சிறுவர்மணி

அரங்கம்: கரடி ராஜா

3rd Oct 2020 06:00 AM | சூடாமணி சடகோபன்  

ADVERTISEMENT

 

காட்சி : 1
இடம் : முதுமலைக் காடு
நேரம் : காலைப்பொழுது
மாந்தர் : ஆண், பெண் சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், குட்டிக் கரடிகள், யானைகள், மான்கள், குரங்குகள், அணில்கள், சுட்டி முயல்கள், மயில்கள், காட்டெருமைகள், காட்டுப் பூனைகள், ஓநாய்கள், நரிகள், முள்ளம் பன்றிகள், கீரிப்பிள்ளைகள், ஒட்டகச் சிவிங்கிகள், மலைப் பாம்புகள், கொக்குகள், கிளிகள், குயில்கள், குருவிகள், நாரைகள்.


(காட்டின் மத்தியில் இருந்த மைதானத்தில் வன விலங்குகள் வட்ட வடிவமாகக் கூடியிருந்தன. நடுவே இருந்த மேடையில் கரடி ராஜா நின்று கொண்டிருந்தார்).

கரடி ராஜா: தென்னிந்தியாவின் சுந்தர வனக்காடுகள் என அழைக்கப்படும் முதுமலைக்காடுகளின் புதிய ராஜாவாக என்னைத் தேர்வு செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி...!
(ஒரு பெண் சிங்கத்தைத் தவிர) அனைத்து விலங்குகளும் : (சந்தோஷமாக...) கரடி ராஜா வாழ்க...! கரடி ராஜா வாழ்க...வாழ்க...!
(ஆரவாரம் காடு முழுவதும் எதிரொலித்தது - பெண் சிங்கம் மட்டும் வருத்தமாய் இருக்கிறது.)

ஆண் சிங்கம்: எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ மட்டும் ஏன் சோகமாக இருக்கிறாய்...?
பெண் சிங்கம்: காட்டின் தலைவனாக எப்போதும் சிங்கம்தான் இருக்க வேண்டும். கரடியை ராஜாவாக ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை..!
ஆண் சிங்கம்: உருவத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக்
கூடாது... ஸ்ரீராமர் பாலம் கட்டும் போது உருவத்தில் சிறிய அணில் சிறு உதவி செய்ததால் ஸ்ரீராமரின் அன்பைப் பெற்று அழியாத புகழ் பெற்றதை மறக்க முடியுமா...?
இவ்வுலகில் சிங்க பொம்மையை வைத்து விளையாடும் குழந்தைகளை விட... கரடி பொம்மையை வைத்து விளையாடும் குழந்தைகள்தான் அதிகம்... குழந்தைகளின் மனம் கவர்ந்த கரடியால் இந்தக் காட்டுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.... சிலகாலம் பொறுத்திருந்து பார்... கரடி ராஜாவின் சாதனைகளை நீயும் ஒருநாள் பாராட்டத்தான் போகிறாய்...!
பெண் சிங்கம்: அதெல்லாம் நடக்காத காரியம்...! நீதான் ஏமாறப் போகிறாய்....!
ஆண் சிங்கம்: யாருடைய நம்பிக்கை ஜெயிக்கிறது என்று விரைவில் தெரியத்தான் போகிறது...!
பெண் சிங்கம் : (அலட்சியமாக) : பார்க்கலாம்..!

காட்சி : 2
இடம் : காட்டின் நடுப்பகுதி
நேரம் : மாலைப்பொழுது
மாந்தர் : பெண் சிங்கம் தவிர அனைத்து விலங்குகள்

கரடி ராஜா: என் தலைமையில் நடக்கும் முதல் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றி..! காடுகள்தான் நமது புகலிடங்கள். காடுகள் மெலிந்தால் நமக்கு பாதுகாப்பு கிடையாது. அடர்ந்த காடுகளில் உள்ள செடி கொடி மரங்கள் தான் பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும். ஆகவே நாம் அனைவரும் அதிக அளவில் மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பறவையினச் சகோதர சகோதரிகளே, நீங்கள் உண்ணும் பழங்களில் உள்ள விதைக்கழிவுகளை வனத்தில் மரங்கள் இல்லாத இடங்களில் எச்சமிட்டால் அங்கெல்லாம் புதிதாக மரங்கள் முளைக்க ஆரம்பிக்கும். வனங்கள் விரிவடைந்து அதிக புகலிடங்கள் நமக்குக் கிடைக்கும்... மேலும் நிலவேம்பு, கப சுரக் குடிநீர் அருந்தும் வகையில் மூலிகை மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்... அதன் மூலம் கரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்த் தொற்றிலிருந்து நாம் தப்பிக்கலாம்...!

ADVERTISEMENT

பறவைகள்: கரடி ராஜாவே...! அப்படியே செய்கிறோம்..!''

மான்கள்: நமது காட்டில் நீண்ட காலமாக குடிநீர்ப் பஞ்சம் உள்ளது. இதனால் தண்ணீரைத் தேடி ஊருக்குள் செல்லவேண்டியிருக்கிறது... அப்போது நாய்களால் எங்களுக்கு தொல்லைகள் ஏற்படுகின்றன... நாய்க் கடியால் பல மான்கள் பலியாகியுள்ளன. யானை அண்ணாவும் குடிநீர் தேடிச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்தார்...இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும்...!
யானை: சபாஷ்... அருமையான யோசனை..! வனங்களுக்கும் அதில் வசிக்கும் நம்மைப் போன்ற விலங்குகளுக்கும் முக்கிய ஆதாரம் நீர். யானைகளாகிய நாங்கள் நீராதாரங்களைப் பெருக்க உதவி செய்கிறோம். நீராதாரம் பெருகினால் மட்டுமே வனத்தில் நமக்குத் தேவையான குடிநீர், நம் பசி தீர்க்கும் தழைகள், காய்கள் மற்றும் பழங்கள் முதலியவை நமக்குக் கிடைக்கும்...!
குரங்குகள்: சுத்தம் சுகம் தரும்..! வனங்கள் முழுவதையும் நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் என்ற அரக்கனை நாம் விரட்டியடிக்க வேண்டும்...அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம்... இதற்காக வானரத் தொண்டர் படை ஒன்றை உருவாக்கப் போகிறோம்...! ”
கரடி ராஜா (மகிழ்ந்து) : எனதருமை குரங்குமார்களே... உங்களுக்கு என் நன்றி...! நீரின்றி அமையாது உலகு... இதை உணர்ந்து மழைநீரை நாம் சேமிக்க வேண்டும். இதற்காக காட்டுக்குள் குளம், குட்டைகளை உருவாக்க வேண்டும்... இன்று முதல் நாம் கடுமையாக உழைத்தால் இன்னும் ஓராண்டில் நல்ல பலன் கிடைக்கும்... நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்.... காட்டை முன்னேற்றுவோம்....!
அனைத்து விலங்குகளும் : ஆமாம்...! நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்.... காட்டை முன்னேற்றுவோம்....!

 

காட்சி : 3
இடம் : முதுமலைக் காடு
நேரம் : பகல் பொழுது
மாந்தர் : பெண் சிங்கம் தவிர அனைத்து விலங்குகள்

(கோடை காலம் முழுவதும் விலங்குகள் கடுமையாக உழைத்தன. யானைகள் தங்கள் தந்தங்களாலும், காண்டா மிருகங்களும், காட்டெருமைகளும் தங்கள் கொம்புகளாலும் பூமியைக் குத்திக் குழிகளைத் தோண்டின. காட்டுக்குள் பல குளம், குட்டை, கிணறுகள் விரைவில் தோண்டப்பட்டன.
இதனால் மழைக் காலத்தில் நீர் நிரம்பியது. காடு முழுவதும் வளம் கொழித்தது. எங்கு பார்த்தாலும் பசுமை...! காய்களும், கனிகளும் ஏராளமாக விளைந்தன).
யானை: இனி உணவுப் பஞ்சமோ, குடிநீர்ப் பஞ்சமோ ஏற்பட வாய்ப்பே இல்லை..!
அனைத்து விலங்குகளும்: இந்த மகிழ்ச்சியை நாம் பெரிய விழாவாகக் கொண்டாட வேண்டும்...!

 

காட்சி : 4
இடம் : காட்டின் நடுப்பகுதி
நேரம் : மாலைப்பொழுது
மாந்தர் : சமூக விரோதிகள் 12 பேர் மற்றும் அனைத்து விலங்குகள்


(சமூக விரோதிகள் 12 பேர் "மலையேறும் பயிற்சி' என்று பொய் சொல்லி அனுமதி பெற்று காட்டுக்குள் நுழைந்தனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்களும், துப்பாக்கி
களும் இருந்தன - அதை ஒரு குரங்கு கவனிக்கிறது)
குரங்கு : அந்த மர்ம மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடவும், விலை மதிப்பற்ற மரங்களை வெட்டி எடுத்துச் செல்லவும் திட்டமிட்டு வந்துள்ளனர்...!
மான்கள்: ஓ...! அப்படியா..?
(அனைத்து விலங்குகளும் அஞ்சி நடுங்கின..!)

கரடி ராஜா: எல்லா விலங்குகளும் தைரியமாக இருக்க வேண்டும்..! அனைத்துக் கரடிகளும் காட்டைச் சுற்றி மனிதச் சங்கிலி போல், மிருகச் சங்கிலி அமைக்க வேண்டும்..!
கரடிகள்: அப்படியே செய்கிறோம்..!
கரடி ராஜா: நாளை அந்த மர்ம மனிதர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்..!

 

காட்சி : 5
இடம் : சமூக விரோதிகளின் கூடாரம்
நேரம் : இரவுப்பொழுது
மாந்தர் : சமூக விரோதிகள் 12 பேர் மற்றும் அனைத்து விலங்குகள்

கரடி ராஜா: திருடர்கள் கூடாரங்களை அமைத்து அதில் தங்கியுள்ளனர். அவர்கள் யாரும் அறியாதபடி கரடிகளும், குரங்குகளும் கூடாரங்களுக்குள் நுழைந்து, அவர்கள் வைத்திருக்கும் பயங்கர ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட வேண்டும்..!
கரடிகளும் குரங்குகளும் : அப்படியே செய்கிறோம்..!

 

காட்சி : 6
இடம் : ஏரிக்கரை
நேரம் : காலைப்பொழுது
மாந்தர் : சமூக விரோதிகள் 12 பேர் மற்றும் அனைத்து விலங்குகள்


(பொழுது விடிந்தது...! திருடர்கள் ஒவ்வொருவராக எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த குரங்குகள் அவர்களின் ஆடைகளைத் தூக்கிச் சென்றன. அதைக்கண்டு திருடர்கள் அலறினர்)
திருடர்கள்: டேய்... குரங்குகள் நம்மை டிரஸ்ûஸயெல்லாம் தூக்கிட்டு ஓடுது... போய் பிடிங்கடா..!
(திருடர்கள் கரையேறி குரங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடினர். அங்கு திருடர்கள் தாங்கள் குளிர் காய்வதற்காக மூட்டி வைத்திருந்த "கேம்ப் ஃபயரில்' அவர்களது ஆடைகளை குரங்குகள் தூக்கிப் போட்டன. ஆடைகள் எல்லாம் தீயில் கருகின).

திருடன்-1: ச்சே...! எல்லாம் டிரஸ்ஸþம் நாசமாயிடுச்சு..!
திருடர் தலைவன்: போகட்டும்...! குரங்குகளைக் கொன்னுடலாம். நீ போயி சாப்பாடு, துப்பாக்கியெல்லாம் எடுத்து வா... பசிக்கிது..!

 

காட்சி : 7
இடம் : சமூக விரோதிகளின் கூடாரம்
நேரம் : காலைப்பொழுது
மாந்தர் : சமூக விரோதிகள் 12 பேர் மற்றும் அனைத்து விலங்குகள்

 

(கூடாரங்களில் நுழைந்த குரங்குகளும், கரடிகளும் அங்கே இருந்த ஆயுதங்கள், துப்பாக்கிகள், சப்பாத்திகள், ரொட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தன).
திருடன்-1: ஐயோ...! ஐயோ...! எல்லாம் போச்சே..!
திருடர் தலைவன் : (ஆத்திரமாக) அந்த மிருகங்களைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்...!
(பன்னிரண்டு பேரும் ஆளுக்கொரு கல்லைத் தூக்கிக் கொண்டு, விலங்குகளைத் துரத்திக் கொண்டு
ஆவேசமாக ஓடினர். அப்போது பறவைகள் கூக்குரல் இட்டன. உடனே, தேனீக்கள் கூட்டமாக வந்து திருடர்
களைக் கொட்ட ஆரம்பித்தன..! திருடர்கள் வலி
தாங்காமல் துடித்தனர். அப்போது கரடி ராஜா தலைமையில் கூட்டமாக பிளிறியபடி யானைகள் தும்பிக்கையை மேலே தூக்கிக் கொண்டு ஓடிவந்தன).
திருடர்கள்: டேய்... வாங்கடா... உயிர் பிழைச்சா போதும்..! காட்டை விட்டு சீக்கிரமா தப்பியோடனும்..! இந்த மிருகங்கள் கிட்ட மாட்டினா... நாம காலி...!
(அனைவரும் ஓடுவதைப் பார்த்து மிருகங்கள் நிம்மதியடைந்தன).

 

காட்சி : 8
இடம் : காடு
நேரம் : பகல் பொழுது

மாந்தர் : பெண்சிங்கம், ஆண் சிங்கம் மற்றும் அனைத்து விலங்குகள்
பெண் சிங்கம் : நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அறிந்தேன். காட்டுக்கு ராஜாவாக இருக்கும் தகுதியை கரடி ராஜா பலவகையிலும் நிரூபித்துக் காட்டிவிட்டார். கரடி ராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும்... அதற்கு நானே தலைமை தாங்கி, காட்டின் நலனுக்காக உழைத்த அனைவருக்கும் பரிசு வழங்க விரும்புகிறேன்..!
(பெண் சிங்கத்தின் மன மாற்றத்தைக் கண்டு ஆண் சிங்கம் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தது).

 

காட்சி : 9
இடம் : காட்டின் நடுப்பகுதி
நேரம் : பகல் பொழுது
மாந்தர் : பெண்சிங்கம், ஆண் சிங்கம் மற்றும் அனைத்து விலங்குகள்

(கரடி ராஜாவுக்கு பாராட்டு விழா பெண்சிங்கம் தலைமையில் நடைபெற்றது. விழாவைச் சிறப்பிக்க, மயில்கள் தோகை விரித்து, ஆனந்த நடனம் புரிந்து அனைவரையும் மகிழ்வித்தன. குரங்குகள் சேட்டைகள் செய்து அனைவரையும் சிரிக்க வைத்தன. குயில்கள் கானம் பாட, யானைகள் கூட்டமாக பிளிர்ந்து, ஜம்போ நடனம் புரிய, அனைத்து விலங்குகளும் சேர்ந்து வன கீதம் இசைத்தன.
திரை -

(அக்டோபர் - 4 - உலக விலங்குகள் தினம்)

ADVERTISEMENT
ADVERTISEMENT