண்ணனும்...புரிஞ்சிதா? 
ரகு - சரிப்பா...அன்னிக்கு ஸ்கூல் விட்டு வந்தப்போ இப்டித்தான் உள்ளே மாட்டிக்கிட்டேன்...என்ன தப்புன்னே தெரில...டொக்கு...டொக்குன்னு ஒரே சத்தம்...லிப்டும் ஏறல..சட்டுன்னு கரன்ட்வேறே  போயிடுச்சு.பயந்தே போயிட்டேம்பா...
சுந்தர்ராஜன் - ஆமாமா...அப்போ பாட்டரி ஒர்க் ஆகல...மாற்ற வேண்டியிருந்தது.அந்த நேரம் பார்த்து நீ மாட்டிக்கிட்டே...அப்டி மாட்டிக்கிட்டா பயப்படக்கூடாது. கதவத் தட்டணும்...அத்தோட உள்ளே ஒரு பெல் பட்டன் இருக்குல்ல...இதோ பார்...இதுதான்...இதைத் தொடர்ந்து அமுக்கணும்...சத்தம் கேட்டு ரெண்டு மாடிலர்ந்து யாராச்சும் ஓடி வந்திடுவாங்கல்ல...புரிஞ்சிதா? உள்ளே ஃபேன் ஓடுது...அதனால காற்று இருக்கும்...சட்னு பயந்துக்கக் கூடாது. அப்டி பயந்தோம்னா என்ன செய்யணும்னு மூளை வேலை செய்யாது...தெரிஞ்சிதா? தைரியமா செயல்படணும்...ஓ,கே...
ரகு - சரிப்பா....இனிமே பயப்பட மாட்டேன். நீ சொல்றபடி கவனமா செய்யறேன்.....
சுந்தர்ராஜன் - வா...தரை வந்திடுச்சு....வெளில போலாம்...அந்த பேப்பர் பையனப் பார்ப்போம்....

காட்சி - 3 
இடம் -  அபார்ட்மென்ட் கார் பார்க்கிங் வெராண்டா 
மாந்தர் - சுந்தர்ராஜன், ரகு மற்றும் முருகன்....

சுந்தர்ராஜன் - முருகா...நல்லாயிருக்கியா....நல்லா படிக்கிறியா....?                 
முருகன் - நல்லாயிருக்கேன். சார்...படிக்கத்தான் நேரமே கிடைக்கமாட்டேங்குது...எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு சார்...ஆஸ்பத்திரிச் செலவு வேறே...                    
சுந்தர்ராஜன் - என்ன உடம்புக்கு...? 
முருகன் -என்னான்னே தெரில சார்...ஒரு வாரமா விடாத ஜூரம்...எழுந்திரிக்கவேயில்ல...வெளிலதான் சாப்பாடு வாங்கித் தரேன்...ராத்திரிதான் கண்ணு முழிச்சுப் படிக்கிறேன்...
சுந்தர்ராஜன்- நல்ல பையன்....வெரி குட்...இந்த வயசுல சம்பாதிக்கிறே...உங்கம்மாவக் காப்பாத்துறே...ஸ்கூல் போறே....எப்டியாவது கஷ்டப்பட்டுப் படிச்சு...ப்ளஸ் 2 பாஸ் பண்ணிடு...சரியா...நான் சொன்னது ஞாபகம் இருக்கா....?
முருகன் - இருக்குங்கய்யா...நிச்சயம் நீங்க சொன்னபடி நல்ல மார்க் வாங்கி...கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்யா...
சுந்தர்ராஜன் - ஒரே ஒரு உதவி செய்யணும் நீ...பேப்பரத் தூக்கி வீசாம, இறங்கி வந்து இந்தத் தபால் பெட்டில செருகிடணும்...இல்லன்னா இந்த உ.ஆ. பாக்ஸ் மேல வச்சிடணும்...செய்வியா...?
முருகன் - ஆகட்டுங்கய்யா....
சுந்தர்ராஜன் - குட் பாய்...சரி கிளம்பு. ...உனக்கு நேரமாயிடப் போகுது... 
அவன் செல்வதையே இருவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரகு அப்பாவிடம் கேட்கிறான்.
ரகு - ஏம்ப்பா...அந்தப் பையன்ட்ட நான் சொன்னது ஞாபகமிருக்கான்னு கேட்டீங்களே...என்னது அது?
சுந்தர்ராஜன் - ...அதுவா...? அவன் கஷ்டப்படுற குடும்பத்துல  அப்பா இல்லாம,, அம்மாவையும் காப்பாத்திட்டு, வேலை பார்த்து சம்பாரிச்சு,  ஸ்கூல் போய் படிக்கவும் செய்றான் இல்லையா.... எத்தனையோ பிள்ளைங்க...படிக்க முடியாம, எப்டியெல்லாம் கெட்டுச் சீரழிஞ்சு போயிடுது....இந்தப் பையனோட முயற்சியை மனசுல வச்சு, அவனை ஊக்கப்படுத்துறதுக்காக, நீ 1100 க்கு மேலே மார்க் வாங்கினேன்னா...உனக்கு ரெண்டாயிரம் ரூபா பரிசுன்னு சொல்லியிருக்கேன்...அந்தப் பையன் எப்படியாச்சும் படிச்சு பாஸ் பண்ணிடனும்னு எனக்கு ஆசை. ப்ளஸ் 2 வரைக்கும் வந்திருக்கானே...அது எத்தனை பெரிசு? நாம அவனை வாழ்த்தணுமில்லியா? ஊக்கப்படுத்தறதை வெறும் வாய் வார்த்தையால சொல்றதவிட ஒரு உதவிய செய்து சொன்னா நல்லதில்லையா?  
சொல்லிக் கொண்டே சுந்தர்ராஜன் பையனோடு லிப்ட்டில் நுழைந்தார். அப்பா தோளில் ஏறிக்கொண்ட ரகு..அவரை வியப்போடு கண்கள் விரியப் பார்த்தவாறே இருந்தான். அவர் எதிர்பாராத ஒரு கணத்தில்  கன்னத்தில் பச் சென்று ஒரு முத்தமிட்டு அவரை இறுகக் கட்டிக் கொண்டான். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT