சிறுவர்மணி

இசை!

க.சங்கர்

காட்சி : 1
இடம் : அரண்மனை / உப்பரிகை
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : சித்திரவேந்தர்

முன்னிரவு :மன்னர் சித்திரவேந்தர் உறக்கம் வராமல் எழுந்து உலவுகிறார். உப்பரிகையில் நிற்கிறார்.
நள்ளிரவு :தெற்குதிசையிலிருந்து புல்லாங்குழல் இசை கேட்கிறது. சித்திரவேந்தர் மெய் மறந்து கேட்கிறார்.
பின்னிரவு :
குழலோசை முடிவடைகிறது.
மன்னரின் முகம் மகிழ்ச்சி நிரம்பியதாகத் தெரிகிறது.

காட்சி : 2
இடம் : அரசவை / மாலைக் கூட்டம்
நேரம் : மாலை
மாந்தர் : கவிராயர், சித்திரவேந்தர், அரசவையினர் .

(கவிராயர் புல்லாங்குழலை வாசித்துவிட்டுக் கீழே இறக்குகிறார்.)

சித்திரவேந்தர் : ( மகிழ்ச்சியுடன் ) பலே, பலே! அற்புதம்.. அருமை ..
(அரசவையினர் அனைவரும் கைதட்டி
முடிக்கிறார்கள்.)

கவிராயர் : ( பரவசத்துடன் ) நன்றி, மன்னா .. அனைவருக்கும் நன்றி.. நன்றி..
சித்திரவேந்தர் : கவிராயா.. நம் குதிரைலாயத்தில் வேலைசெய்பவரால் அவ்வளவு சிறப்பாக வாசித்திருக்க முடியுமா என்ற சந்தேகம் தீர்ந்தது.. நீ சிறப்பாகவே வாசிக்கிறாய்..
கவிராயர் : எல்லாம் இறைவனது கருணை, அரசே..
சித்திரவேந்தர் : உமது இசைக்குழல் வித்தியாசமாக இருக்கிறதே, அதை எங்கே வாங்கினாய் ?
கவிராயர் : வேந்தே, இதை நான் எங்கிருந்தும் வாங்கவில்லை. குதிரைகள் மேயும் இடத்தினருகே இருக்கும் ஒரு மூங்கில் காட்டிலிருந்து எடுத்தேன்..
இயற்கை அன்னையே வடிவமைத்திருந்தாள்..
(மன்னர் சித்திரவேந்தர் புன்னகை புரிகிறார்.)

காட்சி : 3
இடம் : அரண்மனை
நேரம் : இரவு
மாந்தர் : அமைச்சர்கள், சித்திரவேந்தர்

(மூன்று அமைச்சர்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக இருக்கிறார்கள்.)

சித்திரவேந்தர் : (புரியாமல்) அமைச்சர்களே.. என்ன ஆயிற்று? கவிராயரை நம் அரசவை இசைஞராக வைத்துக்கொள்வதில் ஏதாவது தவறு நேர்ந்துவிடும் என பயப்படுகிறீர்களா ?
அமைச்சர் 1 : ( தயங்கி ) ஆம், மன்னா.. இது இவ்வளவு சுலபமாக எடுக்கக்கூடிய முடிவல்ல..
சித்திரவேந்தர் : (குழப்பமாக) ஏன் ?
அமைச்சர் 2 : அரசே, உங்களுக்கென்று நல்ல வரலாறு எழுதப்பட்டு வருகிறது.. "கவிராயர்' அதைக் கெடுத்துவிட்டால்..?
சித்திரவேந்தர் : புரியவில்லை..
அமைச்சர் 3 : மன்னா, அரசாங்க இசைக்கலைஞர் என்றால் உள்நாட்டு விழா, வழிபாட்டு வேளை, விருந்தினர் உபசரிப்பு, துக்க அனுசரிப்பு என பலவகை நிகழ்வுகளில் இசைத்திட வேண்டும்..
அமைச்சர் 1 : அவற்றிற்குத் தேவைப்படும் வல்லமை இவரிடம் இல்லாவிட்டால் சரித்திரத்தில் நம் அரசாங்கம் பழிக்கப்படலாம் அல்லவா ?
சித்திரவேந்தர் : (அமைதியாக யோசித்துவிட்டு) சரி, அதற்கு என்ன செய்யச் சொல்கிறீர்கள் ?
அமைச்சர் 2 : கவிராயருக்கு நம் இசை வித்வான்களை வைத்துப் பயிற்சி அளிப்போம்.. அதன் முடிவில் அவரைச் சோதனைக்கு உட்படுத்துவோம்.. அவர் தேறிவிட்டால் உங்கள் விருப்பப்படியே செய்துவிடலாம்..
(மன்னர் சித்திரவேந்தர் தலையசைக்கிறார்.)

காட்சி : 4
இடம் : அரண்மனை / தோட்டம்
நேரம் : காலை
மாந்தர் : சித்திரவேந்தர், கவிராயர்

கவிராயர் : (அங்கே வந்து) மன்னரே, தாங்கள் வரச்சொன்னதாகச் செய்தி கிடைத்தது..
சித்திரவேந்தர் : ஆம், கவிராயரே..
உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.. எங்கே இசை பயின்றீர்கள் ?
கவிராயர் : அப்படி எதுவும் இல்லை, வேந்தே .. எனக்குத் தோன்றுவதை வாசிக்கிறேன் ..
(சித்திரவேந்தர் அமைதியாகப் பார்க்கிறார்.)

கவிராயர் : அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை மேய்ச்சல் நிலத்தில் இருக்கிறேன்.. மகிழ்ச்சி, வியப்பு, சோகம், நகைப்பு என குதிரைகள் எனக்கு வெவ்வேறு உணர்வுகளைக் கொடுக்கின்றன.. அதை அப்படியே வாசிக்கிறேன், மன்னா..
சித்திரவேந்தர் : ( சந்தேகமாக ) இந்த மூங்கில்குழல் தவிர வேறு என்னென்ன கருவிகளை வாசிப்பீர்கள் ?
கவிராயர் : (திடமாக) எதுவும் இல்லை, அரசே..
சித்திரவேந்தர் : ம்ம்ம்.. நாளை முதல் நீங்கள் லாயத்திற்குச் செல்ல வேண்டாம்.. மண்டபத்திற்கு வாருங்கள்.. வெவ்வேறு இசைக்கருவிகளில் பயிற்சி பெறுங்கள்..
கவிராயர் : (மிகவும் தயங்கி) மன்னிக்க வேண்டுகிறேன், மன்னா.. எனக்கு எதற்கு இதெல்லாம் ?
சித்திரவேந்தர் : இதில் நீங்கள் தேர்ச்சியுற்றால் நிரந்தர அரசவை இசைஞர் ஆகிவிடுவீர்கள்..
(கவிராயர் அமைதியாகப் பார்க்கிறார்.)

காட்சி : 5
இடம் : கலை மண்டபம்
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : இசை ஆசிரியர், கவிராயர்

முதல் மாதம் :
இசை ஆசிரியர் யாழ் மீட்டுகிறார்.
கவிராயர் கவனமாகப் பார்க்கிறார்.
நான்காம் மாதம் :
கவிராயர் வீணை வாசிக்கிறார்.
ஆசிரியர் திருத்தங்கள் சொல்கிறார்.
எட்டாம் மாதம் :
கவிராயர் பாடல் பாடி முடிக்கிறார்.
ஆசிரியரின் முகத்தில் அதிருப்தி தெரிகிறது.

காட்சி : 6
இடம் : அரசவை / மாலைக் கூட்டம்
நேரம் : பத்தாவது மாதம் / மாலை
மாந்தர் : சித்திரவேந்தர், கலை ஆசிரியர்கள் , கவிராயர்

சித்திரவேந்தர்: சோதனை முறைகள் தொடங்
கட்டும்..
கலை ஆசிரியர் 1 : உச்சிவேளை; தென்றல் தழுவும்பொழுதுஒரு நாதம் இசைக்க வேண்டும்..
(கவிராயர் யாழ் மீட்டுகிறார்.)

கலை ஆசிரியர் 2 : மாலைப் பொழுது ; மிகவும் மங்களகரமான நாள் ; அனைவரும் உள்ளம் உருகிப்போகும் விதத்தில் இசைச்சரம் ஒன்றைத் தொடுக்கவேண்டும்..
(சிறிது தயங்கி வீணையை மீட்டத் தொடங்குகிறார் கவிராயர்.)

கலை ஆசிரியர் 3 : நூறுநாள் போர்முடிந்து வெற்றிவாகை சூடி வீறுநடை போட்டு வரும் நம் வீரசிங்க அரசரைப் போற்றிப் பாடுதல் வேண்டும்..
(கவிராயர் பாடுகிறார்.)

கவிராயர் : ஆஆ. . ஆஆ ஆ..
(சித்திரவேந்தர் அமைதியாகக் கவனிக்கிறார்.)

காட்சி : 7
இடம் : கவிராயரின் வீடு / அறை
நேரம் : இரவு
மாந்தர் : கவிராயர், சித்திரவேந்தர்

(கவிராயர் புரண்டு படுக்கையில் கண்விழிக்கிறார்.)

கவிராயர் : (அதிர்ந்து) மன்னா, நீங்கள்.. நீங்கள் .. இங்கே.. இங்கே..
சித்திரவேந்தர் : (வருத்தமாக) சோதனையில் நீங்கள் தோல்வியுற்றுவிட்டீர்கள், கவிராயரே.. உங்களை நிராகரிக்கும்படி ஆகிவிட்டது..
(கவிராயரிடம் புன்னகை தோன்றுகிறது.)

சித்திரவேந்தர் : ( வியப்பாக ) அரசவை இசைஞர் ஆகமுடியாததில் உங்களுக்கு வருத்தமில்லையா ?
கவிராயர் : மன்னியுங்கள், அரசரே.. நான் தேர்வு
பெறாமல் போக வேண்டும் என்றே நினைத்துக்
கொண்டிருந்தேன்..
சித்திரவேந்தர் : (அதிர்ச்சியில்) ஏன் ?
கவிராயர் : வேந்தே, எனக்கு இந்தக் குதிரைகளுடன் இருப்பதுதான் உத்வேகம் கொடுக்கிறது.. அவை உணர்வுகளைக் கொடுக்கின்றன, நான் அவற்றைத்தாம் நாதங்களாக இசைக்கிறேன்..
(சித்திரவேந்தர் அமைதியாக கவனிக்கிறார்.)

கவிராயர் : அரண்மனையில் அப்படியான உணர்வுகளை உருவாக்க முடியவில்லை.. என்னால் முடியவும் முடியாது.. எனவே, இயந்திரம்போல் வாசித்து வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை, மன்னா..
சித்திரவேந்தர் : தேர்வில் தோற்றுவிட்டீர்கள்.. இனி உங்கள் எதிர்காலத்திற்குப் பாதை இல்லாமல் போய்விடாதா ?
கவிராயர் : இந்தத் தேர்வில் நான் தேர்ச்சிபெறாததால் என் எதிர்காலம் ஒருபோதும் பாதிக்கப்படாது.. பயிற்சியின் மூலம் பெற்ற அறிவை மேலும் கூராக்கி இதைவிடப் பெரிய வாய்ப்பில் நிச்சயம் வெற்றி கண்டிடுவேன்.. என்னிடம் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது, மன்னா..
சித்திரவேந்தர் : ( உறுதியாக ) உண்மை.. உண்மை.. உங்களைப் போல் மனம் தளராமல் இருப்பவர்கள்தான் எண்ணற்ற சாதனைகள் படைக்கிறார்கள்.. வாழ்க உம் திறம்..
(கவிராயர், மன்னரை வணங்குகிறார்.)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT