சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: சர்க்கரை நோய் விரட்டி  - தேன் பழம் மரம்

28th Nov 2020 04:48 PM | - பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

குழந்தைகளே நலமா? 

நான் தான் தேன் பழம் மரம்  பேசறேன்.  எனது தாவரவியல் பெயர் மண்டின்ஜியாகளாபரா  என்பதாகும். நான் மண்டின்ஜியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனக்கு சிங்கப்பூர் செர்ரி, ஜமாய்கர் செர்ரி, பனாமா பெர்ரி, பஜெல்லி ட்ரீ, ஸ்டிராபெர்ரி ட்ரீ, சர்க்கரை பழ மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு.  என் தாயகம் மெக்சிகோ. என் மரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள், கனிகள், வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயம், எலும்பு, புற்று நோய், வயிற்று நோய்களைத் தீர்க்கும் வல்லமை என்னிடமிருக்கு. 

கரீபியர், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் நான் அதிகம் காணப்படுகிறேன்.  நான் 7 முதல் 12 மீட்டர் வரை உயரமுடைய கிளைகள் கொண்ட ஒரு சிறிய மரமாவேன்.  என் பழங்கள் சிவப்பு, இளமஞ்சள் நிறத்தில் இளந்தோலுடன் இருக்கும்.  இதன் சுவை அத்தி பழத்திலுள்ளது போலிருந்து, நூற்றுக்கணக்கில் சிறு விதைகளைக் கொண்டிருக்கும்.   என் பழங்கள் நீங்கள் உண்ணத் தகுந்தது.  அது இனிப்பான சாற்றைக் கொண்டிருக்கும்.  என் பழங்கள் செர்ரி போன்று சிவந்த நிறத்திலிருக்கும். சாப்பிடும் போது தேனை போல சுவைத் தரும். என் பழங்கள் சர்க்கரை நோய்க்கு அருமருந்து.

ADVERTISEMENT

என் இலைகளைப் பயன்படுத்தி வயிற்று வலி, மூட்டுவலி, புற்று நோய் போன்ற நோய்களைக்  குணப்படுத்தும்  மருந்துகளைத் தயாரிக்கிறாங்க.   என் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வந்தால் வயிற்று வலி ஓடிப் போய் விடும்.  இது தலைவலி, காய்ச்சலுக்கும் அதிஅற்புதமான மருந்து. 

என் பழங்களுடன், சீரகம் கலந்து நீரில் கொதிக்க விட்டு, ஆறிய பின்பு வடிக்கட்டி காலை, மாலை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறைவதுடன், இரத்தத்திலுள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் குறையும்.  இதிலுள்ள நார்ச்சத்து உங்களுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

குழைந்தைகளே, என்னை எரிபொருளாகவும், சிறிய கட்டட வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.  என்னிடம் நார்ச்சத்து உள்ளதால் என் தண்டு கயிறு திரிக்கப் பயன்படுது. என் பழங்களை ஜாம் செய்து சாப்பிடலாம். இது மூச்சு கோளாறுகளைப் போக்கும். இதில் வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம், நீர்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. என் பழங்களை பறவைகள் விரும்பி உண்பாங்க.  அவங்க என்னைத் தேடி வருவாங்க. நான் அறுபது வகையான பறவைகள் மற்றும் சிறு விலங்களுக்குப் புகலிடமாக இருக்கிறேன் என்பதை பெருமையாக இங்கு சொல்ல விரும்புகிறேன். 

என் பழத்தைப் பயன்படுத்தி உயர் இரத்தத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.  எப்படின்னா, இது ரத்தத்திலிருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை குறைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.   இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தால், உடம்பு பலம் பெறும்.  அதனால் தலைவலி, குடல்புண் நீங்கும். என் பழத்தில் வைட்டமின் சி, பி, இரும்பு. தாதுக்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் அடங்கியுள்ளன.  இது தலைவலி, சளி, ப்ளு, காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தக் கூடியது.  மேலும் குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.  

வெளிநாட்டினர் என் இலைகளை பொடி செய்து தேநீராக அருந்துகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  விளையாட்டு வீரர்கள் என் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு ஆற்றலும், ஊக்கமும் பெருகும். 

குழந்தைகளே, மரங்கள் இருக்குமிடம்  மகிழ்ச்சி நிலைக்குமிடம்.  மரங்களை நடுங்கள், வறட்சியைப் போக்குங்கள், மழையைப் பெறுங்கள்.  மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

 (வளருவேன்)

ADVERTISEMENT
ADVERTISEMENT