சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: கால்நடைகளின் நண்பன்- சூபாபுல்  மரம்

பா.இராதாகிருஷ்ணன்

குழந்தைகளே நலமா?

நான்  தான் சூபாபுல்  மரம்  பேசறேன். எனது தாவரவியல் பெயர்  லியூசினா லியூகோசெபலா என்பதாகும். நான்   பேபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சவுண்டல், பாபுல்  என்ற வேறு பெயரும் இருக்கு. எனது தாயகம் மெக்சிகோ.  நீங்கள் அதிகம் அறியப்படாத மரங்களில் நானும் ஒருவன்.  நான் எவ்வகை மண்ணிலும் வளரும் தன்மையன். ஆண்டு முழுவதும் பசுந்தீவன விளைச்சலை தரும் மரம் நான்.  நான் ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு 40 டன்கள் வரை கால்நடைகளுக்குத்  தீவனம் கொடுப்பேன்.  என் இலை, மொட்டு, சிறுசிறு கிளைகள் போன்ற அனைத்து பாகங்களும் கால்நடைகளுக்குத் தீவனமாகும். 

என் வேர் மண்ணில் பரவலாக ஊடுருவும் என்பதால் மண் அரிப்பை நான் தடுப்பேன். ஆண்டு முழுவதும் பசுந்தீவன விளைச்சலைத் தருவேன்.  மழை குறைவான வறண்ட பகுதிகளிலும் என்னை வளர்த்து நீங்கள் பயன் பல பெறலாம். ஆனால், நான் அமில நிலம் மற்றும் வடிகால் வசதி இல்லாத நிலங்களில் வளர மாட்டேன்.  என் இலைகள் கூட்டிலை அமைப்பிலிருக்கும்.  

உலக அளவில் கால்நடை தீவனங்களில் நான் முதன்மையானவன். என்னை தீவன மரங்களின் ராஜா என்றும் சொல்வாங்க.  என் பூக்கள் பசுமையும், வெண்மையும் கலந்த பந்துகள் போல இருக்கும்.     எங்கிட்ட குறைவான மைமோசின், டானின் உள்ளது. அதிக புரதச் சத்து இருக்கு. சில்லிடப் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறனை நான் கொண்டிருக்கிறேன்.

பசுந்தீவனமாகவும், உரமாகவும், விறகிற்காகவும் என்னைப் பயன்படுத்தலாம். 

நான் உலக அளவில் பிரசித்தி பெற்றவன். ஏன் தெரியுமா? நான் வாயில்லா ஜீவன்களாகிய நம் கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தைத் தருகிறேன். அவர்களின் நண்பன் நான்.  இந்தோனேசியாவில் பால் உற்பத்தி அதிகம். ஏன்னா அந்நாட்டு மக்கள் கால்நடைகளுக்கு என் இலைகளைத் தான் தீவனமாகக் கொடுக்கிறார்கள்.  என் மரப்பட்டைகளை காகிதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். அதுமட்டுமா? ரேயான் துணிகள் நெய்யவும் என் மரப்பட்டைகளைப் பயன்படுத்தறாங்க. நான் மிகவும் வேகமாக வளருவேன்.  மூன்று ஆண்டுகளிலேயே நான் 20 அடி உயர்த்தை எட்டிப் பிடிப்பேன். 

காற்று மண்டலத்திலுள்ள அசுத்தக் காற்றை நீக்கி, அதாவது நான் உறிஞ்சி உங்களுக்கு நல்ல காற்றைத் தருவேன். பழமரத் தோப்புகளில் என்னை காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கலாம்.  வியட்நாம் நாட்டு மக்கள் என் இலைகளை பசுந்தழை உரமாகவும், உலர்தழை உரமாகவும் பயன்படுத்தி பயிர் விளைச்சலை அதிகரிக்கிறார்கள்.  காரணம், இதில் நைட்ரஜன், பொட்டாஷ் போன்ற உரச்சத்துகள் உள்ளன. அங்கு விவசாயிகள் பல பயிர்களுக்கு தழை உரமாக என் இலைகளைத் தான்  பயன்படுத்திக்கிட்டு வராங்க.  அது மட்டுமா? அந்நாட்டு மக்களின் தெய்வீக மரமும் நான் தான். 

உங்களுக்குத் தெரியுமா? என் உலர்ந்த இலைகளை மக்காச்சோளம் பயிருக்கு அடி உரமாகவும், மேலுரமாகவும் இடும்போது, மகசூல் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறதாமே? கால்நடைகளை கவலையில்லாமல் வளர்க்க வேண்டுமா, என்னை நடுங்க, நான் வெட்ட வெட்ட பலன் தருவேன். குளிர்காலங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறையும், கோடைக்காலங்களில் 90 நாட்களுக்கு ஒரு முறையும் தழைக்க வெட்டலாம். அதனால் இலைகள் பசுமையாக வளரும். 

கால்நடை வளர்த்தால் தான் விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம். கால்நடைகளை சேர்க்காமல் செய்யும் விவசாயத்தால் நல்ல லாபம் கிட்டாது.  கால்நடைகள் வளர்க்க உறுதுணையான பல தீவன மரங்களை வளர்ப்பது உங்கள் கடமை.  மரம் பல வளர்ப்போம். நலம் பல பெறுவோம். பசுமை பாரதத்தை உருவாக்குவோம். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

 (வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT